tamilnadu

img

இந்நாள்... மே 6 இதற்கு முன்னால்

1882 - அமெரிக்காவில் சீனர்கள் குடியேறுவதைத் தடைசெய்த, ‘சீனர்கள் விலக்குச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. கலிஃபோர்னியத் தங்கவேட்டைக் காலத்தில்(1848-1855), ஏராளமான சீனர்கள் அமெரிக்காவில் குடியேறினர். அவர்களுக்கு, ‘அந்நிய சுரங்கத் தொழிலாளர்கள் வரி’ என்ற சிறப்பு வரி 1850இல் விதிக்கப்பட்டது. அத்தகைய நெருக்கடிகளால் சுரங்கங்களைவிட்டு வெளியேற்றப்பட்ட சீனர்கள், நாடுதழுவிய இருப்புப்பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்குச் சென்றனர். தங்கம் கிடைப்பது குறையத் தொடங்கியதும், சுரங்கங்களில் வேலைவாய்ப்பும் குறைந்ததால், இந்தப் பணிகளுக்கும் வரத்தொடங்கிய வெள்ளையர்கள், சீனர்களைப் போட்டியாகக் கருதினர்.

உணவகம், சலவை உள்ளிட்ட மிகக்குறைந்த கூலிகிடைக்கும் பணிகளுக்குச் சீனர்கள் மாறிக்கொண்டாலும், சீனர்கள் குடியேறுவதைத் தடைசெய்யுமாறு வெள்ளையர்கள் வற்புறுத்தினர். ஆனால், சீனர்களிடமிருந்து கிடைக்கும் வரி வருவாய் பட்ஜெட்டிற்கு உதவியதால், அவர்களைத் தடைசெய்ய கலிஃபோர்னியா மாநில அரசு தயங்கியது. அதே நேரத்தில், தங்கள் நாட்டில் உழைக்க மக்கள் இல்லாமற்போய்விடுவார்கள் என்று கருதிய சீனப் பேரரசர் ஜியான்ஃபெங், அமெரிக்கா தடைசெய்வதை ஆதரித்தார். சீனர்கள் தங்கள் மாநிலத்திற்குள் நுழையக்கூடாது என்று 1858இல் கலிஃபோர்னியச் சட்டமன்றம் சட்டமியற்றியது. பென்சில்வேனியா மாநிலத்தின் ஒரு தொழிற்சாலையில் முக்கால் பங்காக பணியாற்றிய சீனர்களை வெளியேற்றக்கோரி 1872இல் நடைபெற்ற வேலைநிறுத்தம், அம்மாநில அரசையும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

சீனர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால் தங்கள் வாய்ப்பு பறிபோவதாக வன்முறைகள் நடக்கத் தொடங்க, பத்தாண்டுகளுக்கு சீனர்கள் நுழையத் தடைவிதிக்கும் சட்டம் 1882இல் இயற்றப்பட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே, இன அடிப்படையில் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்டது அப்போதுதான் முதன்முறை. (அதனால், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று இன்றைய பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்!) சீனர்களுக்கெதிரான வன்முறைகள், படுகொலைகள், தங்கள் பகுதியைவிட்டு வெளியேற்றுதல் ஆகியவை பல இடங்களிலும் நடந்தன. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட இச்சட்டம், இரண்டாம் உலகப்போரில் கூட்டணி நாடாக சீனா ஆகிய நிலையில், நடுநிலைமையாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காக 1943இல் நீக்கப்பட்டாலும், 1967இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் தடைவிதிக்கும்வரை, பாகுபாடுகள் தொடர்ந்தன.

அனைவரின் உழைப்பையும் பயன்படுத்திக்கொள்வதும், நெருக்கடிகள் ஏற்பட்டால் சிறுபான்மையினரைப் பலிகடா ஆக்குவதும் அமெரிக்க வரலாற்றில் இன்றுவரை தொடர்ந்துகொண்டேதான் உள்ளது. சீனர்களால் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட பணிகளை அங்கீகரிப்பதாகவும், சீனர்கள் விலக்குச் சட்டத்திற்காக மன்னிப்புக் கோருவதாகவும், கலிஃபோர்னியா சட்டமன்றம் 2014இல் தீர்மானம் இயற்றியது!

- அறிவுக்கடல்

;