tamilnadu

img

இந்நாள் பிப். 08 இதற்கு முன்னால்

1918 - சோவியத் புரட்சிக்குமுன் ஜார் அரசு வாங்கியிருந்த அனைத்து அந்நியக் கடன்களையும் ரத்து செய்வதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது! விவசாயம் சார்ந்த நிலவுடைமைப் பொருளாதார அமைப்பாகவே இருந்த ரஷ்யா, பொருளாதார வளர்ச்சிக்காக, 19ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கு மாறவேண்டியது அவசியமாகியது. இதற்காக ரஷ்ய அரசு ஏராளமான கடன்களை வாங்கியது. 1913 வாக்கில், ரஷ்ய அரசின் மொத்தக் கடனில் 49.7 சதவீதம் அந்நியக் கடனாக இருந்தது. ரஷ்யாவிலிருந்த கிட்டத்தட்ட அனைத்து எண்ணெய்க் கிணறுகள், 90 சதவீத சுரங்கங்கள், 50 சதவீத பிற தொழில்கள் அந்நிய முதலீட்டாளர்களுக்கே சொந்தமாக இருந்தன. ரஷ்ய அரசின் அந்நியக் கடனே, உலகின் மிகப்பெரியதாக இருந்தது.

அதில் சுமார் 80 சதவீதத்தை பிரான்சும், 14 சதவீதத்தை இங்கிலாந்தும் அளித்திருந்தன. முதல் உலகப்போர்க் காலத்தில் மட்டும், போர்ச்செலவுகளால், இந்தக் கடன் மூன்றரை மடங்காக வளர்ந்துவிட்டிருந்தது. போரில் சுமார் 15 லட்சம் பொதுமக்கள் உட்பட 33 லட்சம் ரஷ்யர்கள் உயிரிழந்தது, கடனுடன் சேர்த்து கடும் நெருக்கடியை உருவாக்கியதால், ஜார் இரண்டாம் நிக்கோலஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து உருவான இடைக்கால ரஷ்ய அரசும், போருக்காகத் தொடர்ந்து கடன்களை வாங்கியது. அடுத்த 8 மாதங்களில் புரட்சி நடைபெற்று, சோவியத் உருவானபோது, கடன் 430 கோடி பவுண்டுகளுக்கும் அதிகமாக (தற்போதைய இந்திய ரூபாயில் சுமார் 28 லட்சம் கோடி!) ஆகியிருந்தது!

இந்நிலையில்தான், முந்தைய ரஷ்ய (ஜார், இடைக்கால) அரசுகள் வழங்கியிருந்த அனைத்துக் கடன் பத்திரங்களையும் சோவியத் அரசு ரத்து செய்தது. ரஷ்யாவிலிருந்த அனைத்து வங்கிகள், தொழில்கள், நிலம் ஆகியவை நாட்டுடைமையாக்கப்பட்டதுடன், அந்நியர்களுக்குச் சொந்தமான சொத்துகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. ஜார் அரசினால் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருந்த நிலையில்தான் புரட்சியே ஏற்பட்டது என்பதால், அதன் கடன்களைத் திருப்பித்தருவது சாத்தியமற்றதாகவே இருந்தாலும், அதையும் சாக்காக்கிக்கொண்டு, முதலாளித்துவ நாடுகள், போல்ஷ்விக்குகளுக்கு எதிராகப் போராடியவர்களுக்கு உதவின.  சோவியத் ஒன்றியம் சிதறுண்டபின் உருவான புதிய ரஷ்ய அரசு, சோவியத் ஒன்றியத்தின் அந்நியக் கடன்களைத் திருப்பித்தர ஒப்புக்கொண்டபோது, ரஷ்ய ஜார் அரசுக்கு மிக அதிகக் கடன்களை வழங்கியிருந்த பிரான்ஸ், அக்கடன்களை ரத்து செய்வதாக ஒப்புக்கொண்டது!

- அறிவுக்கடல்

;