tamilnadu

img

ரஷ்யக் கவிஞர் புஷ்கின் - காலத்தை வென்றவர்கள்

ரஷ்யக் கவிஞரும், காதல் கவிதைகள் யுகத்தின் சிறந்த படைப்பாளியுமான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் பிறந்த தினம் இன்று. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் (1799) பிறந்தவர். தனது மாமாவின் நூலகத்தில் பல புத்தகங்களைப் படித்தார். இந்த சூழல் இலக்கிய தாகத்தை ஊற்றெடுக்க வைத்தது. 15 வயதில் தனது முதல் கவிதையை எழுதி வெளியிட்டார். விரைவிலேயே இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றார்.

எந்த சூழலிலும் சுயமரியாதையை விடமாட்டார். அதற்காக யாருடனும் உடனடியாக கோதாவில் இறங்கிவிடுவார். நாடு முழுவதும் ஜார் மன்னரின் உளவாளிகள் தீவிரமாக கண்காணித்து வந்ததால் படைப்புகளை வெளியிட முடியாத நிலை இருந்தது. நெஞ்சுரம் கொண்ட இவர், போரிஸ் குட்னவ் என்ற தனது மிகவும் பிரபலமான நாடகத்தை எழுதினார். 1820-ல் ரஸ்லன் அண்ட் லுட்மிலா என்ற தனது முதல் நீண்ட கவிதையை வெளியிட்டார். அதன் கரு, பாணி ஆகியவை பல சர்ச்சைகளை ஏற்படுத்தின. சமூக சீர்திருத்தங்களில் இவரது கவனம் திரும்பி யது. தீவிர இலக்கியவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அரசின் கோபத்துக்கு ஆளானதால், தலை நகரைவிட்டு வெளியேறினார். காகசஸ், கிரிமியா ஆகிய இடங்களுக்குச் சென்றார். 1823-ல் பல காதல் காவியங்களைப் படைத்தார். கிரேக்கப் புரட்சியால் ஈர்க்கப்பட்டார். அங்கும் அரசுடன் மோதல் ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மிகைலாஸ்கோ என்ற இடத்துக்குச் சென்றார். சோகமான மற்றும் தேசம் குறித்த கவிதைகளை எழுதினார்.

இலக்கிய உலகில் இவரது செல்வாக்கு அதிகரித்தது. கவிதை, நாடகங்கள், உரைநடைகளைக் கையாள்வதில் முன்னோடியாகவும் கதைசொல்லும் பாணியில் தனித்துவம் வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். இவரது படைப்புகள் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது எழுத்தில் நிகோலாய் கராம்சின், பைரன் பிரபு ஆகியோரது தாக்கங்கள் காணப்பட்டன.  ஃபியோதர் தஸ்தயோவ்ஸ்கி விளாடிமிர் நபோகோவ், ஹென்றி ஜேம்ஸ் உள்ளிட்டோர் இவரது தாக்கத்தைப் பிரதிபலித்த பிரபல படைப்பாளிகள். இவரது நாவல் ‘யூஜின் ஆனிஜின்’, ரஷ்ய வாழ்க்கையின் கலைக்களஞ்சியம் எனப்படுகிறது. 

ரஷ்ய இசை அமைப்பாளர்களுக்கு இவரது கவிதைகள் உந்து சக்தியாக அமைந்தன. இவரது தி ஸ்டோன் கெஸ்ட், மொஸார்ட் அண்ட் ஸலியெரி ஆகியநாடகங்கள் புகழ்பெற்றவை. குறுகிய காலமே வாழ்ந்த இவர், உரைநடை கவிதை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனக் கட்டுரைகள், கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பல நாடுகளில் வெளிவந்தன.  நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்பட்ட புஷ்கின் 38 வயதில் (1837) மறைந்தார். இவரது நாவலான ‘கேப்டன் மகன்’ மிகப் பிரபலமான எழுச்சியை தழுவிய வரலாற்று நாவல்.

பெரணமல்லூர் சேகரன்

;