tamilnadu

img

இந்நாள் மார்ச் 06 இதற்கு முன்னால்

1665 - முழுக்க முழுக்க அறிவியலுக்கென்றே வெளியாகும் உலகின் முதலாவது அறிவியல் ஆய்வு இதழும், மிகநீண்ட காலமாக வெளியாகிக் கொண்டிருப்பதுமான ‘ஃபிலாசஃபிக்கல் ட்ரான்சாக்ஷன்ஸ் ஆஃப் த ராயல் சொசைட்டி’ என்பது, இங்கிலாந்தின் அரச கழகத்தால்(ராயல் சொசைட்டி) வெளியிடப்பட்டது. 1660இல் தொடங்கப்பட்ட அரச கழகம்தான், உலகின் மிகப்பழைமையான (ஒரு நாட்டின்) தேசிய அறிவியல் நிறுவனம். ஆய்வு இதழ்கள் என்பவை, ஒரு துறையின் கண்டுபிடிப்புகளை, அத்துறையிலுள்ள மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தி, அத்துறை அறிவினை வளரச் செய்யவும், ஆய்வுகளை மேம்படுத்தவும் வெளியிடப்படுகின்றன. அதனால், ஆய்வு இதழ்களின் கட்டுரைகள், பொதுவான இதழ்களைப் போன்று, தொழில்முறை இதழியலாளர்களால் எழுதப்படுவதில்லை. மாறாக, அத்துறையின் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், உயர்கல்வி மாணவர்கள் ஆகியோரே இந்த இதழ்களில் எழுதுகின்றனர். அதைப்போலவே இந்த கட்டுரைகளின் அறிவியல் தகுதியைச் சரிபார்க்கும் பணியும், அத் துறையின் பிற ஆய்வாளர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சரிபார்த்தலில், அத்துறை தொடர்பான புதிய செய்திகள், பிற ஆய்வுகளுக்கு உதவும் தகவல்கள், புதிய கோணங்கள் போன்றவை இருக்கின்றனவா என்ற அடிப்படையில் இக்கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவ்வாறு பிற ஆய்வாளர்களால் சரிபார்க்கப்படும் முறை நடுவர்முறை என்றழைக்கப்படுகிறது.

1731இல் எடின்பர்க் அரச கழகம் வெளியிட்ட, ‘மெடிக்கல் எஸ்ஸேஸ் அண்ட் அப்சர்வேஷன்ஸ்’ என்ற மருத்துவத்துறை ஆய்வு இதழ்தான், இந்த ஆய்வாளர்கள் சரிபார்க்கும் முறையை முதன்முதலாகக் கடைப்பிடித்தது. அதன்பின் இந்த முறை கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் பெற்று, 19ஆம் நூற்றாண்டில், வெளிச் சரிபார்ப்பு என்ற, பிற ஆய்வாளர்களைப் பயன்படுத்திச் சரிபார்க்கும் நடுவர்முறையாக மாறி, 20ஆம் நூற்றாண்டில் எல்லா ஆய்வு இதழ்களும் கடைப்பிடிக்கும் நடைமுறையாக மாறியது. இந்த லண்டன் அரச கழகத்தின் முதல் இதழ் வெளியாவதற்கு இரு மாதங்களுக்கு முன்பே, ஜனவரி 5இல், பிரான்சில் ‘ஜர்னல் டெஸ் ஸ்காவன்ஸ்’ என்ற ஆய்விதழ் வெளியிடப்பட்டாலும், அது பொதுவான ஆய்விதழாக இருந்ததால், அறிவியலுக்கு மட்டுமான முதல் இதழாக லண்டன் இதழே குறிப்பிடப்படுகிறது. நேச்சர் போன்று பழைமையான அறிவியல் இதழ்கள், அறிவியலின் பல்வேறு துறைகளின் கட்டுரைகளையும் வெளியிட்டாலும், அறிவியலின் வளர்ச்சி பிரிவுகளையும் அதிகரித்த நிலையில், பிற்காலத்திய அறிவியல் ஆய்வு இதழ்கள், குறிப்பிட்ட துறைகளுக்கானதாக மாறின.

- அறிவுக்கடல்

;