tamilnadu

img

அத்திவரதரும் பஞ்சமர்களும் - கே.பி.பெருமாள்

தற்போது தமிழகத்தில் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்களில் அத்திவரதர் நீலம், பச்சை, ஊதா, மஞ்சள் நிறப்பட்டு உடுத்தி படுத்த நிலையில் காட்சியளித்தார் என்றும், ஆகஸ்ட் 1 முதல் 17ம் தேதி வரை நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் என்றும் தினமும் செய்திகள் வருகின்றன. இன்றோடு 34 நாட்கள் ஆகிறது. 45 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து தரிசனம் செய்தனர் என்பதும் செய்தியாக உள்ளது.  காஞ்சிபுரம் பட்டுக்கு பெயர் போன மாநகரமாகும். இந்த நகரில் ஏராளமான கோவில்களும், பன்னெடுங் காலமாக உள்ளதை அறிவீர்கள். அத்திவரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து 48 நாட்கள் காட்சியளிப்பது என்பது  1979ல் நடந்துள்ளதாகவும், அப்போது 20 லட்சம் பேர் தரிசனம் செய்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. அதற்கு முன்பு 1939ல் காட்சியளித்தார் என்றும் , 1781ம்  ஆண்டு முதன்முறையாக காட்சியளித்தார் என்று கல்வெட்டு செய்தி உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனை தவிர நம்பும் படியாக வேறு செய்திகள் இல்லை. 2019 ஜுலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை காட்சியளிப்பார் என்று அறிவிக்கப் பட்டு பொதுமக்கள் தரிசனம் செய்துவருகிறார்கள். 

40 ஆண்டுக்கு ஒருமுறை

15ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பல மன்னர்களின் படைஎடுப்புகள் நடந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. முகலாய மன்னர்கள், கோல்கொண்டா சுல்தான், விஜயநகர மன்னர்கள், ஆற்காடு நவாப், மராட்டியர்கள், பின்னர் ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள் என்று பலரும் படைஎடுத்து தாங்கள் பிடிக்கும் பகுதியில் உள்ள கோயில்களில் இருக்கின்ற தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட சுவாமி சிலைகளை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கோவில் நிர்வாகத்தினர் இந்த கொள்ளையிலிருந்து பொருட்களை, சாமி சிலைகளை பாதுகாக்க மூட்டைகளில் கட்டி புதைப்பது அல்லது கிணறு, குளங்கள், ரகசிய அறை உள்ளிட்டவைகளில் பதுக்கி வைப்பது, பின்னர் பிரச்சனைகள் தீர்ந்த பின்னர் அல்லது தேவைப்படும் போது எடுத்து கோவில்களில் பயன்படுத்துவது என செயல்பட்டுள்ளனர். இப்படித்தான் அத்திமரத்தால் ஆன அத்திவரதரையும் நீரில் மூழ்கடித்து வைத்து விட்டு அதற்கு பின் பயன்படுத்தியிருக்கலாம். இவர் மாத்திரம் அல்ல, தமிழகத்தில் இந்தியாவில் இதுபோன்ற வழிபாடுகள் இன்னும் பல இருக்கின்றன.  அத்திவரதரை ஒருமுறை தரிசித்தால் சொர்க்கத்தில் இடமுண்டு. இருமுறை தரிசித்தால் மறுபிறப்பில்லை. மூன்று முறை தரிசித்தால் விண்ணுலகில் தேவராகலாம் என்று மக்களை நம்ப வைக்கிற வேலைகளை இந்து அடிப்படை வாதிகள் பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அத்திவரதருக்கு எல்லாவிதமான விளம்பரங்களும் கிடைப்பதால் மக்கள் ஏராளமாக வருகிறார்கள். இதுவும் திட்டமிட்ட ஏற்பாடா கத்தான் இருக்கிறது.

