tamilnadu

img

கேல்கரி – கனடாவின் கலாச்சாரத் தலைநகரம் -நா.வே.அருள்

கனடாவின் அல்பெர்டா மாநிலத்திற்குப் பயணமானோம்.  பயணம் என்றாலே நம் ஊரைப்போல கோடை வறுவல் இல்லாததால் மனசுக்கு இதமாகவே இருந்தது.  வழியெல்லாம் மரங்கள் வரவேற்பளித்தன.  பூங்காக்கள் மடி தந்தன.  பளிச்சென்று முகம் கழுவிய புல்தரைகள்.  பார்க்கப் பசுமையாக இருந்ததால் பயணமும் இனியதாகவே இருந்தது. மாநிலம் விட்டு மாநிலம் போனாலே பெரும்பாலும் விமானப் பயணம்தான். அல்பெர்டா கால்கரி நகரத்திற்குப் போனோம்.  கனடாவின் ராக்கி மலைத்தொடரில் பவ் ஆறும் எல்பவ் ஆறும் சந்தித்துக் கொள்ளும் தென்பகுதியில் இருந்த நகரம்.  அல்பெர்டாவின் மிகப் பெரிய நகரமே கால்கரிதான்.  டொரோன்டோவுக்கும் மான்ட்ரீலுக்கும் அடுத்தபடியாக மூன்றாம் பெரிய நகராட்சி இது.  எரிசக்தி, நிதி சேவைகள், திரைப்படம், தொலைக்காட்சி, போக்குவரத்து, தொழில் நுட்பம், உற்பத்தி ஆலைகள், மருத்துவம், சுற்றுலா போன்றவை இந்நகரத்தின் பிரதான செயல்பாடுகள். ஒரு காலத்தில் கேல்கரி நகரத்தில் மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்ததால் 1896 முதல் 1914 வரையிலும் வேளாண்மைக்கும், பண்ணைகள் வைப்பதற்கும் இலவசமாக நிலங்கள் வழங்கினார்கள்.  எங்கிருந்தெல்லாமோ மக்கள் குவியத் தொடங்கினார்கள்.  1912 ஆம் ஆண்டு நான்கு சிறிய பண்ணையார்கள் சேர்ந்து ஒரு வேளாண்மை கண்காட்சி நடத்தினார்கள்.  அது இன்றளவும் ஒவ்வொரு ஜூலை மாதமும் கேல்கரி நெரிசல் என்று கொண்டாடப்படுகிறது.  உலகிலேயே இதுதான் மிகப் பெரிய வேளாண் கண்காட்சியாம்.

கேல்கரியின் இன்றைய முக்கியத்துவம் எண்ணெய்க் கிணறுகளால் வந்தது.  இங்கு கனடாவின் 95ரூ எண்ணெய் உற்பத்தி நடந்ததால் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வளர்ந்தது.  வேலை வாய்ப்புகள் பெருகியது.  வானை முட்டும் கட்டடங்களும் அலுவலகங்களும் கட்டப்பட்டன.  கேல்கரி நகரம் ஜொலிக்க ஆரம்பித்தது. மக்கள் தொகையில் ஏறக்குறைய 60 சதவிகிதம் ஐரோப்பியர்களாக இருக்கிறார்கள்.  முப்பத்தாறு சதவிகிதமளவு வெள்ளைக்காரர்கள் அல்லாதவர்களும், பழங்குடியல்லாதவர்களும் நான்கு சதவிகிதம் பழங்குடி இனத்தவர்களும் இருக்கிறார்கள்.  ஆசியாவிலிருந்து சென்றவர்களில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் அதிகம். 2012 இல் கேல்கரி கனடாவின் பண்பாட்டுத் தலைநகரமாகவே இருந்திருக்கிறது.  இங்கிருக்கும் பொது நூலகம் புத்தகங்கள் வழங்குவதைக் கணக்கிட்டால் கனடாவின் இரண்டாவது பெரிய நூலகம் என்கிறார்கள்.  தென் அமெரிக்காவின் ஆறாவது பெரிய நூலகம்.  நூலகம் என்றால் வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல, ஆடியோ, வீடியோ கேசட்டுகள், மின் புத்தகங்கள், புளு ரே போன்றவையும் கிடைக்கும்.  கண்ணில் ஒற்றிக்கொள்ளும் படியான அழகழகான வடிவமைப்பில் புத்தகங்களைப் பார்க்கலாம். மிகப் பிரம்மாண்டமான நுண்கலைக்கான ஜேக் சிங்கர் கன்சர்ட் ஹால் ஒன்று உள்ளது.  தெற்கு அல்பெர்டா வெள்ளிவிழா அரங்கத்தில் அல்பெர்டா பேலட் கம்பெனி, கேல்கரி ஓப்பரா, கிவானிஸ் இசை விழா ஆகியவை நடைபெறுவதாக சொல்கிறார்கள்.  இவையெல்லாம் இரவில் உறங்குவதில்லை, கனடா வாசிகளை உறங்க விடுவதுமில்லை. கலை மையங்கள், திரைப்படக் கம்பெனிகள், நடன மையங்கள் என ஏராளமான கலை நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

