tamilnadu

img

இந்நாள் நவ. 23 இதற்கு முன்னால்

1890  - உலகின் முதல் ஜூக்பாக்ஸ்,  அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், பேலைஸ் ராயேல் சலூன் என்ற கேளிக்கை விடுதியில் நிறுவப்பட்டது. சலூன் என்ற ஆங்கிலச் சொல், ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான, (உதாரணமாக மது, கேளிக்கை, விளையாட்டுகள், சூதாட்டம் போன்றவை நடத்தப்படும்) பொது அரங்கினையும், ஓட்டுனர் பகுதியிலிருந்து பயணிகள் பகுதி பிரிக்கப்பட்ட கார்களையும் குறிக்கும். சலோன் என்ற ஆங்கிலச்சொல் அலங்காரம் (குறிப்பாக சிகை) செய்யுமிடத்தையும், பெரிய வீட்டின் வரவேற்பறையையும் குறிக்கும். ஜூக்பாக்ஸ் என்பது, இணையத்தின் வருகைக்குமுன் நமக்கு(இந்தியர்களுக்கு) அதிகம் பரிச்சயமில்லாத பெயர்.

ஆனால், மேற்கத்திய நாடுகளில், கேளிக்கை விடுதி போன்ற இடங்களில், விரும்பிய இசையைத் தேர்ந்தெடுத்துக் கேட்பதற்காக, பொதுவாக நாணயங்கள்மூலம் இயக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் புழக்கத்திலிருந்த கருவி. இதற்கு முன்னரே பிளேயர் பியானோ என்ற தானியங்கி இசைக்கருவி புழக்கத்திலிருந்தாலும், 1877இல் எடிசன் கண்டுபிடித்த போனோக்ராஃப் கருவி இசையைப் பதிவுசெய்யும் வசதியை அளிக்க, 1889இல் நாணயத்தால் இயக்கும் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட, இவை நாணயம் போட்டு இசை கேட்கும் கருவிக்கு வழிவகுத்தன. விரும்பிய இசையை வீடுகளில் கேட்பதற்கான வசதிகள் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பெற்றிருந்த அக்காலத்தில், தேர்ந்தெடுத்து இசை கேட்பதற்கான வசதி மிகப்பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டது.

இந்த முதல் ஜூக்பாக்சில், ஸ்பீக்கர்கள் இன்றி, ஸ்டெதாஸ்கோப் போன்று பொருத்தப்பட்டிருந்த நான்கு குழல்களை நான்குபேர் காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்கலாம். 5 செண்ட் நிக்கல் நாணயம் 20 சேர்ந்ததுதான் ஒரு டாலர். ஒரு நிக்கல் நாணயத்தால் இயங்கிய இக்கருவியில், முதல் ஆறு மாதங்களில்மட்டும் ஆயிரம் டாலருக்குமேல் வசூலானது என்பதிலிருந்து, இதற்கான வரவேற்பு புரியும். பின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட இசைத்தட்டுகளை தனித்தனி போனோக்ராஃப் கருவிகளிலும், அதன்பின் இசைத்தட்டுகளை மாற்றும் வசதியுடைய ஒரே கருவியுடனும் உருவாக்கப்பட்ட இந்த ஜூக்பாக்சில், எந்த இசையை எவ்வளவு பேர் கேட்டார்கள் என்று கணக்கிடும் வசதியிருந்ததால், இசைத்தட்டு வெளியீட்டாளர்களின் முக்கிய சந்தையாக இருந்தது. வானொலி, ஒலிநாடா வரவால் மதிப்பிழக்கத் தொடங்கியது.

- அறிவுக்கடல்