tamilnadu

img

2 + 2 = 5

பாசிஸ்ட்டுக்களின் ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்கும் என்பதை தோலுரித்துக் காட்டும் நான்கு நிமிடங்கள் ஓடும் ஈரானிய குறும்படம் 2 + 2 = 5 திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் திரையிடப்பட்டது.  குறும்பட இயக்குநர்களின் இன்கிரிடிபிள் இந்தியா, குற்றாலீசுவரன், அவள் மானம், காந்தி கண்ட இடங்கள் உள்ளிட்ட பத்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன.  இந்த நிகழ்வில், “பாசிஸ்டுகள் ஆட்சியில் கல்விமுறை எப்படி இருக்கும்” என்பதை விளக்கும் ஈரானிய குறும்படம் திரையிடப்பட்டது. 

படத்தில் ஒரு வகுப்பறை காண்பிக்கப்படுகிறது. அந்த வகுப்பறைக்குள் ஆசிரியர் வருகிறார். வகுப்பறைக்குள் வந்தவுடன் வகுப்பறையின் கதவை மூடுகிறார். ஆசிரியரைக் கண்டதும் மாணவர்கள் சிலர் எழுந்து நின்றனர். சிலர் அமர முயல்கின்றனர். அமர முயன்றவர்களும் ஆசிரியர் நிற்பதைப் பார்த்து அமராமல் நின்று கொண்டனர். ஆசிரியர் தனது கடிகாரத்தைப் பார்க்கிறார். சரியான நேரத்தில் வகுப்பறைக்குள் உள்ள ஒரு ஸ்பீக்கரில் தலைமையாசிரியர் பேசுகிறார். அதன் பிறகு அனைத்து மாணவர்களும் அமருகிறார்கள்.  ஆசிரியர் வகுப்பறையில் உள்ள சாக்பீசை எடுத்து கரும்பலகையில் எழுதத் துவங்குகிறார். இரண்டையும் இரண்டையும் கூட்டினால் அதன் கூட்டுத்தொகை ஐந்து என்று எழுதுகிறார். மாணவர்களிடையே சலசலப்பு. அதை மாணவர்களுக்கும் சொல்லித்தருகிறார். ஒரு மாணவர் எழுந்து இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு தான் என்கிறார். அது எனக்குத் தெரியாதா? நான் சொல்லித்தருவதை எழுதிக்கொள்ளுங்கள் என்கிறார். 

இன்னொரு மாணவர் எழுந்து ஆசிரியர் சொல்வதை ஏற்க முடியாது என்று பிற மாணவர்களிடம் இரண்டும் இரண்டும் சேர்த்தால் நான்கு என்று தனது விரல்களை காட்டிச் சொல்கிறார். இதனால் ஆத்திரமுற்ற ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே சென்று விடுகிறார். சிறிதுநேரம் கழித்து மூன்று குண்டர்களை அழைத்து வருகிறார்.  நான்கு விரல்களைக் காட்டி பேசிய மாணவரை அழைத்து இரண்டும் இரண்டும் ஐந்து என்று ஆசிரியர் எழுதக் கூறுகிறார். அப்படி எழுதவில்லை என்றால் உன்னை இவர்கள் சுட்டுத் தள்ளி விடுவார்கள் என்று எச்சரிக்கிறார். சாக்பீசை வாங்கிக்கொண்டு கரும்பலகைக்குச் சென்ற மாணவர் அந்த மூன்று குண்டர்களையும் பார்க்கிறார். அவர்கள் துப்பாக்கியுடன் தயார் நிலையில் இருக்கிறார்கள். இரண்டும் இரண்டும் ஐந்து என்று எழுதுவதற்கு பதிலாக நான்கு என்று சரியாக எழுதுகிறான். (இந்த காட்சியில் அரங்கத்தில் கைதட்டி ஆராவாரம் செய்கிறார்கள்.) எழுதிவிட்டு குண்டர்களை பார்க்கிறான். 

குண்டர்கள் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் அந்த மாணவரை சுட்டுத்தள்ளுகிறார்கள். மாணவரின் ரத்தம் கரும்பலகையில் தெறிக்கிறது. மாணவர் செத்து விழுகிறார். அனைத்து மாணவர்களும் அதிர்ச்சியடைகிறார்கள். இதே கதி தான் உங்களுக்கும் என்று ஆசிரியர் மற்ற மாணவர்களை எச்சரிக்கிறார். மூன்று குண்டர்களும் இறந்த மாணவரை தூக்கிச் செல்கிறார்கள்.  இதனையடுத்து கரும்பலகையில் சிந்திய ரத்தத்தை துடைப்பானால் துடைத்துவிட்டு ஆசிரியர் மீண்டும் இரண்டும் இரண்டும் ஐந்து என்று எழுதுகிறார். அனைத்து மாணவர்களையும் இதை தங்களது நோட்டில் எழுதச் சொல்கிறார். ஒரு மாணவரின் நோட்டில் கேமரா பதிகிறது. இரண்டும் இரண்டும் ஐந்து என்று எழுதிய மாணவர் யோசித்துவிட்டு ஐந்தை அழித்துவிட்டு நான்கு என்று எழுதுகிறார். அத்துடன் குறும்படம் நிறைவடைகிறது.

இந்தப் படத்தை பார்க்கிற எவரும் பாஜகவின் தேசிய கல்விக்கொள்கை அமலானால் அரசு பள்ளிக்கூடங்கள், அதில் படிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இதே நிலை தான் ஏற்படும் என்பதை சொல்லாமல் சொன்னது குறும்படம்.   இந்த நிகழ்விற்கு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ரவிபாண்டி முன்னிலை வகித்தார். டேனியல்தாஸ் வரவேற்றார். “குறும்படங்களும் பெரும்படங்களும்” என்ற தலைப்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் இரா. பிரபாகரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை குமரவேல் ஒருங்கிணைத்தார். 

இலமு, திண்டுக்கல்

;