tamilnadu

img

இந்நாள் பிப். 21 இதற்கு முன்னால்

1848 - உலக வரலாற்றில் மிக அதிகத் தாக்கம் ஏற்படுத்திய அரசியல் ஆவணம் என்று குறிப்பிடப்படும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, லண்டனில், தொழிலாளர்கள் கல்விக் கழகத்தால், பெயர் குறிப்பிடப்படாமல் ஜெர்மன் மொழியில் வெளி யிடப்பட்டது. 1847இல் லண்டனில் தொடங்கப்பட்ட, உலகின் முதல் மார்க்சிய அரசியல் கட்சியான, கம்யூ னிஸ்ட் லீக்  அமைப்பிற்காக, கார்ல் மார்க்சும், பிரடரிக் ஏங்கெல்சும் இதனை எழுதினர். 1836இலேயே தொடங்கப்பட்டிருந்த ‘லீக் ஆஃப் ஜஸ்ட்டிஸ்’ என்ற, கிறித்தவக் கம்யூனிச அமைப்பில் மார்க்சும், ஏங்கெல்சும் 1847இன் தொடக்கத்தில் இணைந்தனர்.

கிறித்தவக் கம்யூனிசம் என்பது, சமய நெறிகளுக்குட்பட்டு, உடைமை கம்யூன்களிடம் இருக்கும்படியான சமயக் கம்யூனிசம் என்ற பண்டைய முறையைச் சேர்ந்ததாகும். மார்க்சும், ஏங்கெல்சும் இந்த அமைப்பினை, தங்களது கருத்துகளை ஏற்கச் செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் நடத்திவந்த ‘கம்யூனிஸ்ட் கரஸ்ப்பாண்டன்ஸ் கமிட்டி ஆஃப் பிரஸல்ஸ்’ என்பதையும் இணைத்துக்கொண்டு, 1847 ஜூன் 1இல் இது கம்யூனிஸ்ட் லீகாக மாறியது. லீகின் பாரிஸ் கிளைக்காக எழுதப்பட்ட ஒரு முழுமைபெறாத அறிக்கையை ஏங்கெல்ஸ் மறுத்த நிலையில், அதை எழுதும் பணி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. அதற்காக, 25 கேள்வி-பதில்களைக் கொண்ட ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ப்ரின்சிப்பல்ஸ் ஆஃப் கம்யூனிசம்)’ என்பதை 1847 நவம்பரில் ஏங்கெல்ஸ் எழுதினார். நவம்பர் இறுதியில் நடைபெற்ற, லீகின் இரண்டாவது காங்கிரசில், லீகிற்கான அறிக்கையை எழுதும் பணி மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை இருவரும் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டாலும், ‘அறிக்கை முழுவதும் காணப்படும் சிந்தனைகள் முழுமையாக மார்க்சினுடையவை’ என்று 1883இல் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், கம்யூனிசத்தின் கோட்பாடுகளில் இடம் பெற்றுள்ளவற்றின் சாயல்களால், ஏங்கெல்ஸ் அடக்கத்துடன் அவ்வாறு குறிப்பிட்டதாகக் கொள்ளலாம். 1850வரை ஆங்கில மொழிபெயர்ப்புகூட செய்யப்படாத இந்த அறிக்கைதான், இன்று, உலகில் மிக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியல் ஆவணமாகத் திகழ்கிறது. அமெரிக்காவை அடையவே கால்நூற்றாண்டு ஆன (1872) இதுதான், 20ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடனேயே பரவி, 1950களில் உலக மக்கள்தொகையில் பாதி, கம்யூனிசத்தைக் கோட்பாடாகக்கொண்ட ஆட்சிகளின்கீழ் இருக்கும்படியான மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. இன்றைய சிக்கல்களுக்கான தீர்வுக்காக உலகமே தேடிப் படிக்கும் ஆவணங்களாக விளங்கும் கம்யூனிஸ்ட் அறிக்கையையும், மூலதனம் நூலையும், ‘உலகின் நினைவு திட்டத்தில்’ யுனெஸ்கோ பாதுகாக்கிறது.

அறிவுக்கடல்

;