tamilnadu

img

அரசுப் பள்ளி காக்க சைக்கிள் பயணம்

சென்னை, மே 25 -அரசுப் பள்ளிகளை பாதுகாக்கக் கோரிசனிக்கிழமையன்று (மே 25) தமிழகத்தின்4 மையங்களில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சாரப் பயணம் எழுச்சியுடன் தொடங்கியது.அரசுப்பள்ளிகளை பாதுகாக்க நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்க வேண்டும், நவீன கல்விச்சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டம், கற்றல், கற்பித்தல் முறைகளில் மாற்றம்செய்ய வேண்டும்; கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைகுழுக்களை அமைக்க வேண்டும்;  அரசாணை 270ன்படி 20 மாணவர்களுக்கு ஒருகுடிநீர் குழாய், ஒரு கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்; தனியார் பள்ளிகளுக்கான மாணவர் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும்; மாசிலாமணி கமிட்டி பரிந்துரையை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசுப்பள்ளிகளை மூடும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சைக்கிள் பிரச்சாரம் நடைபெறுகிறது. சென்னை, கன்னியாகுமரி, கோவை,கடலூர் ஆகிய மையங்களில் இருந்து மே 25 அன்று தொடங்கிய இந்த பிரச்சாரம் மே 31 அன்று திருச்சியில் நிறைவடைகிறது.

சென்னை

சென்னையிலிருந்து மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமையிலான குழுவினரின் பிரச்சார பயண துவக்க நிகழ்ச்சி  தாம்பரத்தில் நடைபெற்றது. பிரச்சாரத்தை தொடங்கிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி பேசுகையில் “மத்தியஅரசு நடத்தும் கேந்திரிய பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. அதற்கிணையாக மாநில அரசு பள்ளிகளின் தரம்இல்லை. விஞ்ஞானப்பூர்வ கல்வி, ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சியும் அளிக்கவேண்டும். கல்வி தனியார்மயமானால் காசு சம்பாதிக்கலாம்; கல்வியாளர்களை உருவாக்க முடியாது. ஜிடிபி-யில் 6 விழுக்காடு ஒதுக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்” என்றார்.“நாட்டை இருள்சூழ்ந்துள்ளது. அதிலிருந்து கல்வியை மீட்க வேண்டும். சாதிய வர்க்க அடிப்படையிலான இந்தியகல்விமுறை மிகமோசமான ஏற்றத்தாழ்வுகளோடு உள்ளது. மேலைநாடுகளில் கூட அருகமைப்பள்ளி முறையுடன் கூட பொதுப்பள்ளிகள்தான் உள்ளன. எனவே, அரசுப்பள்ளிகளை தரமிக்கதாக மாற்ற வேண்டும். கேரளா, தில்லி அரசுகளைப் போன்று அதிக நிதிஒதுக்கி கல்வியை மேம்படுத்த வேண்டும்” என்று கல்வியாளர் வே.வசந்திதேவி கூறினார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்று திரைப்பட இயக்குநர் ப.ரஞ்சித் குறிப்பிடுகையில், “அரசுப்பள்ளிகளின் தரமும், சூழலும் பெற்றோர்களை தனியார் பள்ளி நோக்கி தள்ளுகிறது. மத்திய மாநில அரசுகள் கலை - இலக்கியத்தையும், கல்வியையும் மேம்படுத்த போதிய கவனம் செலுத்தவில்லை. ஓட்டு அரசியலைத் தவிரஏழை எளிய மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. மதுபானத் துறை வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள் அரசுப் பள்ளிகளை கண்டுகொள்வதில்லை. அரசுப்பள்ளிகள் குறித்த மக்களின் அச்சத்தை போக்குவோம்” என்றார்.மாணவர் சங்க முன்னாள் மாநிலச்செயலாளர் ஜி.செல்வா பேசுகையில், “கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை. அரசு நிர்ணயித்த தகுதிகளோடு அரசுப் பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். அரசு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட வேண்டும். சமூக நீதிஅடித்தளமுள்ள தமிழகம்  முயற்சித்தால் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழகம் மாறமுடியும்” என்றார்.

களியக்காவிளையில் எம்.ஏ.பேபி துவக்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சந்திப்பில் இருந்து துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணத்திற்கு மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பதில்சிங் வரவேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் சத்யாவிளக்கவுரையாற்றினார். கேரள மாநிலமுன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபிசைக்கிள் பிரச்சார பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர்கள் கன்னியாகுமரி ஜெசின் மதுரை மாநகர் ச.வேல் தேவா, விருதுநகர் ப.பிரசாந்த், தேனி த.நாகராஜ், இராமநாதபுரம் மூ,வசந்த், மாவட்ட தலைவர்கள் மதுரை புறநகர் பிருந்தா, தூத்துக்குடி ஜாய்சன் மற்றும்தோழமை இயக்க நிர்வாகிகள் பி.ராஜூ,சசிகுமார், கலைவாணன், ஆர்.செல்லசுவாமி, வி.அனந்தசேகர், குழித்துறை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஏ.எம்.வி.டெல்பின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சைக்கிள் பிரச்சார பயணத்திற்கு, குழித்துறை, சுவாமியார் மடம், தக்கலை, நாகர்கோவில் பகுதிகளில் பொதுமக்கள், ஆசிரியர்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை

