tamilnadu

img

அரசுப் பள்ளியை காப்பாற்றுவோம்...

ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்றுமுடி வெடுத்து விடுகிறார்கள். மூடுவ தற்குரிய காரணங்களைச் சொல்லாமல் அதை அவர்களால் செய்ய இயலாது. எனவே அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியலைத் தயாரிக்க அமர்கிறார்கள். தேநீர்க் கடைக்காரர் கலியனிடம் சர்க்கரை கம்மியாய் ஒரு கோப்பைத் தேநீரை வாங்கிப் பருகிக் கொண்டே அன்றைய தினசரியை அவர்கள் மேம்போக்காக மேயத் தொடங்கு கிறார்கள்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் ஏதோ ஒரு ஊரின் அரசுப் பள்ளி ஒன்று மூடப் பட்டதாக ஒரு செய்தி அதில் வந்திருக்கிறது. இப்போது அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்து விடும், ஒரு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் அந்தப் பள்ளியை மூடிவிடலாம். அவர்களிடம் அதிகாரம், ஆள்பலம் மற்றும் பணபலம் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்திப் பள்ளிக்குக் குழந்தைகளை வரவிடாமல் தடுக்க முடியுமா என்று யோசிக்கிறார்கள். எனவே பள்ளி வாளகத்திற்குள் இரவு வேளைகளில் நுழைந்து கூட்டமாக முது அருந்திவிட்டுக் காலி பாட்டில்களையும் இதரக் குப்பை களையும் அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடுவது.

சீட்டு விளையாடிவிட்டு சீட்டுக் கட்டுகளையும் கொண்டு சென்ற தின்பண்டங்களின் ஈவையும் காகிதக்குப்பைகளையும் அங்கேயே போட்டுவிட்டு வருவது. சுவற்றில் அசிங்க அசிங்கமாகக் கிறுக்கி வைத்துவிட்டு வருவது, பள்ளியில் அங்கங்கே அசுத்தம் செய்துவிட்டு வருவது. கூரையை, மேசை, டெஸ்க் மின்விசிறி உள்ளிட்ட தளவாடப் பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு வருதல் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் முகச்சுளிப்பைத் துவங்கி வைப்பது. இவை தொடருகிறபொழுது பள்ளிப் பிள்ளைகளுக்குப் பள்ளியின்மேல் ஒருவிதமான அவருவருப்பை ஏற்படச் செய்வது என்று தொடங்கி அந்தப் பள்ளி படிப்பதற்கு உகந்த  இடமல்ல என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவது. இவற்றின் மூலம் இந்தப் பள்ளி நம் பிள்ளைகளுக்கு ஏற்ற பள்ளி இல்லை என்பதைப் பெற்றோர்களிடம் ஏற்படுத்துவது. கொஞ்சம் கடன் பட்டாலும் பரவாயில்லை நல்ல தனியார் பள்ளிகளில் தமது குழந்தைகளைச் சேர்த்துவிட வேண்டும் என்ற மனநிலைக்கு அவர்களைத் தயார் படுத்துவது.

கல்விதருவது அரசின் பொறுப்பு என்பதிலிருந்து விலகி ஓட ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்ற குரூரசெயல்களைத் தொகுத்து ப்பார்ப்பதாக உள்ளது ஒருதரம்.... ரெண்டதரம்.... மூன்றுதரம்... என்ற நூல். இதிலுள்ள 15 கட்டுரைகளும் கல்வி மறுக்கப்படும் அவலத்தையும் தனியாருக்கு உடந்தையாக ஆட்சியாளர்கள் நிற்பதையும்  காட்டுகின்றன. தேசிய கல்விக் கொள்கைகளும் காவிக் கொள்கை அச்சுறுத்தும் தருணத்தில் விழிப்புணர்வுக்குக் கிடைத்துள்ள மேலும் ஒரு நல்ல நூல் இது.

ஒரு தரம்... ரெண்டு தரம்... மூன்று தரம்...
ஆசிரியர்: இரா.எட்வின், வெளியீடு: வெற்றிமொழி வெளியீட்டகம், எண்.29, முதல்தளம், கிழக்குரதவீதி
சகாய பேப்பர் ஸ்டோர்ஸ் அருகில்,திண்டுக்கல் - 624 001
பக்:110 விலை: ரூ.100/- தொலைபேசி: 0451 - 2424794

;