tamilnadu

img

அப்பா வேலைக்கு போகவில்லை..!

தெருவில் இருக்கும் பலசரக்கு கடையில் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். கடையின் முதலாளி அந்தப் பெண்ணை பார்த்து, கடைக்கு முன்னால நின்னுக்கிட்டு ஏவாரத்த கெடுக்காத என்றார். அந்தப் பெண் கடை வாசலின் ஓரமாக ஒதுங்கி நின்றாள். கடைக்கு முன்னால் ஒரு ஓலைக் கொட்டகை. ஓரமாக நின்ற பெண்ணின் மீது வெயில் அடித்தது. கசங்கிய புடவையால் முகத்தை துடைத்துக் கொண்டார். எதிர்திசையில் சற்று தள்ளி இருந்த தனது வீட்டை பார்த்துக் கொண்டார். கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அவளது வீட்டில்கொத்தனார் வேலைக்கு போகும் அப்பாவும், பீடி சுத்தும் அம்மாவும், தங்கையும், இவளது இரு குழந்தைகளும் என ஆறு பேர் இருந்தனர். அப்பா வேலைக்கு போகவில்லை. அம்மா பீடி சுற்றவில்லை. குழந்தைகள் மிட்டாய் கேட்டு அழுதார்கள். கையில் காசு இல்லை. கடனுக்கு சரக்குகொடுங்கள், வேலைக்கு போய் கொடுத்து விடுகிறோம் என்று கடைக்கு முன்னால் நிற்கிறாள். வெயிலில் நிற்கிறாள். தயக்கம், கூச்சம், அவமானம் எல்லாம் சேர்ந்து வேர்வையாய் கொட்டுகிறது. கசங்கிய புடவையால் துடைத்துக் கொள்கிறாள். கடை முதலாளி கடன் கிடையாது என்கிறார். அவள் நின்று கொண்டே இருக்கிறாள். வெயில் உரத்து அடிக்கிறது.இது ஊரடங்கின் ஒன்பதாம் நாளன்று நடந்தது.

                                                                                                                                                                                             &&&&&&&&&&&&&&&&&&&&&

“அப்பட்டமான சுயநலம் மற்றும் பரிவு உணர்ச்சிக்கு இடமில்லாத பண வரவு செலவு உறவைத் தவிர வேறு எந்தவிதமான உறவுகளையும் மனிதர்களுக்கிடையே இல்லாதவாறு செய்துவிட்டது முதலாளி வர்க்கம்” என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறப்பட்டது, இந்த கொரோனா காலத்தில் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்தது.  தான்தோன்றித்தனமான மோடியின் அறிவிப்புகளால் மீண்டும் ஒரு முறை இந்தியா நிலை குலைந்து போனது.  ஊரடங்கால்பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களை காப்பாற்றத் தவறிவிட்டது மோடி அரசு.  அடுத்தடுத்த அறிவிப்புகளும் கார்ப்பரேட்டுகளுக்கே ஆதரவாக இருக்கிறது.  பாதிக்கப்பட்டோர் களின் பட்டியலின் நீளம் நெடுஞ்சாலைகளை விட நீண்டு கிடக்கிறது.

                                                                                                                                                                                          &&&&&&&&&&&&&&&&&&&&&

“மூன்று மாதங்களாக பேருந்துகள் ஓடவில்லை. ஓடாதமூன்று மாதங்களுக்கும் சாலை வரி நாற்பத்தைந்தாயிரம் கட்டவில்லை. பேருந்து ஓடத் துவங்கினால் இந்த சாலை வரியை கட்டவேண்டும். வருவாய் இல்லாமல் எப்படி சாலைவரியை கட்ட முடியும்?” இப்படிக் கேட்கிறார் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர். பெட்ரோல், டீசல் விலை உயர்வும் கொரோனா காலத்தில் பேரிடியாக இறங்கியுள்ளது என்றார். மோடி 2014ல் பதவியேற்ற போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 9.48ஆக இருந்தது. தற்போது ரூ. 32.98ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. டீசலுக்கான கலால் வரியும் ரூ. 3.66லிருந்து ரூ. 11.83 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம். இது தான் மோடி அரசு.

                                                                                                                                                                                        &&&&&&&&&&&&&&&&&&&&&

“வங்கி மூலம் கடன் கொடுப்பதாக சொல்கிறார்கள். பழைய கடனுக்கு வட்டியை கழிக்க மறுக்கிறார்கள். கடனை விட வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கி பணத்தை எப்படி வசூலிப்பது என்பது தான் பிரச்சனை. நிலைமை சீராகாமல்பாக்கியை வசூலிக்க முடியாது. வியாபாரம் நடக்காமல் எதுவும் சீரடையாது. நிவாரணத்தை பணமாக அரசு மக்களிடம் கொடுக்காமல் எதுவும் சரியாகாது. ஆனால் அதனைச் செய்ய அரசு மறுக்கிறது” என்கிறார் இன்னொரு சிறு தொழில் செய்பவர்.

