tamilnadu

img

படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் வரை அபராதமா?

இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமானிய கட்டிடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர் ரோமின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் மிக முக்கியமானது ‘ஸ்பானிஷ் படிகள்’. இந்தப் படிகள் 18-ஆம் நூற்றாண்டில், ப்ரான்செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டிடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டன. இங்கு 174 படிகளுடன் நீண்டு செல்லும் ஸ்பானிஷ் படிகளின் உச்சிப் பகுதியில் ட்ரினிடா டி மாண்டி தேவாலயம் அமைந்துள்ளது.

ரோம் நகரின் இந்த காலம் கடந்து நிற்கும் வரலாற்று சின்னங்களை, அவற்றின் அருமை தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் சிதைத்து விடுவார்களோ என கருதி, இத்தாலி அரசு ‘ஸ்பானிஷ் படிகள்’ உள்பட சில உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் முகாமிடுதல் அல்லது உட்கார்ந்து கொண்டு வீடியோ மற்றும் புகைப்படமெடுப்பது உள்ளிட்ட செய்கைகளை தடை செய்யும் வகையில் புதிய விதிகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது. 

அதன்படி, தற்போது ஸ்பானிஷ் படிகளில் அமர சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சிறப்பு சுற்றுலா பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்பானிஷ் படிகளில் அமரும் சுற்றுலா பயணிகளை அவர்கள் விசில் அடித்து எச்சரித்து அப்புறப்படுத்துவார்கள். அதை மீறியும் அங்கு அமர்ந்து எவரேனும் புகைப்படம் எடுக்க முயன்றால் அவர்களுக்கு 250 யூரோ முதல் 400 யூரோ வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;