tamilnadu

img

இந்நாள் பிப். 22 இதற்கு முன்னால்

1946 - சோவியத்துக்கான அமெரிக்கத் தூதுக்குழுவின் துணைத்தலைவர் ஜார்ஜ் கென்னன், மாஸ்கோவிலிருந்து, சோவியத்தின் அணுகுமுறைகள் குறித்து, ‘நீளத் தந்தி’ என்று குறிப்பிடப்படும், சுமார் எட்டாயிரம் சொற்கள் (படத்தில் உள்ளதுபோல 19 பக்கங்கள்!)கொண்ட மிகநீண்ட தந்தியை அனுப்பினார். அவ்வளவு பெரிய செய்தியைத் தந்தியாக அனுப்பி சிரமத்தை ஏற்படுத்துவதற்கு மன்னிப்பும் கோரியிருந்த அவர், செய்தியின் அவசரம் கருதி தந்தியாக அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இரண்டாம் உலகப்போரில், நாஜி ஜெர்மனியை வீழ்த்துவதில் மிகமுக்கிய கூட்டணி நாடாக இருந்த சோவியத்தின் உறவை அமெரிக்கா முக்கியமானதாகக் கருதினாலும், சோவியத்தின் அரசாட்சி முறையை ஏற்க முடியாத நிலையில் இருந்தது. உலகப் போரில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரங்களுக்கு உதவி என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றை சோவியத் ஒன்றியம் ஏன் ஆதரிக்கவில்லை என்று, சோவியத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் அமெரிக்கா விளக்கம் கேட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கத்தான் அந்த நீண்ட தந்தியை கென்னன் அனுப்பினார். முதலாளித்துவத்துடனான ஒரு முடிவற்ற போரில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் சோவியத், இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளக்கூடிய ஆனால், கம்யூனிஸ்ட்கள் அல்லாதவர்களையே முதலாளித்துவவாதிகளைவிடப் பெரிய எதிரிகளாகக் கருதுவதாக அவர் அத்தந்தியில் குறிப்பிட்டிருந்தார். முதலாளித்துவமும், சோவியத்தும் அமைதியான முறையில் நீண்ட காலத்திற்குத் தொடர முடியாது என்று சோவியத் கருதுவதாகக் குறிப்பிட்ட கென்னன், சோவியத்தின் கம்யூனிசச்சடனான உறவே அமெரிக்க வெளியுறவு அதுவரை கண்டிராத மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த தந்தியை அடிப்படையாகக் கொண்டே, சோவியத் ஒன்றியத்துடனான அமெரிக்க உறவுகள் என்ற (ரகசிய) கொள்கை அறிக்கையை கிளார்க் கிளிஃபோர்ட், ஜார்ஜ் எஸ்லி ஆகியோர், குடியரசுத்தலைவர் உத்தரவின்படி, அவ்வாண்டு செப்டம்பரில் உருவாக்கினர். இந்தத் தந்தியிலிருந்த பல செய்திகளுடன், 1947 ஜூலையில் அமெரிக்காவின் அந்நிய விவகாரங்கள் இதழில், மிஸ்டர் எக்ஸ் என்ற பெயரில் கென்னன் எழுதிய கட்டுரை, மிஸ்டர் எக்ஸ் கட்டுரை என்றே குறிப்பிடப்படுகிறது. எதிர்மறைப் பிரச்சாரங்களையே சோவியத் கொண்டிருப்பதால், மேற்கத்திய உலகம் ஒன்றிணைந்தால் சோவியத் பலவீனமாகிவிடும் என்று கூறிய இந்தத் தந்தியின், முதல் இரண்டு அத்தியாயங்களே, சோவியத்துடனான பனிப்போர்க்கால அமெரிக்கக் கொள்கைகளின் அடிப்படையாக அமைந்தன. 

- அறிவுக்கடல்

;