tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... - பிப்ரவரி 22

தூக்குமேடை தியாகி பாலு நினைவு நாள்

மதுரை மாவட்டம் கருகப் பிள்ளை கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து காவல்துறையில் பணியாற்றியவர் தோழர் பாலு. பின்னர் உழைக்கும் மக்களின் போராட்டத்தை காவல்துறை நசுக்குவதை கண்டு வெகுண்டு தனது வேலையை தூக்கியெறிந்து விட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1948ல் தடை செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவானார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுப்பவர்களுக்கும், பிடித்துக் கொடுப்பவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் “சன்மானம்” கொடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிட்டார்கள். நாடு முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் நரவேட்டையாடப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவுடன் கொடுஞ் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அடி, உதை, காலில் லாடம் கட்டுவது, செங்கல்லை கையிடுவலில் வைத்துக் கட்டி தண்ணீர் விடுவார்கள். செங்கல் விரியும்போது உடல் புண்ணாகும். நிர்வாணமாக்கி தண்ணீரில் நாள் முழுவதும் நிற்க வைப்பார்கள். தூக்கமின்றி புலம்ப வேண்டியதிருக்கும். இத்தகைய மிருகத்தனமான கொடுமைகளை அகிம்சை ஆட்சியாளர்களின் ஆசியோடு அதிகாரிகள் நடத்தினார்கள். பல மாவட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் மீது சதி வழக்குகள் போடப்பட்டு, மாதக்கணக்கில் தனி நீதிமன்றங்களில் விசாரணைகள் நடந்தன.

மதுரையில் துப்பறியும் காவல்துறை தலைமைக் காவலர் செண்பகம் சேர்வை கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை பாலு உள்ளிட்ட 6 தோழர்கள் சேர்க்கப்பட்டார்கள். தோழர் பாலுவுக்கு தூக்கு தண்டனையும், மற்ற 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டனை 1951 பிப்ரவரி 22ஆம் நாளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாளும் குறிக்கப்பட்டது. இரண்டு நாட்களும் மதுரை சிறை முழுதும் பேச்சரவம் இல்லாத துக்கவீடு போல் காட்சியளித்தது. பிப்ரவரி 21ஆம் நாள் இரவு 8 மணி வரை நாங்கள் அனைவரும் வரிசையாக நின்று, தனிக் கொட்டடியில் சிங்கம் போல் காட்சியளித்த தோழர் பாலுவுக்கு புரட்சி வணக்கம் செலுத்தினார்கள். பிப்ரவரி 22 காலை 4 மணிக்கு மரண பயம் ஏதுமின்றி, சொல் தடுமாற்றம் ஏதும் இல்லாமல், தெளிந்த உறுதியான குரலில், “புரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க!” என்ற சப்தம் கேட்டதும், மறைக்கப்பட்ட பெரிய மதில் சுவரில் எதிரொலி கேட்கும் நேரத்தில், மற்றவர்களும் “தியாகி பாலு நாமம் வாழ்க! புரட்சி ஓங்குக!” என்று முழங்கினார்கள்.

தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டபோதும் பாலு, படித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தார். பார்க்க வருபவர்களுக்கு ஆறுதல் கூறினாரே தவிர, அவரிடம் மரண பயம் இல்லை. பாலு மாபெரும் வீரனாகத் தோன்றினார். பஞ்சாலைத் தொழிலாளியாக பணியில் இருந்தபோது, வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டார். வேலையிலிருந்து நீக்கப்பட்டதும் காவல் துறையில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. தெலுங்கானா விவசாயிகளை அடக்குவதற்கு அனுப்பப்பட்டார். விவசாயிகளைச் சுட மறுத்தார். அதிகாரிகளின் வெறிச்செயல்களுக்கு துணைபோக மறுத்தார். கம்யூனிஸ்டாக இருந்தார் என்பதற்காகவே வழக்கில் இணைக்கப்பட்டார். நிரபராதியான பாலு துக்கிலிட்டு கொல்லப்பட்டார் என்பதே அநீதியாகும் என்கிறார் தோழர் ஆர்.நல்லக்கண்ணு “கட்சி தடை செய்யப்பட்டு, தலைவர்கள் தலைமறைவாக இருந்தபோது, ஒருநாள் இரவில் வைகையாற்று மைய மண்டபத்தில் நகர்கமிட்டி உறுப்பினர்கள் மணவாளனும், வி.கருப்பையாவும் மே.முனியாண்டியும் இருந்தார்கள். அவர்களை பாலு சந்தித்து ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தார்.“என் உயிர்மூச்சு உள்ளவரை கம்யூனிஸ்ட் கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார். உயிர் கொடுக்கவும் தயார்” என்பதே அந்த வீரசபதம் என்று கூறியுள்ளார் விடுதலைப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி.

பெரணமல்லூர் சேகரன்

;