tamilnadu

img

பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாள் - காலத்தை வென்றவர்கள்

பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்க ளில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிக ளார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆகியோரின் கொள்கை, கற்றவர்க ளிடமும், மற்றவர்களிடமும் பரவப் பரப்புரை மேற்கொண்டவர். பெருஞ்சித்திரனார் மொழித்தளத்தில் தனித்தமிழ்க்கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார். 

பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர்  தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார். அந்தக் கருத்தியலைக் கொண்டிருந்தவர்களோடு இணக்கமான உறவையும் கொண்டிருந்தார். பெருஞ்சித்திரனார் தடா,மிசா போன்ற இந்தியச் சட்டங்களின்கீழ் பல்வேறுமுறை சிறையில் அடைக் கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேலாக சிறைக்குச்சென்றவர். அவரது சிறைவாழ்வில் பல்வேறு எழுத்துப்பணிகளைச் செய்து வெளியிட்டார்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். “குழந்தை’’ என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் “மலர்க்காடு’’ என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்து கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணி யேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் இதழை1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்து பெருஞ்சித்திரன் என்னும் புனைப்பெயரில் எழுதினார்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங் காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன. பெருஞ்சித்திரனார் தம் இதழ்க ளில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதி யவர். பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

பெரணமல்லூர் சேகரன்

;