tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 22

1970 - புவிநாள் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 1969 ஜனவரி 28 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கும், சேனல் தீவுகளுக்கும் இடைப்பட்ட பசிபிக் கடலின், சாண்ட்டா பார்பாரா சேனல் என்ற பகுதியில், யூனியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்தால் (அதுவரை நிகழ்ந்ததிலேயே) மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. கடலில் அமைக்கப்படும் எண்ணெய்க் கிணறுகளில் வெடிப்பு ஏற்படாமலிருக்க, 300 அடி ஆழம்வரை உறுதியான இரும்புக்குழாய்களும், 870 அடி ஆழம்வரை, இரண்டாம்நிலை பாதுகாப்புக் குழாய்களும் பொருத்தப்படவேண்டும் என்பது விதியாக இருந்த நிலையில், 239 அடிவரை மட்டுமே இரும்புக்குழாய்களைப் பொருத்திவிட்டு, ஏ-21 என்ற ஐந்தாவது கிணற்றை யூனியன் ஆயில் நிறுவனம் துளையிட்டுக்கொண்டிருந்தது. 3479 அடி ஆழத்தை எட்டியபோது, அழுத்தம் தாங்காமல் வெடிக்க, கிணற்றை மூடும் அமைப்பைக் கொண்டு மூடினாலும், கடலின் பலபகுதிகளில் எண்ணெய்யும், எரிவாயுவும் பொங்கியெழுந்தன.


இன்றும் உலகில் நிகழ்ந்த எண்ணெய்க்கசிவுகளில் மூன்றாவது பெரிய கசிவாக இருக்கிற இதில், அடுத்த 10 நாட்களில் ஒரு லட்சம் பீப்பாய் (ஒன்றரைக் கோடி லிட்டருக்கும் அதிகம்!) எண்ணெய் கடலில் பரவி, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், கடல் உயிரினங்கள் உயிரிழந்து, மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தேசிய சுற்றுச்சூழல் கொள்கைச் சட்டம் உருவாக்கப்பட்டதுடன், இந்த எண்ணெய்க்கசிவின் முதலாண்டு நிறைவு, சுற்றுச்சூழல் உரிமைகள் நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டது. 1969இல் சான்ப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், அமைதிச் செயல்பாட்டாளர் ஜான் மெக்கான்னல், புவிக்கும், அமைதிக் கொள்கைக்கும் மரியாதை செய்யும் விதமாக, வடகோளப்பகுதியில் இளவேனிற்காலம் தொடங்கும் மார்ச் 21இல் புவிநாள் கடைப்பிடிக்கலாம் என்று முன்மொழிந்தார். ஆனால், அமெரிக்க செனட்டர் கேலார்ட் நெல்சன் முயற்சியில், 1970 ஏப்ரல் 22இல் அங்கு கடைப்பிடிக்கப்பட்ட புவிநாளே, 1990இல் பன்னாட்டு புவிநாளாக மாறி, 141 நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது 193 நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் முக்கிய நாளாக மாறியுள்ளது.


அறிவுக்கடல்

;