                                                                                                                                                                                         &&&&&&&&&&&&&&&&&&&&&
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரத்தில் 200 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேங்கிக் கிடக்கிறது.பசை போடுவது, சாயம் போடுவது, கண்டு போடுவது, பாவுஓட்டுவது என்று பத்தாயிரம் தொழிலாளர்கள் விசைத்தறி தொழில் சார்ந்து உள்ளனர். ஐயாயிரம் தறிகள் உள்ளன. இப்பவும் நாள் ஒன்றுக்கு 1.5 கோடிக்கு உற்பத்தி நடக்கிறது.ஆனால் வியாபாரம் இல்லை. பத்தாயிரம் தொழிலாளர் களில் 900 பேர் மட்டும் தான் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். விசைத்தறி தொழிலும் தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளது. பெர்முடாஸ் வந்த பிறகு கைலி உற்பத்தி குறைந்துபோனது. சேலையும், டர்க்கி டவலும் உற்பத்தியாகிறது. 

                                                                                                                                                                                        &&&&&&&&&&&&&&&&&&&&&

“ஜிஎஸ்டி வரி வந்த பிறகு நெருக்கடி அதிகமாயிற்று. காட்டனுக்கு 5 சதம், பாலிஸ்டருக்கு 18 சதம், ஜரிகைக்கு12 சதம் ஜிஎஸ்டி வரி. சேலைக்கும், டவலுக்கும் 5 சதம்.வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளிகளுக்கு பணம் வந்து சேர ஆறு மாதமாகும். ஆனால் அரசுக்கு வரியை உடனே கட்ட வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்என்பதே முதல் கோரிக்கையாக உள்ளது. வங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் கொடுக்க விதித்துள்ள நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். இப்போது புதிய மின்சார சட்டம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. விசைத்தறிக்கு உண்டான 750 யூனிட்இலவச மின்சாரத்திற்கு வேட்டு வைத்துள்ளது மத்திய அரசு” என்கிறார் விசைத்தறி உரிமையாளர். 

                                                                                                                                                                                        &&&&&&&&&&&&&&&&&&&&& 

நெல்லை மாவட்டத்தில் மட்டும் கட்டுமான தொழிலாளர்நல வாரியத்தில் 1.25 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த தொழிலில் 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து சரிவைசந்தித்து வந்த கட்டுமான தொழில் கொரோனாவில் முற்றிலும்முடங்கிப் போனது. அரசு வெறும் இரண்டாயிரத்தை நிவாரணமாக கொடுத்து ஒதுங்கிக் கொண்டது. இயல்பு நிலை திரும்பிகட்டுமானத் தொழில் எப்போது துவங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மறுபக்கம் பொருட்கள் தட்டுப்பாடும் விலை உயர்வும் பூதாகரமாக உருவெடுத்து உள்ளது. மணல் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை அதிகரித்துள்ளது. 

                                                                                                                                                                                      &&&&&&&&&&&&&&&&&&&&&

ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி கேட்டு போராடினார்கள். ஒரு பயணியை ஏற்றி ஆட்டோ இயக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. ரூபாய் பதினைந்தாயிரம் நிவாரணம்கேட்டார்கள். அரசு வாய் மூடி மெளனம் காக்கிறது. நெல்லை, தென்காசிமாவட்டங்களில் 9,668 ஆட்டோக்கள் ஓடுகின்றன. பத்துசதம் ஆட்டோக்கள் வாடகைக்கு எடுத்து ஓட்டப்படு கின்றன. 60 சதம் ஆட்டோக்கள் லோனில் ஓடுகின்றன. மூன்று மாத முடக்கத்தில் வீட்டிலிருந்து மூக்குத்தியும், கம்மலும் அடகுக் கடைக்கு போய்விட்டது. ஏற்கனவே அரசு அறிவிப்பால் ஆட்டோ தொழில் முடங்கி கிடக்கிறது. ஒவ்வொருஆண்டும் தகுதிச் சான்றிதழ் பெற ஐயாயிரம். வருடத்திற்கு சாலை வரி ஒன்பதாயிரத்து ஐநூறு. மீதத்தை வைத்துத் தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். பத்தாயிரம் பேரில் நல வாரியத்தில் பதிவு செய்தவர்கள் 1250 பேர் மட்டுமே. வாரியத்தில்பதிவு செய்தவர்களுக்கு ஆயிரம் என்ற அரசின் அறிவிப்புக்கு பின்னால் உள்ள கள்ளத்தனம் இப்போது புரியும். 

