tamilnadu

img

இந்நாள் அக். 07 இதற்கு முன்னால்

1958 - பாகிஸ்தானில் முதல் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்ந்தது. 1956இல்தான் முதல் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி, குடியரசாக ஆகியிருந்த பாகிஸ்தானில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பின்மூலம் ஏற்பட்ட ராணுவ ஆட்சி, 1971வரை நீடித்தது. இந்தியாவுடன் 1947இல் விடுதலையடைந்த பாகிஸ்தானில், 2008 வரையான 61 ஆண்டுகளில், 33 ஆண்டுகள் ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளது. 1956வரை இங்கிலாந்தின் மேலாட்சியின்கீழான டொமினியன் நாடாகவே(இங்கிலாந்தின் அரசியே பாகிஸ்தானுக்கும் அரசி - கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இன்றும் இருப்பதைப்போன்று!) பாகிஸ்தான் தொடர்ந்தது உள்ளிட்ட செய்திகள் இத்தொடரில் 2018 ஆகஸ்ட் 14இல் இடம்பெற்றுள்ளன. முழுமையான குடியரசாக மாற்றமடைவதற்குமுன்பே, அரசமைப்புச் சட்ட அவையையும், அப்போதைய தலைமை அமைச்சர் கவாஜா நஸீமுதீனையும், தலைமை ஆளுனர் குலாம் மொகம்மத் பதவி நீக்கம் செய்ததே பாகிஸ்தானின் முதல் ஆட்சிக் கவிழ்ப்பாகும்.

அதற்கும் ராணுவத் தளபதியே (அயூப்கான்) உதவினார். குடியரசாக ஆனபின் முதல் குடியரசுத்தலைவரான இஸ்கந்தர் மிர்ஸாவே ராணுவத் தளபதியாக இருந்தவர்தான். ஆட்சிக்கவிழ்ப்புக்குப்பின் அவரையும் அகற்றி, ராணுவத் தளபதி அயூப் கான் தானே அதிபராகி, 1962இல் புதிய அரசமைப்புச் சட்டத்தின்மூலம் அதனை சட்டப்பூர்வமாக்கினார். 1973இல் புதிய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ராணுவம் சாராத ஜுல்ஃபிகர் அலி புட்டோ பிரதமராக இருந்த நிலையில், ராணுவத் தளபதி ஜியா-வுல்-ஹக் ஆட்சியைக் கவிழ்க்க, 1988வரை ராணுவ ஆட்சி நடைபெற்றது. 1999இல் நவாஸ் ஷெரீஃபின் ஆட்சியை ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் கவிழ்த்தபின் 2008வரை ராணுவ ஆட்சி நடைபெற்றது. இவைதவிர தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளுடன், அரசியல் முடிவுகளில் ராணுவத்தின் தலையீடும் பாகிஸ்தானில் அதிகம். விடுதலைக்குப்பின் முப்படைக்கும் ஒரே தளபதி வேண்டாம் என்று இந்தியா முடிவு செய்ததால், முப்படைக்கும் தலைவர் குடியரசுத்தலைவரே.

ஆனால், பாகிஸ்தானில் படைகளின் கூட்டுக்குழு என்ற அமைப்பு முப்படைகளின் தலைமையாக இருக்கிறது. அமெரிக்காவில் முப்படையிலிருந்தும் சுழற்சி முறையில் இக்குழுவின் தலைவர் நியமிக்கப்படுகிறார். ஆனால், பாகிஸ்தானில் கடற்படை, விமானப்படைத் தளபதிகள் பதவியில் மூத்தவர்களாக இருந்தாலும்கூட, பெரும்பாலும் ராணுவத் தளபதியே இப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவதால், ராணுவம் அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மற்ற இரு பிரிவுகளின் துணையுடன் மிக எளிதாக ஆட்சியைக் கவிழத்துவிட முடிகிறது. இந்தியாவிலும் முப்படைக்கும் ஒரே தளபதி என்று பிரதமர் மோடி விடுதலைதின உரையில் குறிப்பிட்டிருப்பது மிகவும் கவலையோடு கவனிக்கத்தக்கது.

- அறிவுக்கடல்

;