tamilnadu

img

ஓடுதளத்தில் ஒரு பொம்மை விமானம் -நா.வே.அருள்

ஹாங்காங் விமான நிலையம் (வலையில் பிடித்தது)

சென்னை விமான நிலையத்திற்குள் நுழைகிறபோதே பதற்றம் தொற்றிக்கொள்கிறது.  இனம் தெரியாத உணர்வு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.  வழியனுப்ப வந்தவர்களும் பயணம் செய்ய இருப்பவர்களும் உணர்ச்சியில் ஊஞ்சாலாடிக் கொண்டிருந்தார்கள்.  காமிரா முன் நின்று போஸ் கொடுப்பவர்களும் கட்டித் தழுவிக்கொள்பவர்களுமாக விமான நிலையம் உணர்ச்சியில் உறைந்து கொண்டிருந்தது.  எங்களுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம். மகன் அருள்பாரதியின் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள நானும் என் மனைவி ஹேமாவதியும் கனடாவை நோக்கிப் பறக்க இருந்த விமானத்திற்காகக் காத்திருந்தோம். மகன் அருள்பாரதி கனடாவில் கணினி அறிவியலில் எம் எஸ் முடித்து அங்கேயே மருமகள் விஜய்தாவுடன் பணியாற்றி வருகிறார். 

கனடாவுக்கு நாங்கள் ஏறவிருந்த விமானத்தில்தான் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் சா.கந்தசாமியும் பயணம் செய்யவிருப்பதாக தகவல் கிடைத்தது.  உடனே “சாயாவனம்’’ நெஞ்சில் நிழலாடியது.  சாயாவனத்தைத் தாண்டி உலகம் நெடுந்தூரம் வந்துவிட்டிருந்தது.  ஆனால் இப்போதும் எரியும் வனத்தின் தீய்ச்சல் நாசியில் துளைத்து இதயத்தில் ஒரு எரிந்து முடிந்த கரிக்கட்டையாக மிதந்து கொண்டிருந்தது. விமானம் ஏறுகிற சிறிது நேரத்திற்குமுன் அவரைச் சந்திக்க முடிந்தது. கனடாவில் சந்திப்போம் என்று அவரவரும் இருக்கைகளைத் தேடி அமர்ந்து கொண்டோம். ஆறு மணி நேரத்தில் காலை ஒன்பது மணியளவில் ஹாங்காங் விமான நிலையத்தில் பயண இடைவேளை நேரம்.  கனடாவுக்கான எங்கள் அடுத்த விமானத்திற்கு இன்னும் ஆறு மணி நேரம் இருந்தது.  அவசர அவசரமாக அடுத்த விமானத்திற்காகச் செல்லும் வாசலைத் தேடியபடியே சா.கந்தசாமி  தனது துணைவியாருடன் வந்து கொண்டிருந்தார்.  அவர்களுக்கான ஐம்பதாம் வாசலைக் காட்டி வழியனுப்பிவைத்தோம். ஹாங்காங் விமான நிலையத்தில் வாழ்க்கையை விமானங்கள் எங்கெங்கேயோ சுமந்து செல்கின்றன. 

ஹாங்காங் விமான நிலையம் அசத்தலாக இருந்தது.  மொத்தம் ஐநூற்று முப்பது வாயில்கள்.  நமது கோயம்பேட்டில் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தது போல எண்ணற்ற விமானங்கள். பெரிய பெரிய எந்திரத் தும்பிகளைப்போல விமானங்கள் நகர்ந்து கொண்டும் பறந்துகொண்டும் இருந்தன. குறைந்தபட்சம் ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானமாவது பறந்துகொண்டிருந்தது. அசையாத சிறகுகளின் அலுமனியப் பறவைகளைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது.  “மின்துகள் பரப்பு” கவிதைத் தொகுப்பில் இந்திரனின் கார்களைப் பற்றிய கவிதைகள் நினைவுக்கு வந்தன.  நவீன எந்திரங்கள் மனிதனின் பாடுபொருள்கள் ஆகவில்லை என்று குறிப்பிட்டிருப்பார்.  ஆகாய விமானம் இன்னும் சாதாரண மனிதர்களுக்கு எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருப்பதால் அவர்களின் பாடு பொருளாக எப்படி மாற முடியும்?  எனக்கும் ஆகாய விமானத்திற்குமான தொடர்பு சின்ன வயதிலிருந்தே தொடங்கிவிட்டது.   சின்ன வயதில் எங்கள் ஊரில் சத்தம் வருகிறபோது அண்ணாந்து பார்ப்போம். வானத்தில் வண்டு ஒன்று பறந்து போவதுபோல உயரத்தில் ஏரோப்ளேன் பறந்து போகும்.  டேய் பிளேன் போவுதுடா என்று குட்டீஸ் எல்லாம் சேர்ந்து கூச்சல் போடுவோம்.  அத்துடன் சரி ஆகாய விமானம். உடனே தரையிறங்கிவிடுவோம். அடுத்து வேறு ஒரு விளையாட்டு ஆரம்பமாகிவிடும்.  