                                                                                                                                                                                    &&&&&&&&&&&&&&&&&&&&&

முப்பத்தாறு பீடி நிறுவனங்களில் நாலு லட்சம் பீடித் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். 28 சதம் ஜிஎஸ்டி வரியால் விழி பிதுங்கிய பீடி நிறுவனங்களும், பீடித் தொழிலாளர்களும் கொரோனா காலத்தில் வறுமையால் பீடிக்கப்பட்டார்கள். பீடித் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தும் என்பதால், அவர்களுக்கு நல வாரியமும் இல்லை, நிவாரணமும் இல்லை. 

                                                                                                                                                                                   &&&&&&&&&&&&&&&&&&&&&

ஐம்பதாயிரம் ஏக்கரில் நாங்குநேரி பகுதியில் வாழை விவசாயம் உள்ளது. கிலோவுக்கு நாப்பது ஐம்பது எனவிற்ற காலம் போய் வெறும் இருபத்தைந்து ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு கண்ணீரும் கம்பலையுமாய் விற்றுத் தீர்த்தார்கள் விவசாயிகள். களக்காட்டில் வாழைக்காக அரசு கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி. காற்றடித்து சேதமாக்கிய வாழைகளுக்கும் இதுவரை நட்டஈடு கிடைக்கவில்லை. காதலை பிரிக்காதீர்கள் என்பதற்கு பூக்களை பறிக்காதீர்கள் என்பார்கள். கொரோனா காலத்தில் பூக்களை பறிக்கவே இல்லை. பறித்தபூவுக்கும் விலை இல்லை. பூக்கடைகளும் இல்லை. மேலநீலிதநல்லூர் காடுகளில் பறிக்கப்படும் பூக்கள் திருவனந்தபுரம் வழியாக வெளிநாடு செல்வதும் முடக்கத்தால் தடைபட்டு போனது. ஒரு ஏக்கரில் 1200 செடி நட்டால் 25வது நாளில்இருந்து மல்லி எடுக்கலாம். பத்தாயிரம் செடி நட்டு நாப்பதுநாளில் கேந்தி பறிக்கலாம். பிச்சிப்பூ, சம்பங்கி என்று எதுவும் இல்லை. கம்மாய்காடுகளிலும், கரிசல் காடுகளிலும் விளைந்த வெள்ளரிக்காய் ஏற்றுமதிக்கு வகையற்றுப் போனதால் உள்ளூரிலும் விலையற்றுப் போனது. 

                                                                                                                                                                                  &&&&&&&&&&&&&&&&&&&&&

அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் கொரோனாவால் மூடப்பட்டதால் ஒரு பகுதி விவசாயிகள் உரியவிலை கிடைக்காமல் திணறிப் போனார்கள். வெங்காயமும், காய்கறிகளும் விலையின்றி ரோட்டோரங்களில் வீசி எறியப்பட்டன. சில இடங்களில் பீட்ரூட்டுகளை எடுக்காமல்மண்ணோடு மக்கிப் போவதை பார்த்து அதனை குழந்தையாய் பாவித்த விவசாயி விக்கித்து நிற்கின்றான். பெரும்பகுதிவிவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டாயிரம் வந்து சேரவில்லை. கடன்களை தள்ளுபடி செய்தால் தான் கழனியில் கால் பதிக்க முடியும். இடுபொருட்கள் கூடுதல் மானிய விலையில் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

                                                                                                                                                                                &&&&&&&&&&&&&&&&&&&&&

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 3,69,626 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களில் சராசரியாக 43 நாட்களே வேலை கிடைத்துள்ளது. தற்போது கூலி ரூ. 229 ஆக உள்ளது. இருநூறு நாட்களாகவேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். நகர்ப்புறங்களி லும், குறிப்பாக பேரூராட்சி பகுதிகளிலும் வேலை வாய்ப்பு திட்டத்தை விஸ்தரிக்க வேண்டும். இதற்கான போராட்டங்கள் மீண்டும் வெடித்தெழ வேண்டும். 