அவர்கள் வாழ்க்கையின் ரசிகர்கள்.  வார விடுமுறைகளில் எல்லோருமே சுற்றுலாத் தலங்களில் காலம் கழிக்கிறார்கள்.  எந்தக் கல்லூரிக்கும் கேப்பிடேசன் கட்டணம் கொடுக்க வேண்டியதில்லை.  மருத்துவ செலவுகளுக்காக வீடுகளை விற்கத் தேவையில்லை.  வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறார்கள். தற்போது எண்ணெய் உற்பத்தி நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக அறிந்தோம்.  அதனால் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.    நகரத்தைப் பார்ப்பதற்கு வாழ்ந்து கெட்ட நகரம் போல என்னவோ போலிருந்தது.  மனிதர்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவே பார்க்க முடிந்தது.  இத்தனைக்கும் டவுன் டவுன் என்று சொல்லக் கூடிய பிரதான பகுதிதான் அது.    ஒரு கறுப்பின மனிதர் தன் இஷ்டத்துக்கும் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே போனார்.  அவர் மனநலம் இழந்திருக்க வேண்டும்.  அந்த நகரமே ஒரு மனநலம் இழந்த நகரம் மாதிரி எனக்குத் தோற்றம் தந்தது.  இந்த வெறுமையிலிருந்து விடுபட்டாக வேண்டும் என்று தோன்றியது. அங்கிருந்துதான் பேன்ஃப் நகரம் போயாக வேண்டும்.

பேன்ஃப் நகரம் போவதற்கான பேருந்துக்குக் காத்திருந்தோம்.  பேருந்தில் ஏற்றிவிடுகிற வேலைக்கு உதவி செய்வதற்காக இரண்டு பேர் இருந்தனர்.  அதில் ஒருவர் இந்தியர்.  அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்.  ஆனால் அவர் தமிழகம் இராமேசுவரத்திற்கு வந்து போயிருப்பதாகச் சொன்னார்.  ஒரு வழியாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம்.  அந்தப் பகுதிகள் அனைத்தும் மலைகளும் பச்சைப் பசேல் சமவெளிகளுமாக இருந்தன.  மலைகள் மீது பனிப் பாளங்கள் தொட்டில் கட்டி ஆடின.  எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் கண்களுக்குச் சலிக்காத விருந்தாகத்தான் இருந்தது. மூடிவைத்த எண்ணெய்க் கிணறுகளைப் பார்க்க முடிந்தது.  எதிரே அலைபாயும் சிறு ஏரி.  நகரம் வளர்கிறபோது வனங்கள் அழிகின்றன.  மக்கள் தொகை பெருகுகிறபோது பெரும்பாலான பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளாக மாறுகின்றன.  கனடாவில் குறைந்த மக்கள் தொகை இருப்பதால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடுகள் அந்தளவிற்குப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கவில்லை.  அரசு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.  கார்களில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப் படுகின்றன.  ஆறுகளிலும், ஏரிகளிலும் சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதில்லை.  இந்தியாவில் நிலைமை தலைகீழ்.  திருப்பூரை நினைத்துப் பார்த்தால் பகீர் என்கிறது.  பிளாஸ்டிக் பைகள் தின்று மாடுகள் மட்டுமல்ல.  இந்தியாவே திணறிக் கொண்டிருக்கிறது. பேன்ஃப் நகரத்தை நெருங்கிவிட்டோம்.  அதோ ஒரு அழகிய மலை.  வெண்மையான முடிக்கற்றைகள் போல பனி அருவிகள் வழிந்துகொண்டிருந்தன.  . இந்த ரம்மியத்தைத்தான் நாளை முழுவதும் வலம் வரப் போகிறோம்.   மனசுக்குள் குளிரெடுத்தது. உண்மைதான். பேன்ஃப் நகரம் என்பது கண்கள் காண விரும்பும் கவர்ச்சி மிகுந்த கனவு அல்லவா ?

-பயணிப்போம்

;