tamilnadu

img

இந்நாள் பிப். 07 இதற்கு முன்னால்

1497 - ‘வெற்று ஆடம்பரங்களைத் தீயிலிடுதல் (பான்ஃபயர் ஆஃப் த வானிட்டீஸ்)’ என்ற பெயரில் ஒப்பனைப் பொருட்கள், ஏராளமான ஓவியங்கள், நூல்கள் உள்ளிட்டவை, இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் தீயிலிட்டு அழிக்கப்பட்டன. காலியானது என்ற பொருள்கொண்ட லத்தீன் சொல்லான வானஸ் என்பதிலிருந்துதான், வானிட்டி என்ற சொல் உருவானது. ‘பாவத்திற்கான காரணிகள் (அக்கேஷன்ஸ் ஆஃப் சின்)’ என்ற பெயரில் தடைசெய்யப்படுகிற பொருட்களை, இவ்வாறு தீயிலிட்டு அழிக்கும் ‘வெற்று ஆடம்பரங்களைத் தீயிலிடுதல்’ நிகழ்வு என்பது, 15ஆம் நூற்றாண்டில் பலமுறை நடந்திருந்தாலும், குறிப்பாக 1497 பிப்ரவரி 7இல் நிகழ்ந்ததைக் குறிப்பிடவே இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மனிதன் பாவம் செய்யக் காரணமாயிருப்பதாக அல்லது தூண்டுவதாகக் கருதப்படக்கூடிய, சூழ்நிலைகள், மனிதர்கள், பொருட்கள் ஆகிய அனைத்தும், கத்தோலிக்க போதனை களில் பாவத்திற்கான காரணிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. சமயத் தலைமையின் கட்டுப்பாட்டிலிருந்த ஆட்சியாளர்கள் அல்லது, ஆட்சியதிகாரத்தையே கையில் வைத்திருந்த சமயத் தலைவர்கள் ஆகியோரால், அவர்களுக்கு எதிரானவை, சமயத்திற்கு உடன்படாதவை மட்டுமின்றி, சமயக் கோட்பாடுகளின்படி அல்லாத (சமயச் சார்பற்ற) படைப்புகளும் இவ்வாறு தடைசெய்யப்பட்டன.

சமகாலத்திய நூல்கள், ஓவியங்கள் உள்ளிட்ட கலைப்படைப்புகள் மட்டுமின்றி, மிகப் பண்டைய காலத்தைச் சேர்ந்த விலைமதிப்பற்ற சிற்பங்கள், ஓவியங்கள், கலை வேலைப்பாடு கொண்ட துணிகள், கண்ணாடிகள், கிடைத்தற்கரிய பண்டைய கையெழுத்துப் பிரதிகள் என்று இவ்வாறு தடைசெய்யப்பட்ட ஏராளமான அரிய பொருட்களை, இந்த நிகழ்வுகளின்போது தீயிலிட்டு அழித்தனர். கிரலாமோ சவோனரோலா என்ற  சமய போதகரே, இவற்றை முன்னின்று நடத்தியதாக பிளாரன்சின் வரலாறு’ என்ற நூல் குறிப்பிடுகிறது.  14ஆம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிடப்படும், இத்தாலிய மறுமலர்ச்சியின் அத்துமீறல்கள் என்று ‘அவர் கருதிய அனைத்தையும்’ எதிர்த்து, வலுவான பிரச்சா ரங்களை மேற்கொண்ட சவோனரோலா, இத்தீயிலிடுதல் நிகழ்வுகளின்போது அவற்றை அழித்தார். ஒரு கட்டத்தில் பிளாரன்ஸ் நகரின் அறிவிக்கப்படாத ஆட்சியாளராகவே இவர் ஆட்சி செய்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. இதனால், 1497 மே-யில் சமயவிலக்குச் செய்யப்பட்ட சவோனரோலா, 1498 மே-யில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டார்.

- அறிவுக்கடல்

;