tamilnadu

img

ஜி7 நாடுகள் வழங்கும் நிதியை நிபந்தனையுடன் ஏற்க தயார் - பிரேசில் அதிபர்

அமேசான் காட்டுத் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் நிதியை ஏற்க தயார் என பிரேசில் அதிபர் ஜெயர் பொல்சோனாரோ தெரிவித்துள்ளார். 

பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் கடந்த 15-ஆம் தேதி முதல், காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. உலக நாடுகளுக்கு தேவையான ஆக்ஜிசனில் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் அமேசான் காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதற்கிடையே,  பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெற்ற ஜி7 கூட்டத்தின் போது அமேசான் காட்டுத் தீ பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில், அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி  வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது. ஆனால், ஜி7 நாடுகளின் உதவியை  பிரேசில் அதிபர் ஜெயர் பொல்சோனரோ நிராகரித்துவிட்டார். 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயர் பொல்சோனாரோ, ஜி7 நாடுகள் வழங்க முன்வந்துள்ள நிதியை தாங்கள் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிதியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக  சில நிபந்தனைகள் இருப்பதாக அவர் கூறினார். முதலாவதாக, தனக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக பிரான்ஸ் அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தன்னை பொய்யர் என்றும், பின்னர் அமேசானில்  தங்களது இறையாண்மை என்பது வெளிப்படையானது என்றும், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தக் கருத்துகளை திரும்பப் பெற்றபிறகே, பிரான்ஸ் நாட்டுடன் பேச முடியும் என்று தெரிவித்துள்ளார்.
 

;