பஞ்சமர்களின் பாடு

அத்திவரதர் இன்று கோலோச்சும் காஞ்சி மாநகரில் மட்டுமல்ல அந்த மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் அத்திவரதர் எந்த காலத்திலிருந்து காட்சியளித்து வருகிறார் என்று சொல்லும் காலம் முதல் இன்றுவரை சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து 1888ம் ஆண்டில் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த லீவார்னர் கூறியது வருமாறு:  தொழிலாளர்கள் மிக கொடிதான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அக்குடிசைகளில் திரும்புவதற்கு கூட இடம் இராது. தங்கள் எஜமானர்களைத் திருப்திப்படுத்த தவறினால் அந்த இடத்தை விட்டு ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டுவிடுவார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். உடுத்துவதற்கு சரியான உடை இல்லை. வாழ்வதற்கு தேவையான மருந்துகள் இல்லை. சத்துக்குறைவான உணவை உட்கொண்டே மனநிறைவ டைந்திட நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.  1889ல் துணை ஆட்சித் தலைவராக இருந்த முல்லாலி  தெரிவிப்பது யாதெனில், உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஈட்டும் ஊதியம் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கூட போதுமானதாக இல்லை. குடிசைகளில் அவர்கள் கூட்டம் கூட்டமாக வாழுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். வாடகையின்றியே அக்குடிசைகளில் அவர்கள் தங்கலாம் என்று அரசு எண்ணினாலும், அவர்கள் வாடகைப் பணம் செலுத்த பலமுறை கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மிராசுதாரர்களின் உத்தரவின் பேரில் இம்மக்கள் மிகச் குறைந்த ஊதியத்திற்கோ அல்லது எந்தவித ஊதியமின்றியோ தங்கள் உழைப்பை தரக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 

படியாள்... அடமானம்...

விவசாயக் கூலிகள் இருவகைப்படுவர் சுயாதீனக் கூலிகள், கொத்தடிமைகள். சுயாதீனக் கூலிகளுக்கு சென்னையை ஒட்டிய பகுதியில் நல்ல சம்பளமும் பிற பகுதியில் சுமாரான சம்பளமும் கிடைக்கும். கொத்தடிமையோ மாறுபட்டது. அடிமைமுறை சமன்படுத்தப்பட்டு, பின்னர் அழிக்கப்பட்ட போது இவர்கள் தங்களுடைய பழைய எஜமானர்களின் கீழேயே வேலையைத் தொடர்ந்தார்கள். அவர்களுடைய வாரிசுகள் “படியாள்” என்ற பெயரில் அதே வேலையைத் தொடர்கிறார்கள்.  ரூ.10 அல்லது ரூ.15 கடனை தீர்ப்பதற்கோ அல்லது தங்களது திருமண செலவுக்கோ, அல்லது சகோதரர்கள், பிள்ளைகளின் திருமண செலவுகளுக்கோ பணம் கிடைக்காமல் திண்டாடும் ஏழை இனத்திலிருந்தே இவ்வாறு உழைப்பவர்களை தேர்வு செய்கிறார்கள். அவர்களது பாசையில் சொல்ல  வேண்டுமென்றால் அதாவது ஏழை விவசாய கூலிகள் தங்களைத் தாங்களே ‘அடமானம்’ வைத்துக் கொள்கிறார்கள். சில வேளைகளில் ஆண்கள் தங்களின் மகன்களை அடமானம் வைக்கிறார்கள்.  ஒரு எஜமானிடமிருந்து பணி ஓய்வு பெற ஒரே வழிதான் உண்டு வேறொரு எஜமானரை அவர் இனம் கண்டுகொள்ள வேண்டும். இதை விடுத்து வேறு வழிமுறைகளைக் கையாண்டால் அந்த விவசாய கூலி மீது கிராம நீதிமன்றத்தி லோ அல்லது தாலுகா நீதிமன்றத்திலோ ஒப்பந்தம் மீறப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். எளிதில் மாற்ற முடியாத பகுத்தறிவுக்கு ஒவ்வாத சட்டத்தை மிராசுதாரர்கள் அமல்படுத்தி வந்தனர். 

நாய் மாதிரி கீழ்ப்படிந்து...

இது குறித்து ஹிந்து நாளிதழ் குறிப்பிடுவது என்ன வென்றால் “இந்து சமூகத்திற்கும் தாழ்த்தப்பட்ட இனத்திற்கும் இடையே கொஞ்சம் கூட அன்பு இல்லை”. தாழ்த்தப்பட்டவன் என்பவன் நிலத்தைவிட்டு துரத்தப்பட்ட வனாகவும்,தொடர்ந்து துன்பங்களைத்  தரும் ஒப்பந்தங்க ளால் பிணைக்கப் பட்டவனாக தன் எஜமானரின் கருணையை மட்டுமே நம்பி, தான் வாழும் குடிசையை அமைத்துக் கொண்டு நாய் மாதிரி கீழ்ப்படிந்து, பட்டினிச் சாவிலிருந்து சிறிதளது காப்பாற்றக் கூடிய கூலிக்காக வேலை செய்கிறவனாகவும் இருக்கிறான். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 6,17,000 ஏக்கர் பட்டா நிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவர் வெறும் 14500 ஏக்கர் நிலத்தை மட்டுமே தங்களுக்கு சொந்தமாக்கியுள்ளனர். அதாவது 25 சதவீதம் மக்கள் தொகை உள்ள தாழ்த்தப் பட்டவர்கள் 2 சதவீதம் நிலத்தை மட்டுமே உடையவர்களாக இருக்கிறார்கள்.
 

