tamilnadu

img

போராட்ட அலை மேலும் மேலும் பெருகட்டும்!

திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் நேர்காணல்

 திரைப்படத் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான அனுராக் காஷ்யப், மக்கள் பிரச்சனைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அலட்சியமாக இருந்துவரும் மோடி அரசாங்கத்தின் மீது கோபமாக இருப்பதை ஒப்புக்கொண்டார்.  குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்கள்  தொடர வேண்டும் என்கிறார். அவரிடம் தி இந்து நாளிதழ் செய்தியாளர் கேட்ட கேள்விகளும்,  அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: உள்துறை அமைச்சகம்,  குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2020 ஜனவரி 10 முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கை வெளியிட்டிருக்கிறதே…!

அனுராக் காஷ்யப்: உண்மையில் என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை, எந்தவிதமான சிவில் ஒத்துழையாமை இயக்கமாக இருந்தாலும், அதன்பின்னர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். இங்கே ஆட்சியாளர்களிடம் என்ன பிரச்சனை என்றால், போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட எவரொருவரும் தயாரில்லை. பின்னர்  மக்கள் எங்கே சென்று குமுறுவார்கள்?  நாட்டின் பிரதமர் எப்படி நடந்துகொள்கிறாரோ, ஜேஎன்யு-வின் துணைவேந்தர் அப்படியே பிரதிபலிக்கிறார். கோரிக்கை வைத்திருப்பவர்களுடன் பேசத் தயாரில்லை. மேலும் இதற்கான காரணம் என்னவென்றால், பேச வருபவர்களிடம் என்ன பேசுவது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. இவர்களால் தர்க்கரீதியாக விவாதம் செய்ய முடியாது. அவர்கள், உங்கள் பொறுமையை உடைக்கிறார்கள். எதிர்க்கும்போது, உங்கள்மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட அவர்களுக்கு உரிமை இருப்பதாகக் கருதுகிறார்கள். எல்லா இடங்களிலும் இதே பாணியைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். நேற்றையதினம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. எனினும் அதுதொடர்பான விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. எப்படி இது நடந்தது? இது மக்களைக் கொடுமைப்படுத்தும் வேலையாகும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் இதுகுறித்து பரிசீலனை செய்துகொண்டிருக்கிறோம் என்றார்கள். இப்போது திடீரென்று வெளியிட்டிருக்கிறார்கள். ஏன் அவ்வாறு வெளியிட்டிருக்கிறார்கள்?  இது நாஜிக்களின் பாணி. இவர்கள் பாசிச நாஜிக்களின் புத்தகத்திலிருந்து கடன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். மக்களை “வேறுபடுத்தி ஒதுக்குவது” எப்படி என்பதை அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே உண்மைகள் வேண்டுமென்றே திரித்துக் கூறப்படுகின்றன. உண்மை என்ன என்பது அவர்களுக்கும் தெரியும். எனினும், அதனைத் திரித்துக் கூற வேண்டியது அவர்களது தேவையாகும். அப்போதுதான் வேறுபடுத்தி ஒதுக்கியவர்கள் மீது வெறுப்பை அதிகப்படுத்திட முடியும்.  இது கிட்டத்தட்ட நீங்கள் ரோமானிய அரங்கங்களில் ஒன்றில் உட்கார்ந்திருக்க, உங்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் போன்றதாகும். அவர்கள் அனைவருமே இத்தகைய ரத்தவெறி பிடித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதனை அவர்கள் வெகு சந்தோஷத்துடனேயே செய்கிறார்கள். “சண்டையிடுவோம், கொல்லுவோம்” என்கிற விதத்தில் நடந்துகொள்கிறார்கள்.  

கேள்வி: தற்போதைய போராட்டப் பாதையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அனுராக் காஷ்யப்: நீண்ட தூரம் போக வேண்டும். நம்மால் செய்யமுடியாத விஷயம் என்னவென்றால், நாம் அவர்கள் போன்று மாற முடியாது.

கேள்வி: அப்படியானால் நடந்து கொண்டிருக்கும் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் விரைவில் முடிந்துவிடுமா? 

அனுராக் காஷ்யப்: ஆட்சியாளர்கள் அப்படித்தான் நம்புகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஓர் எல்லை உண்டு. வேலைநிர்ப்பந்தம் உண்டு. ஆனாலும், கிளர்ச்சி இயக்கங்கள் போய்க்கொண்டிருக்கும் விதத்தைப் பார்த்தால்,  அவை சரியான திசைவழியில் போய்க்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தில்லி ஷாஹீன்பாக்கில் பெண்கள் திரண்டிருந்ததைப் பாருங்கள். வியக்கத்தக்க விதத்தில் அவர்கள் தங்கள் பலத்தைக் காட்டினார்கள். ஒவ்வொரு நாளும் மாணவர்கள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. இவர்கள் இவற்றைப் பற்றிக் கவலைப்பட்ட ஒரு நல்ல ஆட்சியை அளித்திருந்தா லாவது பிரச்சனை இருந்திருக்காது. ஆனால் எங்கே நல்ல ஆட்சி இருக்கிறது? நீங்கள் எப்போதும் மக்களைப் பிரித்தாளுவதிலேயே, மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிடுவதிலேயே தொடர்ந்து கவனத்தைச்  செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். துக்டே துக்டே என்று  இடதுசாரிகளை வசைபாடிக்கொண்டே இருக்கிறீர்கள். தில்லித் தேர்தல்கள் வலம் வருவதை யொட்டி இப்போது மீண்டும் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி இருக்கிறது. இவர்களின் முழுக் கவன மும் தில்லி தேர்தல் மீதுதான் இப்போது இருக்கிறது.