எனது பேத்திகள் இருவருக்கும் ஹாங்காங் விமான நிலையத்தை அலைபேசியில் நேரலை மூலம் சுற்றிச் சுற்றிக் காட்டினேன்.  வருகிற போது எத்தனை விமானங்கள் வாங்கிவரவேண்டுமென்று இருவரிடமும் குறித்துக் கொண்டேன்.  ஆளுக்கு மூன்று மூன்று என்று ரொம்பக் குறைச்சலாகத்தான் கேட்டிருந்தார்கள்.  பொம்மை விமானங்களுக்குக் கூட டாலர்கள் போதா என்கிற விஷயம் நமக்குத்தான் தெரியும்.  குழந்தைகளின் குதூகல உலகத்தில் ஆகாய விமானம் என்ன ஆண்டவனைக்கூட சர்வ சாதாரணமாகப் படைத்து விடுவார்கள்.  படைப்பது குழந்தைகள் பாடு.  விற்பது பெரியவர்கள் வேலை. படைத்ததை விற்பதற்குத்தான் இந்த உலகம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.   பறவைகளின் உலகமே தனி.  கண்டம் விட்டுக் கண்டம் வருவதற்கு எந்தப் பறவை விமானச் சீட்டு, கடவுச் சீட்டு எடுத்துக்கொண்டிருக்கிறது? பாவம் மனிதர்கள். முதல் முதலாய் வெளிநாடு போகிறவர்கள் வாழையிலையில் கையும் நெய்யும் வழிய வழியச் சாப்பிடும் தி.ஜானகிராமனின் தஞ்சாவூர் கதாபாத்திரங்களாக இருந்தால் கஷ்டப்பட வேண்டியதிருக்கும். விமானத்தில் பெண்கள் ஆங்கிலத்தை அழகாக உச்சரிப்பார்கள்.  அதைக் கேட்டுக் கொண்டே உணவை உள்ளே தள்ளிவிட வேண்டும்.  வெஜிடேரியன் இந்தியன் இந்து உணவு என்று எழுதப்பட்டிருக்கும் அந்த உணவுக் காகிதப் பெட்டிக்குள் தோசை இருக்காது.  தோசை மாதிரி இருக்கும்.  பொங்கல் இருக்காது. பொங்கல் மாதிரி இருக்கும்.  சிக்கன், மட்டன் பழக்கப் பட்டிருந்தால் ஒரு வெட்டு வெட்டிக்கொள்ளலாம். 

மாலை நான்கு மணியளவில் மறுபடியும் காத்தே பசிபிக்கில் அமர்ந்து கனடா நோக்கிப் பறக்கத் தொடங்கினோம்.  மறுநாள் மதியம் இரண்டு மணியளவில் கனடா விமான நிலையம்.  வரிசை வரிசையாய் கணினிகள்.  இமிகிரேஷன் படிவத்தைப் பூர்த்தி செய்தபின் லக்கேஜ்களைக் கன்வேயர் பெல்ட் மூலம் சேகரித்தபின் வெளியில் வந்தோம்.  வெளியே மகன் அருள்பாரதி, மருமகள் விஜய்தா, நண்பரின் மகன் விநோத்குமார்.  கனடா மண்ணின் கால் டாக்சியில்   அரைமணி நேரப் பயணத்தில் வீடு வந்து சேர்ந்தோம்.  வருகிற வழியில் வலது பக்கப் பயண விதி.  நம்மூருக்கு நேரெதிரான விதி.  பல விஷயங்களிலும் நம் ஊரும் கனடாவும் நேரெதிர்தான் என்று அப்போது எனக்கு விளங்கவில்லை.  போகப் போகப் புரிய ஆரம்பித்தது.

 பயணிப்போம்...

;