tamilnadu

img

குடந்தை சுந்தரேசனார் பிறந்தநாள் - காலத்தை வென்றவர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குடந்தையில் வாழ்ந்த பஞ்சநாதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகன். இவரது தாயார் பிறந்த ஊர் சீர்காழி. இவ்வூரில்தான் இவரும் பிறந்தார்.  இவரது வீட்டருகே தேவாரப் பாடசாலையும், சைவச்சார்புடைய மடத்துத் துறவி யர்களின் தொடர்பும் அமைந்ததால் சைவத் திருமுறைகள், சாத்திர நூல்களில் இவருக்குப் பயிற்சி ஏற்பட்டது. அதனால் தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் அறிந்து கொண்டார். இவர் சிலப்பதிகாரம், திருமுறைகள், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றில் சிறந்த இசைப்பயிற்சி பெற்றவர். இந்நூல்களின் பாடல்களை இவர் வழியாகக் கேட்கவேண்டும் என்று அறிஞர்கள் புகழும் வண்ணம் பேராற்றல் பெற்றவர். இவர் ஒவ்வொரு ஊராகச் சென்று, பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல் களைப் பாடி விரிவுரை செய்தவர். மூவர் தேவாரத்தை முறையுறப் பாடி அதில் அமைந்து கிடக்கும் பண்ணழகையும், பண்ணியல்பையும் எடுத்துக்காட்டுவதில் வல்லவர். குமரகுருபரரின் தொடுக்கும் கடவுள் பழம்பாடலை இவர் குரலில் கேட்கத் தமிழிசையின் ஆற்றல் விளங்கும்.

விபுலானந்த அடிகள், தாம் எழுதிய யாழ்நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக அரங்கில் அரங்கேற்றம் செய்தபோது சுந்தரேசனார் பண்ணிசைத்து உறுதுணை புரிந்தார். இவரது பண் ணாராய்ச்சித் திறன் அறிந்தோர் இவருக்குப் பண்ணாராய்ச்சி வித்தகர் என்னும் சிறப்புப்பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர்.

சுந்தரேசனாரின் இசையில் ஈடுபாடுகொண்ட பலரும் பல ஊர்களில் இவரை அழைத்துத் தொடர் சொற்பொழிவாற்ற வேண்டினர். அவ்வகையில் ஆடுதுறையில் 1946 ஆம்  ஆண்டில் அப்பர் அருள் நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை வைத்திய லிங்கம் இப்பணியில் முன்னின்றார். நாகப்பட்டினத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர் கோவை. இளஞ்சேரன் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப .சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந் தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். குறிப்பாக அனைவராலும் புறக்கணிக்கப்படும் சிலம்பின் அரங்கேற்று காதை அனைவராலும் விரும்பும் படி நடத்தப்பட்டது.

இசைத்தமிழ்ப் பயிற்சி நூல் (1971), முதல் ஐந்திசைப் பண்கள் (1956), முதல் ஐந்திசை நிரல், முதல் ஆறிசை நிரல், முதல் ஏழிசை நிரல் ஆகிய நூல்களை எழுதிய சுந்தரேசனார் பல  தொடர் கட்டுரைகளை யும் எழுதியுள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா 12.08. 2014 நாளில் சிறப்பாக நடைபெற்றது. வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் 27வது தமிழ் விழா ராபர்ட் கால்டுவெல் நூற்றாண்டு விழாவாகவும், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவாகவும், ‘தமிழர் அடையாளம் காப்போம்; ஒன்றிணைந்து உயர்வோம்’ என்ற மைய நோக்குடனும் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பெரணமல்லூர் சேகரன்

;