tamilnadu

img

திசை திருப்பும் மோடி நாட்டின் பாதுகாப்பு?

நாட்டின் பாதுகாப்பை சர்ச்சைக்குள்ளாக்கக்கூடாது, அரசியல் ஆக்கக்கூடாது என்று பாஜகவினர் கூறுகின்றனர். மறுபுறத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தேர்தல் பரப்புரையில் நாட்டின் பாதுகாப்பை பணயம் வைத்து பேசிக்கொண்டிருக்கிறார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தங்களது ஆட்சியின் சாதனைகளாக எதையும் முன் வைக்க முடியவில்லை. தேர்தலுக்காக நடத்தப்பட்ட கடைசி நேர காட்சிப் போல பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், செயற்கைக்கோள் ஏவுகணை சோதனையை நடத்தியதாகவும் மட்டுமே கீறல் விழுந்த இசைத்தட்டு போல திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்தபயங்கரவாத முகாம்களை அழித்தது தங்களது மிகப் பெரிய சாதனை என்று மோடி கூறுகிறார். ஆனால் இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் இது பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து என்று திசை திருப்புகிறார். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஒரு பெரும் எண்ணிக்கையை பாஜகவினர் பரப்பினர். ஆனால் அது உண்மையில்லை என்று தெரியவந்தவுடன், ஆதாரமே கேட்கக்கூடாது, நாங்கள் சொல்வதை கேட்டுக் கொள்வது ஒன்றுதான் தேசபக்தி என நாடகமாடுகின்றனர்.


தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக செயற்கைக்கோள் அழிப்பு சோதனை குறித்து வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தோன்றி மோடி பேசினார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தது. ஆனால் தேர்தல் ஆணையம் மோடிக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் இதை நியாயப்படுத்தியது. விஞ்ஞானிகளின் சாதனையை தனது கட்சியின் சாதனை போல பேசுவது தேர்தல் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரண் அல்லவா? இந்த சாதனையில் மோடியின் தனிப்பட்ட பங்கு என்ன? தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதை அவர்தான் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்க வேண்டுமா? இதற்கு தேர்தல் ஆணையமும் துணை போனால் நியாயமான வாக்குப்பதிவு நடைபெறும் என நம்ப முடியுமா?கடந்த ஐந்தாண்டு காலம் தமது ஆட்சிதான் நடந்தது என்பதை மறைக்கும் வகையில், வறுமையை இன்னமும் ஏன் ஒழிக்க முடியவில்லை என கேள்வி எழுப்புகிறார்.தன்னுடைய ஆட்சியினால் வறுமை ஒழிந்துவிட்டதாக பேசுவது அதே வாயால் வறுமையை ஏன் ஒழிக்க முடியவில்லை என கேள்வி எழுப்புவது என இரட்டை நாக்கால் பேசி வருகிறார் மோடி.கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றியிருக்கிறோம் என பட்டியல் போட்டு பேசினால் அது பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து நாட்டின் பாதுகாப்புக்கு தாங்கள்தான் காவலர் என வீர வசனம் பேசுவதால் எந்தப் பலனும்இல்லை. இந்த காவலாளி நாட்டின் நலன்களை அடகு வைத்தார் என்பதுதான் உண்மை. இந்த போலி காவலரை பணிநீக்கம் செய்தாக வேண்டும். 

;