tamilnadu

img

இந்நாள் மார்ச் 25 இதற்கு முன்னால்

1957 - ரோம் ஒப்பந்தம் என்று குறிப்பி டப்படும், ‘ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தை நிறுவும் ஒப்பந்தம்’, பிரான்ஸ், இத்தாலி, மேற்கு ஜெர்மனி, பெனலக்ஸ் (பெல்ஜி யம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க்) ஆகிய நாடுகளி டையே ரோமில் உருவானது. 1990களில் உருவான ‘ஐரோப்பிய ஒன்றியத்தின்’ அடிப்படையான இரண்டு செயல்பாட்டு ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று. (மற்றொன்று, 1993ல் நெதர்லாந்தின் மாஸ்ட்ரிக்ட்-இல் கையெழுத்திடப்பட்ட ‘ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்’.) அனைத்துத் தொழில்களுடன், போர்க்கருவிகளுக்கும்கூட அடிப்படையாக இருந்த மூலப்பொருட்களாக அன்று நிலக்கரியும், எஃகும் விளங்கின. அதனால், பிரெஞ்சு, மேற்கு ஜெர்மானிய நிலக்கரி, எஃகு உற்பத்தியை ஒன்றி ணைப்பதால் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்பதுடன், அந்நாடுகளுக்கிடையே போருக்கான வாய்ப்பும் அற்றுப்போகும் என்ற நோக்கில், ஐரோப்பிய நிலக்கரி, எஃகு சமூகம் என்ற ஒப்பந்தம் 1951இலேயே ஏற்படுத்தப்பட்டிருந்தது.

ஐரோப்பிய நாடுகளிடையே சுங்க வரிகளைக் குறைப்பது, ஒரு சுங்க ஒன்றியத்தை உருவாக்குவது ஆகியவற்றின்மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைவது ரோம் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சரக்குகள், தொழி லாளர்கள், மூலதனம், சேவைகள் ஆகியவற்றிற்கு, இந்த ஒப்பந்த நாடுகளி டையே ஒற்றைச் சந்தையை உருவாக்குவதுடன், பொதுவான விவசாயக் கொள்கை, பொதுவான போக்குவரத்துக் கொள்கை, ஐரோப்பிய சமுதாய நிதி ஆகியவற்றை முன்மொழிந்த இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஆணையம் ஒன்றையும் உருவாக்கியது. உண்மையில், யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா-போல, யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் யூரோப் என்பதை உருவாக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் நீண்டகால நோக்கமாக இருந்தது.

1952இலேயே உருவாக்கப்பட்டிருந்த, ஐரோப்பிய நாடாளுமன்றம் என்ற கூட்டு அவை, ஐரோப்பிய பாதுகாப்புச் சமூகம், ஐரோப்பிய அரசியல் சமூகம் என்ற ஒப்பந்தங்களையும் இதற்காக முன்மொழிந்தது. ஆனால், அரசியல் ஒருங்கிணைப்பை பிரான்ஸ் நிராகரித்தது. புதிதாக உருவாகியிருந்த எரிசக்தி மூலப்பொருளான அணுசக்தியைப் பயன்படுத்துவதிலும் ஒற்றைச் சந்தையை உருவாக்குவதிலும் பிரான்சுக்குத் தயக்கமிருந்தாலும், பிற நாடுகள் அதில் உறுதியாக இருந்த நிலையில், 1955இல், பெல்ஜியத்தின் பால்-ஹென்றி ஸ்பாக் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஐரோப்பிய அணுசக்தியின் பொதுவான  சந்தைக்கான அரசுகளுக்கிடையேயான மாநாடு 1956இல் நடக்க, ஸ்பாக் குழுவின் அறிக்கை அடிப்படையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஏற்கப்பட்ட ரோம் ஒப்பந்தம், பல்வேறு திருத்தங்களுடன், இன்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகமுக்கியமான ஒப்பந்தமாக விளங்குகிறது.

- அறிவுக்கடல்

;