கோயம்புத்தூரில் இருந்து துவங்கியசைக்கிள் பிரச்சாரத்திற்கு மாணவர் சங்கமாநில துணை தலைவர் நிருபன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டதலைவர் தினேஷ் வரவேற்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து சைக்கிள் பிரச்சார இயக்கத்தை இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர்வி.பி.சானு துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் கேரளாவில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வி குறித்துமிக அக்கறையோடு உள்ளனர். தமிழகத்தில் தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். மத்திய அரசுதமிழகத்திற்கு ஒதுக்கும் நிதியை காட்டிலும் குறைந்த நிதியே கேரளாவிற்கு ஒதுக்கப்படுகிறது. இருப்பினும் கேரள அரசு கல்விக்கு முன்னுரிமையளித்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி வருகிறது. இதன்காரணமாகத்தான் தனியார் பள்ளியில் இருந்து இந்த வருடம் 3 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி வந்துள்ளனர். அங்கு அரசுப் பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக உருவாக்கப்படுகிறது. நவீன வசதிகள்ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்திலோ தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும்வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடிய தமிழக அரசு, தற்போது மாணவர்களின் வருகை குறைவை காரணம் காட்டி மேலும் 3,500 பள்ளிகளை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் 5,300 அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பட வசதிகூட இல்லை. காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி கூட செய்து தரப்படவில்லை. எனவேதான் தமிழகத்தில் அரசுப்பள்ளியை பாதுகாக்க வேண்டும் என்கிற உன்னத கோரிக்கையை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் 1,500 கிலோ மீட்டர் சைக்கிள் பிரச்சார பயணத்தை துவக்கியுள்ளது” என்றார்.

இந்த சைக்கிள் பிரச்சார பயணம் காந்திபுரத்தில் துவங்கி, புலியகுளம், சௌரியபாளையம், சிங்காநல்லூர், சூலூர் வழியாக திருப்பூர் மாவட்டத் திற்கு சென்றடைந்தது. இந்த பிரச்சார பயண துவக்க நிகழ்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கடலூர் 

 கடலூரிலிருந்து திருச்சி நோக்கிச் செல்லும் பயணக்குழுவினரை  கடலூர் உழவர் சந்தை அருகே எழுத்தாளர்இமயம் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.பிரகாஷ், மாநில துணைத் தலைவர் எம்.கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சின்னதம்பி வரவேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினர். பிரச்சார பயணம் குழுவிற்கு  கடலூர் முதுநகர், ஆலப்பாக்கம், புதுச்சத்திரம், பி.முட்லூர், புவனகிரி, கீரப்பாளையம், சிதம்பரம், எம்ஜிஆர் சிலை உள் ளிட்ட பல்வேறு இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் இந்த சைக்கிள் பிரச்சார பயணத்தில் கலந்து கொண்டனர்.காவல்துறை அராஜகம்இந்த நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை என்று கூறி மேடையை காவல்துறையினர் பிரித்தெறிந்தனர். காவல்துறைஅராஜகத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தினரும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

களியக்காவிளையில் மாணவர் சங்க சைக்கிள் பயணத்தை கேரள முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறோம் 

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.  பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சைக்கிள் பயணம் நடத்துவது வரவேற்கத்தக்கது.  நான் அரசுப் பள்ளி மாணவன். தமிழ் வழியில் பயின்றவன். எனக்கு எந்த குறையும் இல்லை. பொறியியல்,மருத்துவம் படிக்க  அரசு கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். அரசு கல்லூரிகளில்படித்து வந்தவர்கள்தான் இன்று பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் இருக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்காக ரூ.29 ஆயிரம் கோடி அரசு செலவழிக்கின்றது. ஓவ்வொருமாணவருக்கும் 30 ஆயிரம் ரூபாய் செலவழிக்கின்றது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்களின் திறமையை அறிந்து அவர்களை ஊக்குவிக்கும் திறமைசாலிகளாக உள்ளனர்.என்னுடைய சக விஞ்ஞானிகள் 90 சதவிகிதம் பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான்.செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பலமுறை  முயற்சித்து முடியாமல் போனது. ஆனால், அரசு பள்ளியில் படித்த மாணவர்களானநாங்கள்தான் சாதித்து காட்டியிருக்கின்றோம். அடுத்த தலைமுறை குழந்தை நன்றாக வளர அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.அரசு பள்ளியில் பல தடைகளை கடந்து வந்தது எங்களுக்கு சாதிக்க உதவியது. அரசு பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால்தான்  தனியார் பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்படவேண்டும். அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என பெற்றோரை ஊக்குவிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்திய மாணவர் சங்கம்மேற்கொள்ளும் இந்த பயணம் நிச்சயம் வெற்றிபெறும். 

கோவையில் நடைபெற்ற நிகழ்வில்  விஞ்ஞானி  மயில்சாமி அண்ணாதுரை பேசியதிலிருந்து...