tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 28

1945 - இத்தாலிய எதிர்ப்பியக்கத்தால், பெனிட்டோ முசோலினி உள்ளிட்ட 18 பாசிஸ்ட்டுகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதுடன், முசோலினி, அவர் காதலி கிளாரா உள்ளிட்ட 15 பேரின் உடல்கள், மிலன் நகரிலுள்ள பியாஸேல் லோரெட்டோ சதுக்கத்தில், பொதுமக்கள் பார்வைக்காகத் தலைகீழாகக் கட்டித்தொங்கவிடப்பட்டன. முசோலினியின் பாசிச அரசு உருவான 1920களில், அதற்கெதிராக எழுந்த பல இயக்கங்களின் கூட்டமைப்பே இத்தாலிய எதிர்ப்பியக்கம். 1943இல் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் ஒரு கைப்பாவை அரசை முசோலினி அமைத்தபின்னரே, இது தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரில் இத்தாலிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகள், இத்தாலியின் ஆப்ரிக்கக் குடியேற்றங்களை இழக்க நேரிட்டது, சிசிலித் தீவிலும், இத்தாலியத் தீபகற்பத்தின் தென்பகுதியிலும் நேசநாடுகளின் படைகள் நுழைந்தது ஆகியவற்றைத் தொடர்ந்து, அரசர் மூன்றாம் விக்டர் இம்மானுவேல், முசோலினியின் அரசைக் கலைத்து, அவரைக் கைதும் செய்தார். புதிய அரசு நேசநாடுகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ய முயற்சித்தது.


போர்நிறுத்தமாகக் கூறிக்கொள்ளப்பட்டாலும், முழுமையான சரணாகதியாக இருந்த இம்முயற்சியைத் தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்த ஹிட்லர், ஜெர்மன் படைகளை அனுப்பி, இத்தாலியின் மத்திய, வடக்கு பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார். ஏற்கெனவே ஜெர்மனியுடனான அணியில்தான் இத்தாலி இருந்தது என்பதால் எதிர்த்துப்போரிட வேண்டுமா இல்லையா என்றே புரியாத இத்தாலியப் படையினரின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து, ஜெர்மன் படைகள் எடுத்துக்கொண்டன. ஆட்சிக் கலைப்புக்குப்பின் மாற்றி மாற்றி பல இடங்களில் சிறைவைக்கப்பட்டிருந்த முசோலினியை விடுவித்த ஹிட்லர், புதிய பாசிச அரசொன்றை இத்தாலியில் உருவாக்கச்சொன்னார். உடல்நலம் குன்றியிருந்த முசோலினி, ஓய்வுபெற விரும்பியதால் மறுத்தார். மிலன், ஜெனோவா, ட்யூரின் நகரங்களை அழித்துவிடுவதாக ஹிட்லர் மிரட்டியதால், எஞ்சியிருந்த மக்கள் செல்வாக்கு, போரின்போது அரசர் தப்பியோடியது ஆகியவற்றைப் பயன்படுத்தி, கைப்பாவை அரசை அமைத்தாலும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் எதிர்ப்பியக்கத்தால் கொல்லப்பட்டார். இதே சதுக்கத்தில் ஏராளமான பாசிச எதிர்ப்பாளர்களைக் கொன்று தொங்கவிட்டதற்குப் பழிவாங்கும்விதமாக, தொங்கவிடப்பட்டிருந்த உடல்கள்மீது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்கினர்.அறிவுக்கடல்

;