கேள்வி: தில்லி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று பார்க்கிறீர்கள்?

அனுராக் காஷ்யப்: இந்தத் தேர்தல்களில் மண்ணைக் கவ்வுவோம் என்று மேற்படி பாஜக ஆட்சியாளர்களுக்கு தெரியும்.  எந்த அளவுக்கு அவர்கள் செல்வார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள்  அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுகிறார்களா, என்ன? தாங்கள்தான் அரசமைப்புச்சட்டம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள்தான் இந்தியா. அதுதான் அனைத்துக்கும் பிரச்சனையாகும்.   அவர்கள் இரக்கமற்ற சுயநலக் கும்பல்களைப் போன்றவர்கள். உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது என்றெல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நீதித்துறையாக இருந்தாலும் சரி, காவல்துறையாக இருந்தாலும் சரி, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமாக இருந்தாலும் சரி, அமலாக்கப் பிரிவாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி - அனைத்து நிறுவனங்களையும் வெளிப்படையாகவே தங்கள் வழியில் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: இதற்கு மாற்று இன்னும் உருவாகாமல் இருக்கிறதே…!

அனுராக் காஷ்யப்: உத்தவ் தாக்கரே செய்து கொண்டிருப்பதை அல்லது ஹேமந்த் சோரன் செய்து கொண்டிருப்பதைப் பாருங்கள். அரசியல் மாநில அளவில் செயல்படக்கூடியதாக மாறியிருக்கிறது. யாரும் மத்திய அளவில் ஒருமுகப்பட முடியாது. தில்லி கூட ஆம் ஆத்மி கட்சியின் காரணமாக மாநில அரசிய லாக மாறியிருக்கிறது. அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் மாநிலக் கட்சிகளையும் அவற்றுக்கான தலைவர்களையும் பெற்றிருக்கின்றன. இவ்வாறான வழியில் அரசியல் செல்லுமேயானால் மத்தியில் இருந்து கட்டுப்படுத்திட முடியாது. ஒவ்வொரு அரசாங்கமும் மாநிலக் கட்சிகளின் கீழான அரசாங்க மாக மாறும்போது, பின் ஐரோப்பா போன்ற நிலைமை இங்கேயும் நடக்காது என்று எப்படி கூறமுடியும்?  

கேள்வி: வாழ்நாள் முழுவதும் கிளர்ச்சி செய்துகொண்டிருக்க வேண்டும் என்பது போல் கூறுகிறீர்கள். இது எப்படி?

அனுராக் காஷ்யப்: உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் குரல் கொடுக்கிறபோது, எப்போதும் அதைத் தீர்ப்பதற்கான மார்க்கமும் இருக்கிறது. யாராவது ஒருவர் உட்கார்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தீபா மேத்தாவின் ’வாட்டர்’ படம் சென்சார் போர்டில்  பிரச்சனையானபோது, அப்படித்தான் நடந்தது. தில்லிக்கு வந்தோம். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குச் சென்றோம். அருண் ஜெட்லி இருந்தார். ஆர்எஸ்எஸ்-சைச் சேர்ந்த சேஷாத்ரி சாரி என்பவரும் இருந்தார். விவாதம் நடைபெற்றது. நாங்கள் படத்தின் உரையை முழுமையாகப் படித்துக் காண்பித்தோம். இப்படி எப்போதும் யாராவது இருப்பார்கள். ஆனால் இப்போது அதுபோன்ற முறையே இல்லை. ஆட்சியாளர்கள் யாரும் மக்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. அதனால்தான் மேலும் மேலும் மக்கள் திரண்டு வந்து கிளர்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜேஎன்யு-வில் நிர்வாகத்திற்கும் மாணவர் சங்கத்திற்கும் இடையே பிரச்சனை. துணை வேந்தர் மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேசத் தயாராக இல்லை.

கேள்வி: ஆகவேதான் அவர்கள்  கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்களா?

அனுராக் காஷ்யப்: இப்போதைக்கு அதை தொடர வேண்டியிருக்கிறது. தில்லி தேர்தல் முடிவுகள் என்னவாகும் என்று  தெரியவில்லை. அவர்கள் தோற்றால், அது அவர்களைப் பாதிக்குமா அல்லது மேலும் வெறித்தனம் மிக்கவர்களாக மாறுவார்களா? என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

கேள்வி: ஆனால், தில்லியில் அவர்கள் வெல்லலாம். அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்

அனுராக் காஷ்யப்: இல்லை. ஏதேனும் மோசடியில் ஈடுபட்டாலன்றி அவர்கள் வெற்றி  பெற முடியாது.

(நன்றி: தி இந்து, ஆங்கில ஏடு 13.1.2020) 
தமிழில்: ச.வீரமணி






 

;