அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை,மே 12- பள்ளிகளைத் திறந்து இரு வாரத்திற்குப் பின்னரே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழக அரசு ஜூன் 1 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடை பெறும் என அறிவித்துள்ளது. இந்தக் காலம் முழுவதும் தொடர்ந்து முற்றிலும் வேறான உளவியல் மற்றும் குடும்பச் சூழலில் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகையச் சூழல் வெவ்வேறு விதமான மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்கு தேர்வு எழுதும் மனநிலையை உருவாக்கிட வேண்டும். இம்மாத இறுதியிலும், ஜூன் மாதம் துவக்கத்திலும் கொரோனா நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் என பரவ லான கருத்து நிலவுகிறது. இச்சூழ்நிலை யில் மாணவர்களை தனிமனித இடை வெளியுடன் தேர்வு எழுத வைக்க என்ன ஏற்பாடுகள் அரசிடம் உள்ளது என்பதும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான போக்குவரத்து ஏற்பாடுகள் என்ன என்பதும் தெரியாத சூழ்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி தேர்வுகள் என்ற அறிவிப்பு பொருத்தமானதாக இருக்காது.
இதைக் கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இரு வாரங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு அதன் பிறகு பொதுத் தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும். பாடம் நடத்துவது என்ற நோக்கில் இல்லாமல், கல்வி பயில்வதற் கான மனநிலைக்கு மாணவர்களைக் கொண்டு வந்து தேர்வு எழுத வைப்பது என்ற நோக்கில் தமிழக அரசு இதை அணுக வேண்டும். தற்போதைய பணியமர்த்துதல் முறையில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அனைத்து உயர்கல்வி, பணியமர்த்தல் மற்றும் பணி உயர்வுகளுக்கு அடிப்படைக் கூறாக கணக்கில் கொள்ளப்படுகிறது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, அதற்கு உகந்த முறையில் பள்ளிகள் இயங்குவது, அதன் பிறகு தேர்வுகள் நடத்துவது என்கிற முறையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு திட்டமிட்டு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.