tamilnadu

இந்நாள் மே 13 இதற்கு முன்னால்

1952 - இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை முதன்முறையாகக் கூடியது. இந்தியாவிற்கு மேலவை என்பது 1919 மாண்ட்டேகு-செம்ஸ்ஃபோர்ட் அறிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசுச் சட்டம்-1919இன்படி உருவாக்கப்பட்டுவிட்டாலும், கீழவையின் முடிவுகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையிலேயே அமைக்கப்பட்டிருந்தது. கீழவை என்பது, ஜமீன்தார்கள் போன்றோரை நியமன உறுப்பினர்களாகக் கொண்டு 1861இலேயே அமைக்கப்பட்டுவிட்டாலும், 1920இல்தான் முதல் தேர்தல் நடத்தப்பட்டது. விடுதலைக்குப்பின், 1952 ஏப்ரல் 3இல் உருவாக்கப்பட்ட மேலவைக்கு, 1954 ஆகஸ்ட் 23இல்தான் இந்தியில் ராஜ்ய சபா என்ற பெயர் சூட்டப்பட்டது. மக்களவையைக் கலைப்பதுபோல மாநிலங்களவையைக் கலைக்கமுடியாது. இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை மூன்றிலொருபங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும். ஈரவைப் பாராளுமன்றம் கொண்ட நாடுகளில் கீழவையைவிடக் குறைந்த அதிகாரம் கொண்ட அமைப்பாக மேலவை உள்ளது. நிதிச்சட்ட முன்வடிவுகளை முன்மொழிய முடியாது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது போன்ற கட்டுப்பாடுகள் பொதுவாக எல்லா நாடுகளிலும் மேலவைக்கு உள்ளன. குடியரசுத்தலைவர் ஆட்சிமுறை உள்ள நாடுகளில் மேலவைக்குச் சற்றுக்கூடுதல் அதிகாரம் உள்ளது. குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்காவின் மேலவையான செனட், பல சிறப்பதிகாரங்களைக் கொண்டுள்ளது. உலகின் பாதிக்கும் குறைவான நாடுகளில்தான் ஈரவைப் பாராளுமன்றம் நடைமுறையில் உள்ளது. மீதி நாடுகளில் ஓரவைப் பாராளுமன்றமே நடைமுறையிலுள்ளது. டென்மார்க், ஹங்கேரி, நார்வே, சிங்கப்பூர், சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளில் ஓரவைதான். இவற்றில் பல நாடுகளில் மேலவை இருந்து கலைக்கப்பட்டது என்பதுடன், இந்தியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் பல மாநிலங்கள் மேலவையை கலைத்துள்ளன. உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட சீனா, குறைந்த மக்கள்தொகைகொண்ட வாட்டிகன் ஆகிய இரண்டிலும் ஓரவைதான். மூன்றவைகொண்ட பாராளுமன்றங்களும் இருந்துள்ளன. பிரான்சிலிருந்த எஸ்டேட்ஸ் ஜெனரல், பின்னர் நெப்போலியன் காலத்திய கான்சலேட், 1947இல் சீனாவிலும், 1983இல் தென் ஆப்பிரிக்காவிலும் இருந்தவை உள்ளிட்டவை மூன்றவை பாராளுமன்றங்கள். நடுக்கால ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நான்கவை பாராளுமன்றங்களும் நடைமுறையில் இருந்துள்ளன.

அறிவுக்கடல்