tamilnadu

img

ரூ.20லட்சம் கோடி மீட்பு நிதி ஏழைகள் கைக்குப் போக வேண்டும்

பிரதமர் மோடிக்கு சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்

புதுதில்லி, மே 13 - பிரதமர் நரேந்திர மோடி படாடோப மாக அறிவித்துள்ள ரூ.20லட்சம் கோடி  பொருளாதார மீட்புத் திட்டத்தின் விபரங்களை அறிவதற்கு ஆவலோடு இருப்பதாகவும், இந்தப் பணம் ஏழை கள் மற்றும் பசியால் வாடுபவர்களின் கைகளுக்கு சென்றுசேர வேண்டும்; மாறாக பெரும் கார்ப்பரேட் முதலாளி களுக்கு உதவி செய்வதாக இருந்து விடக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி  அறிவித்த திட்டம்

கொரோனா ஊரடங்கின் மூன்றாவது கட்டம் மே 17 அன்று முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மே  12 இரவு 8 மணி அளவில் நாட்டு மக்க ளுக்கு உரையாற்றினார். அப்போது அவர், சுமார் 50 நாட்கள் ஊரடங்கு காரணமாகவும் இதற்கு பின்பும் ஏற்படுகிற பொருளாதார பிரச்சனை களை சமாளிப்பதற்கும் பொருளா தாரத்தை மீட்பதற்கும் ரூ.20 லட்சம் கோடி அளவிற்கான மிகப்பெரிய பொரு ளாதார மீட்புத் திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று அறி வித்தார். இந்தத் தொகை, இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10சதவீதம் ஆகும். இந்தத் திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பதை புதனன்று மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட ரூ.1.7 லட்சம் கோடி திட்டமும் இந்த ரூ.20  லட்சம் கோடி திட்டத்திற்குள் அடங்கும்  என்றும்; தொழிலாளர்கள், விவசாயி கள், நேர்மையாக வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு- குறு தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட இந்திய தொழிற்துறையே மீட்பதற்கான அறிவிப்புகள் வெளி யாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி  கூறியிருந்தார்.

மிகப்பெரிய தொகையை குறிப்பிட்டு பிரதமர் அறிவிப்பு வெளி யிட்டதால் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆனால் இந்த தொகையை சந்தையிலிருந்து அரசு கடன் வாங்கத் திட்டமிட்டிருக்கிறதா அல்லது ரிசர்வ் வங்கி மூலமாக பொரு ளாதாரத்திற்குள் செலுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறதா என்பது குறித்த விரிவான விபரங்களை அவர் வெளியிடவில்லை.

மறுபுறத்தில், “சுயசார்பு இந்தியா” என்ற வார்த்தைகளை பிரதமர் முக்கிய விசயமாக பயன்படுத்தினார். பொருளா தார சீர்திருத்தங்களை - குறிப்பாக நிலம், உழைப்பு, சட்டங்கள், நிதி நெகிழ்வுத் தன்மை உள்ளிட்ட அம்சங்களில் மிகப்பெரிய அளவிற்கு செய்ய இருப்ப தாக அவர் குறிப்பிட்டார்.

சீத்தாராம் யெச்சூரி கேள்வி

பிரதமர் குறிப்பிட்ட பொருளாதார சீர்திருத்தம் என்பதன் பொருள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் தொழிலாளர்களின் நலன்களும் உரிமை களும் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. ஏழை-எளிய  தொழிலாளர்களை இன்னும் கடுமை யாக சுரண்டி அவர்களை துயரத்தில் தள்ளுவதன்மூலம் தங்களது பெரும்பணக்கார கூட்டுக்களவாணி களின் கொள்ளை லாபத்திற்கு பாரதிய ஜனதா கட்சி அரசாங்கங்கள் துணை போகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி  தொலைக்காட்சியில் உரையாற்றி னார். ஊடகங்களில் தலைப்புச் செய்தி கள் பளிச்சிட்டன; ஆனால் கடந்த 7 வார காலமாக ஊரடங்கின் விளைவாக துய ரத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக் கும் மக்களுக்கு எந்தத் தீர்வையும் அவர் சொல்லவில்லை. குறிப்பாக, அன்றைக்கு புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஏழு வார காலமாக இன்னும் சாலைகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள்; உணவோ, நிவாரணமோ அவர்களுக்கு கிடைக்க வில்லை; மறுபுறத்தில் மோடி அர சாங்கம் ஏசி ரயில்களை இயக்குகிறது;  எந்தநேரமும் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதிலேயே பிரதமரின் கவனம் இருக்கிறது” என்றும் சீத்தா ராம் யெச்சூரி சாடியுள்ளார்.