திரமென்ஹீர் பரிந்துரைகள்

1892 செப்டம்பர் 30ஆம் நாள் ஜே.எச்.ஏ.திரமென்ஹீர் என்பவர் அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கஷ்டங்களை ஆய்வு அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பித்தார். இந்த ஆய்வ றிக்கையே ‘செங்கல்பட்டு பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ என வருவாய் துறை அரசாணையாக (1010/1010-ஏ) வெளியிடப்பட்டது. இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் நிலவுரிமை, கல்வி போன்ற கருத்தாக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் கலெக்டர் திரமென்ஹீர். இவருடைய பரிந்துரையின் படி “பஞ்சமி நிலம்” அல்லது “டி.சி.நிலம்” (தாழ்த்தப்பட்ட பிரிவினர் நிலம்) சுமார் 3,20,000 ஏக்கர்  இலவசமாக வழங்கப்பட்டது. பஞ்சமர் நிலம் இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மாகாணத்தில் தான் வழங்கப்பட்டது. அதன் பின் நாடு முழுவதும் 25 லட்சம் ஏக்கர் வரை அப்போது வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் அதற்கு பிறகும் இந்த நிலத்தை தலித்துக்கள், தலித் அல்லாத வர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. வேறு வகையில் கைமாற்றித்தரக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலத்திற்கு குறைவான வரி விதிக்கப்பட்டது. அரசு பதிவேடுகளில் தனியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று இந்த நிலத்தின் பெரும்பகுதி சாதிஆதிக்க சக்தியினரின் ஆதிக்கத்தில் உள்ளது. 

பஞ்சமி நிலமீட்பு

காரணைகிராமத்தில் 1994இல் ஆரம்பித்த பஞ்சமி நிலமீட்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக செங்கல்பட்டில் 10.10.1994ல் நடந்த போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஏழுமலை, ஜான்தாமஸ் என்ற இரண்டு போராட்டக் காரர்கள் பலியானார்கள். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பஞ்சமி நிலமீட்புப் போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. ஆனால் ஆதிக்க சக்தியினரிடமிருந்து பஞ்சமி நிலத்தை அரசால் கைப்பற்ற முடியவில்லை. 

அத்திவரதரிடம் கேள்வி

அத்திவரதர் அவர்களே, இந்த 48 நாட்களில் உங்களை பல லட்சம் மக்கள் வழிபடுகிறார்கள். அந்த பல லட்சத்தில் சில லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களும் அடங்குவர். அவர்கள் பயன்படுத்திய நிலங்கள் (பஞ்சமி நிலம்) நீங்கள் அருள் ஆசி வழங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளம் உள்ளது. அந்த நிலங்களை, சாதி ஆதிக்க சக்திகடமிருந்து வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பீர்களா? நீங்கள் ஆட்சிபுரியும் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக எத்தனை வகையான கொடுமைகளை  அவர்கள் அனுபவித்துள்ளனர். அந்த கொடுமையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க தாங்கள் ஏன் முன்வரவில்லை? கல்வி, வேலைவாய்ப்பு, பண்பாடு உள்ளிட்டவைகளில் இன்றைக்கும் உங்களை வைத்து ஆளும் கூட்டம் அடாவடி செய்கிறதே? ஆண்டாண்டு காலமாக தலித்துகள் அடிமையாகவே இருக்க வேண்டுமா? உம்மை தரிசிக்க வருகிற அப்பாவி மக்கள் செத்துமடிகிறார்களே? இதை எல்லாம் ஏன் வேடிக்கை பார்க்கிறீர்? நிறைவாக நீங்கள் யாருக்காக இப்போது காட்சியளிக்கிறீர்கள்? இந்த கேள்விகளுக்கு உம்மால் பதில் சொல்ல முடியாது. “எங்களை பாதுகாக்க, எங்கள் உரிமைகளை மீட்டெடுக்க முதலில் நாங்கள் ஒன்று திரள வேண்டும். அப்போது பஞ்சமி நிலம் என்ன? கல்வி, வேலைவாய்ப்பு என்ன? பண்பாடு, கலாச்சாரம் என்ன? ஆட்சி அதிகாரம் என்ன? அனைத்தும் எங்களுக்கு வசப்படும். வசப்படுத்துவோம். 

கட்டுரையாளர் : மாநில பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
 

;