tamilnadu

img

ஜிஎஸ்டி வரி குறைப்பை நுகர்வோருக்கு அளிக்காமல் ரூ.250 கோடி கூடுதல் லாபம் அடைந்த பி&ஜி நிறுவனம்

முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான பி&ஜி நிறுவனம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருட்களின் விலையைக் குறைக்காமல் வரிக்குறைப்பின் பயன்களை நுகர்வோருக்கு அளிக்காமல் ரூ.250 கோடி கூடுதல் லாபம் அடைந்துள்ளதாக ஜிஎஸ்டி லாப கண்காணிப்பு அமைப்பு நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் லாபக் கட்டுப்பாட்டு தலைமை இயக்ககம் பி&ஜி நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களைச் சோதனையிட்ட போது 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கான வரி 18% ஆக குறைக்கப்பட்ட பிறகும் கூட பொருட்களின் விலையைக் குறைத்து பயன்களை நுகர்வோருக்கு அளிக்காமல் லாபம் ஈட்டியது தெரியவந்தது.

“இதன் மூலம் ரூ.250 கோடி பி&ஜி நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளதாக லாபக்கட்டுப்பாடு தலைமை இயக்குனரகம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏரியல், டைட் போன்ற வாஷிங் பவுடர்கள், ஹெட்ஸ் அண்ட் ஷோல்டர்ஸ், பேண்டீன் போன்ற ஷாம்பு வகைகள், மற்றும் பிற காஸ்மெடிக் பொருட்களைத் தயாரித்து விற்கும் பி&ஜி நிறுவனம் வாஷிங் பவுடர், ஷாம்பு, காஸ்மெடிக்ஸ் மற்றும் பல் ஆரோக்கிய நுகர் பொருள் மீதான வரி 28%ல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டும் அதன் பயன்களை நுகர்வோருக்கு அளிக்கவில்லை.

ஆனால் பொருட்களின் அடிப்படை விலையை ஏற்றி பிறகு குறைந்த ஜிஎஸ்டி வரியை விதித்து பி&ஜி நிறுவனம் பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அதாவது ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கும் முன்னும் பின்னும் அதே எம்.ஆர்.பி.விலை இருக்குமாறு பொருட்களின் அடிப்படை விலைகளை நிறுவனம் ஏற்றி வரி குறைப்பு பயன்களை நுகர்வோருக்கு மறுத்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து விளக்கம் அளிப்போம் என்று பி&ஜி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்தால் லாபக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அமைப்பு எந்த நிறுவனத்தின் கணக்குகளையும் சோதனையிட முடியும். சோதனை செய்து அதனை தேசிய லாபக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரம் உள்ளது. தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் அந்த லாபத் தொகையை நுகர்வோருக்கு மீண்டும் அந்த நிறுவனம் அளிக்க வேண்டும் என்பதே விதி. நுகர்வோர்களை அடையாளம் காண முடியவில்லை எனில் இந்த கூடுதல் லாபத்தொகை மாநில மற்றும் மத்திய நுகர்வோர் சேமநல நிதியத்துக்குச் சென்று விடும்.

இப்படி நடப்பது முதல் முறையல்ல, கடந்த டிசம்பர் 2018-ல் இன்னொரு எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான ஹெச்.யு.எல். நிறுவனம் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பயன்களை நுகர்வோருக்கு அளிக்காமல் ரூ.535 கோடி கூடுதல் லாபம் ஈட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


;