tamilnadu

img

100 ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சில சாட்சிகள் -2 சர்க்கரைச் செட்டியார் மகத்தான போராட்டத் தோழர் - சு.பொ.அகத்தியலிங்கம்

சைவத்தில் தோய்ந்த திரு.வி.க மதங்களை மீறி தொழிலாளர் இயக்கத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது சக தோழர் சக்கரைச் செட்டியார் கிறிஸ்துவத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தவர். ஆனால் உழைப்பாளி மக்கள் போராட்டங்களில் சிதையா நெஞ்சுடன், குன்றென நிமிர்ந்து நின்றார். 1922 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாரதியாரின் தேசிய கீதங்கள் நூலுக்கு முன்னுரை எழுதியவர் சக்கரைச் செட்டியார். ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். பரிதிமாற்கலைஞரிடம் தமிழ் கற்றவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர் சட்டம் பயின்றார். சிறிது காலம் வழக்குரைஞராகவும் செயல்பட்டார். ஆனால் பொதுத்தொண்டு அவரை ஈர்த்தது. ஆரம்பத்தில் விடுதலைப் போரில் ஈர்க்கப்பட்டு சென்னை நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் இருந்துள்ளார். 1924 ல் திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை ஏற்ற சக்கரைச் செட்டியார், காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்கிற தீர்மானத்தை ஆதரித்தார். 1927ல் காங்கிரஸை விட்டு விலகிவிட்டார். “காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்களை பெரிய தலைவர்கள் அடக்குகின்றனர் ” என்று குற்றம்சாட்டி காங்கிரசிலிருந்து விலகி நீதிக் கட்சியில் சேர்ந்தவர் ஓராண்டில் அங்கிருந்தும் விலகிவிட்டார். பின்னர் தன் வாழ்வின் இறுதிவரை தொழிலாளர்களுக்கு உழைப்பதிலேயே செலவிட்டார்; எந்தக் கட்சியிலும் சேரவில்லை.  “எனக்கு முன்பின் தெரியாத இரண்டு பேர் அன்றைய தினம் காலை என்னைக் காண வந்ததை என்னால் மறக்க முடியாது . கஷ்டத்துக்கும் ஆளாகும் தொழிலாளர்கள் பற்றி என்னிடம் கூறினார்கள் .பக்கிங்காம் கர்நாடிக் ஆலை பற்றி என்னிடம் கூறினார்கள்.

நான் அந்த ஆலையை முழுமையாக அறியவில்லை என்றாலும் சிறிது கேள்விப்பட்டிருக்கிறேன். உணவு இடைவேளைக்கு சிறிது நேரமே வழங்கப்படுகிறது. ஒரு கவளம் வாயில் போட்டுக் கொள்வதற்குள் நேரம் முடிந்து விடுகிறது . தொடர்ந்தால் வாயில் மூடப்பட்டு வெளியேதான் நிற்க வேண்டும். இத்தகைய நிலையில்தான் தொழிலாளர்கள் உள்ளதை அறிந்தேன். உடனடியாக காரை வரவழைத்தேன். அறிமுகம் இல்லாத அந்த இருவரையும் அழைத்துக் கொண்டு பெரம்பூர் விரைந்தேன்.” இவ்வாறு ‘லேபர் இன் மெட்ராஸ்’ புத்தகத்தில் பி.பி.வாடியா குறிப்பிடுகிறார். திரு.வி.கவும் சக்கரைச் செட்டியாருமே அவ்விருவர். இது 1918 பிப்ரவரி அல்லது மார்ச் ஆக இருக்கக்கூடும். அதைத் தொடர்ந்தே தமிழகத்தின் முதல் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது .இருவரும் அதில் பெரும் பங்காற்றினர்.  சென்னையில் ரிக்ஷா தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர் ,அப்பளத் தொழிலாளர், கள் இறக்கும் தொழிலாளர், மூக்குப்பொடித் தொழிலாளர் என எங்கும் சங்கம் கண்டதில் சக்கரைச் செட்டியாரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஏஐடியுசி என்கிற மத்திய தொழிற்சங்கம் 1920 அக்டோபரில் உருவானது. இதன் மாநிலத் தலைவராக 1943- 45 மற்றும் 1951-56 காலகட்டத்திலும் துணைத் தலைவராக 1945 லும் செயல்பட்டார். சங்கம் தடை செய்யப்பட்ட 1948-49 ஆண்டுகளில் கடும் அடுக்குமுறையை எதிர்கொண்டு, உரிமையை நிலை நாட்ட உறுதியுடன் போராடியவர். 1920 ல் சென்னையில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்குவதிலும் திரு.வி.க, மிருணாளினி சட்டோபாத்யாயா ஆகியோருடன் சக்கரைச் செட்டியாரும் பெரும் பங்கு வகித்தார்.  இவரையும் திரு.வி.கவையும் 1921 ல் நாடு கடத்த பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டது என்பதும்; லார்டு வில்லிங்டன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்பதும் ; நீதிகட்சி அமைச்சர்களாக இருந்த பனகல் ராஜாவும் தியாகராஜ செட்டியாரும் கடும் எதிர்ப்புக் காட்டியதால் கடைசி நொடியில் முயற்சி கைவிடப்பட்டது என்பதும் வரலாறு. சென்னை பெத்துநாய்க்கன் பேட்டையிலிருந்து சென்னை மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்; மாநகர மேயராக செயல்பட்டவர்; 1952-56 ல் சட்ட மேலவை உறுப்பினராகச் செயல்பட்டவர்.

அவர் மேயராக இருந்த போது ஒரு பிறந்த நாள் விழாவில் தியாகராய நகர் சாலை ஒன்றுக்கு அவர் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. “நான் உறுப்பினராக உள்ள பெத்துநாய்க்கன் பேட்டையில் ஓர் சாலைக்கு ஏற்கெனவே என் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி எந்தச் சாலைக்கும் என் பெயர் சூட்ட வேண்டாம்” என உறுதியாக மறுத்தார். 1956 ல் சென்னை மாகாண சட்ட மன்றத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் சி.சுப்பிரமணியத்தால் முன் மொழியப்பட்டது. மேலவையில் அதனை ஆதரித்து சக்கரைச் செட்டியார் ஆற்றிய உரை இன்னும் இளமை குன்றா உரையாகும். ஓய்வு நேரத்தில் கிறிஸ்துவ ஆலயங்களில் மதபோதனை செய்பவராக இருந்தார். ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட போது என்னிடம் உள்ள ஒரே சொத்து நான் உடுத்தி இருக்கும் வேட்டியும், கோவணமும், சட்டையும், புத்தகமும்தான். அதை வேண்டுமாயின் பறிமுதல் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னவர் .நீதிபதி மிரண்டு விடுதலை செய்தார் என்று மறைந்த தோழர் கே.கஜபதி [சிபிஎம் சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர்] சொல்லக் கேட்டிருக்கிறேன். சக்கரைச் செட்டியார் ஒரு போதும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராய் இருந்ததில்லை. ஆனால் உழைக்கும் மக்களுக்காய் கம்யூனிஸ்ட்டாகவே உழைத்தார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் எஸ்.ஏ.டாங்கே, இ.எம்.எஸ், ஏ.எஸ்.கே.அய்யங்கார், பி.ராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி என பலரோடு தோழமை பூண்டு தோழராகவே வாழ்ந்தார். 1958 ஆம் ஆண்டு தன் 82 வயதில் உயிர் துறக்கும் வரை தொழிலாளி வர்க்க பாசத்தைத் துறக்காத தோழர் அவர்.

;