tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைய தொழிலாளர்கள் பங்கேற்பது அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை அமலானதற்கு பிறகு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசாங்கம் வேறு வேலைகளில் பிஸியாக இருக்கிறது. சுய தம்பட்டம் அடிப்பதிலும் சுய விளம்பரம் செய்துகொள்ளும் விழாக்களை நடத்துவதிலும் கொலைவெறியுடன் கூடிய மதவெறி - இனவெறி உணர்ச்சிகளை தூண்டும் நடவடிக்கைகளிலும் அது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பொருளாதாரத்தை மிகக்கடுமையான வீழ்ச்சிக்குள் தள்ளிவிட்டு, அதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல், கோடானு கோடி மக்களை துன்ப துயரத்தில் ஆழ்த்திவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான இந்தியர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகின்றன. வேலையின்மை அதிகரிக்க, அதிகரிக்க இந்திய மக்களின் துயரமும் அதிகரிக்கிறது. அதை வேறு சில புள்ளி விபரங்களும் உறுதிப்படுத்துகின்றன. 2018ஆம் ஆண்டில் நாட்டின் உண்மையான உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருந்தது. 2019ல் 5.2 சதவீதமாக அது வீழ்ச்சியடையும் என்று தெரிய வருகிறது. வேலையின்மை மற்றும் வளர்ச்சி குறைவு உள்ளிட்டவற்றின் காரணமாக விலைவாசி உயர்வு இன்னும் கடுமையாகும் என்று தெரிகிறது. 2018ல் நுகர்வோர் விலைவாசி அடிப்படையிலான பணவீக்கம் 3.9 சதவீதமாக இருந்தது. வரும் ஆண்டில் 4.2 சதவீதமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எமது மக்களுக்கு நீங்கள் சொன்ன நல்ல காலம் எங்கே பிரதமரே?

;