tamilnadu

img

370வது பிரிவை அம்பேத்கர் எதிர்த்தாரா?

ராகுல் காந்தி மற்றும் சீத்தாராம் யெச்சூரி உட்பட எதிர்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றதை விமர்சித்துள்ள பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி “நிலைமை சகஜம் அடையும்வரை எதிர்கட்சி தலைவர்கள் காத்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார். “சகஜம்” என்பதற்கு என்ன வரையறை? எவ்வளவு காலம்? எவராவது துல்லியமாக கூற முடியுமா? 25 நாட்களுக்கு பிறகும் சிறு முன்னேற்றமும் இல்லை என்பதை பி.பி.சி, அல்ஜசீரா, கார்டியன், நியூயார்க் டைம்ஸ் போன்ற வெளிநாட்டு இதழ்கள் மட்டுமல்ல; வயர் போன்ற சில மாற்று இந்திய ஊடகங்களும் வலுவாக பதிவு செய்துள்ளன. இது மாயாவதி அவர்களுக்கு தெரியாமல் போனது புதிராக உள்ளது.“டாக்டர் அம்பேத்கர் 370வது பிரிவை சிறிது கூட ஆதரிக்கவில்லை. எனவேதான் பகுஜன் கட்சி அது நீக்கப்பட்டதை ஆதரிக்கிறது” எனவும் மாயாவதி கூறியுள்ளார். உண்மையிலேயே 370வது பிரிவை அம்பேத்கர் எதிர்த்தாரா?

பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் 370வது பிரிவை எதிர்த்து ஷேக் அப்துல்லா அவர்களின் முகத்துக்கு நேரே பேசியதாக சில வாக்கியங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமீபத்தில் இந்து பத்திரிக்கையில் உதவி ஜனாதிபதி வெங்கையா நாயுடு இதே வாசகங்களை மேற்கோள் காட்டி மோடி அரசாங்கத்தின் செயலை நியாயப்படுத்தினார். (ஒரு துணை ஜனாதிபதி அரசாங்கத்தின் செயல்களை ஆதரித்து பகிரங்கமாக கட்டுரை எழுதுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது) ஆனால் அம்பேத்கர் கூறியதாக முன்வைக்கப்படும் வாசகங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன? நாடாளுமன்ற விவாதங்களிலிருந்து எடுக்கப்பட்டதா? அவரது எழுத்துக்கள் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து எடுத்து கையாளப்பட்டதா?
இதன் ரிஷி மூலத்தை ஆராய்ந்தால் இது முதன்முதலில் பால்ராஜ் மதோக் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் பால்ராஜ் மதோக்? இவர் பாரதிய ஜனசங்கத்தின் காஷ்மீர் தலைவர். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இறந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கூறியதாக பால்ராஜ் மதோக் பதிவு செய்தார். அதன் உண்மைத் தன்மை அல்லது அந்த வாசகங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதை மதோக் குறிப்பிடவே இல்லை. மதோக் கூறியதை அப்படியே பலரும் இன்று மேற்கோள் காட்டி அம்பேத்கர் 370வது பிரிவை எதிர்த்தார் என கூறிக்கொண்டுள்ளனர்.

அம்பேத்கர் கூறியது என்ன?
ஒரு நாடாளுமன்ற விவாதத்தின் பொழுது அம்பேத்கர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“இப்பொழுது காஷ்மீர் பிரச்சனைக்கு வருகிறேன்....... காஷ்மீருக்கு விதிவிலக்கு அளித்ததற்கு காரணம் என்னவெனில் காஷ்மீர் ஒரு உறுதியற்ற சூழலில்  இந்தியாவுடன் இணைந்துள்ளது. பகுதி 1 மட்டும்தான் காஷ்மீருக்கு பொருந்தும். மற்ற பகுதிகள் காஷ்மீருக்கு பொருந்த வேண்டும் எனில் காஷ்மீர் அரசாங்கத்தின் கலந்தாலோசனையுடன் ஜனாதிபதி செயல்படலாம்.” 
-(அம்பேத்கர் எழுத்துக்களும் உரைகளும் தொகுதி 15/பக்.129)
காஷ்மீரின் விசேட சூழல் குறித்து அம்பேத்கர் மிக தெளிவாக உணர்ந்திருந்தார் என்பதையே அவரது உரை வெளிப்படுத்துகிறது.
1951ம் ஆண்டு வெளியிடப்பட்ட “பட்டியலின மக்கள் சம்மேளனத்தின் தேர்தல் அறிக்கையில்” கீழ்கண்டவாறு அம்பேத்கர் குறிப்பிடுகிறார்:
“ காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கு (அப்பகுதி மக்கள் விருப்பத்திற்கு உட்பட்டு) பாகிஸ்தானில் இணையலாம். முஸ்லிம் அல்லாத பகுதிகளான ஜம்முவும் லடாக்கும் இந்தியாவில் இருக்க வேண்டும்”.
அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஜலந்தரில் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் ஒரு கேள்விக்கு பதிலாக கீழ்கண்டவாறு கூறுகிறார்:
“ இப்பொழுது ஜம்மு-காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தினால் அது இந்தியாவுக்கு எதிராக அமையும் என அஞ்சுகிறேன். ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் பாகிஸ்தானில் இணையாமல் இருக்க வேண்டும் எனில் ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தனித்தனியாக பொது வாக்கெடுப்பு (Zonal plebiscite) நடத்த வேண்டும்”.
மற்றொரு கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“காஷ்மீர் முஸ்லிம்கள் பிரச்சனையில் நமக்கு என்ன சம்பந்தம் உள்ளது? அது காஷ்மீர் மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சனை. தேவை எனில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் பொது வாக்கெடுப்பு நடக்கட்டும்; அதன் முடிவுப்படி காஷ்மீர் எதிர்காலம் நிர்ணயிக்கப்படட்டும்.”
இந்த கட்டுரையிலும் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
காஷ்மீர் குறித்த பல உரைகள் மற்றும் கட்டுரைகளில் எங்குமே அம்பேத்கர் 370வது பிரிவை எதிர்க்கவில்லை. மாறாக காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப அந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். 
அம்பேத்கர் 370வது பிரிவை எதிர்த்தார் என்பது சங்பரிவாரத்தின் கட்டுக்கதை ஆகும். இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்குவதில் அவர்களின் திறமை ஈடு இணையற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் மாயாவதியும்  இதற்கு பலியாவது புரியாத புதிர். பா.ஜ.க.வுக்கு பச்சை கொடி காட்ட அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்காக அம்பேத்கரின் காஷ்மீர் கூற்று பற்றி பொய்களை முன்வைக்கும் உரிமை அவருக்கு இல்லை. 

- அ.அன்வர் உசேன்
ஆதாரங்கள் 1. 27.08.2019 இந்து பத்திரிக்கையில் துஷ்யந் தவே கட்டுரை. 2. தி வயர் மின் இதழ். 
3. பாபா சாகேப் அவர்களின் கட்டுரை மற்றும் உரைகள் தொகுதி 14 மற்றும் 15.