உண்மையில்  20லட்சம் கோடியா?

இதனிடையே பிரதமர் அறி வித்துள்ள ரூ.20லட்சம் கோடியில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1.7 லட்சம் கோடி பழைய திட்டங்கள் மற் றும் ரூ.8 லட்சம் கோடி அளவிற்கு ஏற்கெனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அம்சங்கள் என மொத்தம் சுமார் 10 லட்சம் கோடி அடங்கிவிடுகிறது என்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகர்கள் உண்மையைப் போட்டு உடைக் கின்றனர். எனவே பிரதமர் அறிவித்ததில் புதிதாக செலவழிக்கப்படலாம் எனக் கருதப்படுவது ரூ.10லட்சம் கோடி ஆகும். அதிலும் கூட 60சதவீதம் நிதி மீட்புத் திட்டங்களாக - பொருளாதார மீட்புத் திட்டங்களாக இருக்கலாம்; எஞ்சி யவை ஏற்கெனவே உள்ள திட்டங் களுக்கு மறு நிதி ஒதுக்கீடு அல்லது ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றியமைப்பது என்கிற முறையில்தான் இருக்கக்கூடும் என்றும் மும்பை பங்குச்சந்தை வர்த்த கர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி ‘லைவ் மின்ட் ஏடு’ தெரி விக்கிறது. பிரதமர் அறிவித்துள்ள இந்த 20லட்சம் கோடியில் தங்களுக்கு மிகப்பெரிய பங்கு கிடைக்கும் என்று இந்திய பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் கருதுவதாகவும் அந்த ஏடு தெரிவிக்கிறது.

பிரதமர் பேசாத துயரம்

இதுதொடர்பாகவும் சுட்டிக் காட்டியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “கோடிக்கணக்கான இந்தி யர்களை வாட்டி வதைக்கின்ற பசியும் துன்பங்களும் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு அந்தப் பிரச்சனைகள் தகுதியானவை அல்ல என்பது போல பிரதமரின் உரை அமைந்துவிட்டது வேதனையை தருகிறது. உடனடியாக அரசு தனது மீட்புத் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய நான்கு பிரச்ச னைகள் உள்ளன. 1. புலம்பெயர் தொழி லாளர்களின் வேதனைகளுக்கு தீர்வும், வாழ்வாதாரங்களுக்கு வழியும் செய்ய ப்பட வேண்டும்; 2. மாநிலங்களுக்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; 3. நாடெங்கும் பரவியுள்ள பசியும் பட்டினி யுமான சூழ்நிலைமையை உடனடி யாக தீர்ப்பதற்கு அரசின் உணவு தானிய கையிருப்பிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் உணவுப்பொருட் கள் விடுவிக்கப்பட வேண்டும்; குறிப்பாக நாடு முழுவதும் ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10கிலோ உணவு தானியம் வீதம் அடுத்த ஆறு மாதங் களுக்கு அளித்திட வேண்டும்; 4. ஊரடங் கால் மிகப்பெரும் அளவு வேலை யின்மை அதிகரித்திருக்கிறது. அதற்கு தீர்வுகாண திட்டங்கள் வேண்டும். ஆனால் இவை எதுவுமே பிரதமர் உரை யில் துளிகூட இடம்பெறவில்லை. அப்படியானால் ரூ.20லட்சம் கோடி மீட்புத் திட்டம் யாருக்கு?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

;