                                                                                                                                                                               &&&&&&&&&&&&&&&&&&&&&

“மாயைகளால் மூடி மறைக்கப்பட்டு வந்த சுரண்டலுக்குப் பதிலாக அம்மணமாக, வெட்கங்கெட்ட, நேரடியான மிருகத்தனமான சுரண்டலை முதலாளி வர்க்கம் நிலை நாட்டியுள்ளது” என்கிறது கம்யூனிஸ்ட் அறிக்கை.  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 7,000த்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எல்&டிபோன்ற ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் வேலை செய்துவருகிறார்கள். இதில் 6000 பேர் வடமாநில தொழிலாளர்கள்.இவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கவில்லை. அணுமின் நிலைய வளாகத்தினுள் 2400 பேர் மட்டுமே தங்கும் அளவு கொண்ட அடிப்படைவசதிகளற்ற ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடங்களில்  4,800 பேர் 
அடைத்து வைக்கப்பட்டனர்.  ஜார்க்கண்ட், பீகார், ஒரிசாமற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த இந்த தொழிலாளிகளின் போராட்டத்திற்குப் பின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலும், கங்கைகொண்டான் சிப்காட்டிலும், மாவட்டம் முழுவதும் உள்ள சிறு நிறுவனங்களிலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சட்ட சலுகைகள் இன்றி கொத்தடிமைகளாக உள்ளனர்.  

                                                                                                                                                                              &&&&&&&&&&&&&&&&&&&&&

பெண்கள் மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் கடன் பெறுகிறார்கள். முத்தூட், உஜ்ஜீவன், ஆசிர்வாத், எக்விடாஸ், மகாசேமம், ஐடிஎப்சி, புல்லர்டோன், ஜனலட்சுமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் இந்த குழுக்களுக்கு கடன் கொடுத்து வாரம் மற்றும் மாதத் தவணைகளில் வசூல் செய்கின்றனர்.  கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலை இழந்துள்ள சூழ்நிலையில் அனைத்து விதமான வங்கி, நிதி நிறுவன வட்டிக் கடன்கள் 3 மாதங்களுக்கு மக்களிடமிருந்து  வசூலிக்க வேண்டாமென அரசுஅறிவித்த சூழலில் நிறுவனங்களின் அலுவலர்கள் இந்த மாதம் தவணையை செலுத்த வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்கள். ஜூன் மாதம் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை குழுக்கடன் வசூல் செய்யக்கூடாது என்ற மத்திய, மாநில அரசுகளின்அறிவிப்பையும் மீறி இந்த நிதிநிறுவனங்கள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட் டுள்ள மக்களை மேலும்துன்பத்திற்கு ஆளாக்கு கிறார்கள். இதனிடையே இதே காலத்தில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 20க்கும் அதிகமான குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளது. பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. 

                                                                                                                                                                            &&&&&&&&&&&&&&&&&&&&&

அறுபது நாட்களை கடந்து விட்டது ஊரடங்கு. இந்தஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு எமர்ஜென்சியை விட கொடும் தாக்குதலை அரசு தொடுத்து வருகிறது. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கொரோனாவின் பெயரால் முடக்கி வைத்துவிட்டு மக்கள் மீதான பொருளாதார, ஜனநாயக தாக்குதலை தீவிரமாக்கியுள்ளது. போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. மறுபுறம் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. அரசு தனியார்மயத்தை விரைவுபடுத்துகிறது. மின்சார திருத்த சட்டத்தை அமலாக்குகிறது. ”மாய வித்தையால் பாதாள உலகிலிருந்து தருவித்து தானே உருவாக்கிய சக்திகளை கட்டுப்படுத்த இயலாத ஒரு மந்திரவாதியின் நிலையில் இப்போது நவீன முதலாளித்துவம் இருக்கிறது.” 

                                                                                                                                                                           &&&&&&&&&&&&&&&&&&&&&

இந்தியாவின் ஆன்மாவின் துயர் மிகுந்த குரலை நெடுஞ்சாலைகளில் ரத்தம் கசிய நடந்து சென்ற தொழிலாளர்களிடமிருந்து கேட்டோம். கழனிகளில், செங்கல் சூளைகளில், உயர எழுப்பப்படும் கட்டிடங்களின் சாரங்களில், பீடி சுற்றும் வீட்டு முற்றங்களில், தேயிலைதோட்டங்களில், கரும்புகை கக்கும் ஆலைகளில், மரங்களினடியில் சவாரிக்கு காத்திருக்கும் ஆட்டோக்களில் கண்ணீர்கசியும் இந்திய ஆன்மாவின் குரலை கேட்கிறோம். அழுகுரலை போர்க்குரலாக மாற்றுவோம். அரசு செய்ய வேண்டியதிட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழக்கமாக முன்வைத்துள்ளது. அதற்கான இயக்கங்களை உள்ளூர் அளவிலிருந்து துவங்கி தேசம் முழுமைக்கும் கட்டமைக்க வேண்ட�

;