tamilnadu

img

இந்தியா உட்பட 5 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா கடந்த ஆண்டு, ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது. இதனை அடுத்து தனது நட்பு நாடுகளுக்கு ஈரான் உடன் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும், ஏற்கனவே மேற்கொண்டு வந்த எண்ணெய் வர்த்தகத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வர்த்தகத்தை தொடர்ந்தால், அந்த நாடுகள் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தது. 

இதைத் தொடர்ந்து, இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு 6 மாதங்கள் விலக்கு அளிப்பதாக அமெரிக்கா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. இதனை அடுத்து, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இத்தாலி, கிரீஸ், தைவான் உள்ளிட்ட நாடுகள் இறக்குமதியை நிறுத்தி விட்டன. 

ஆனால் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் இந்த மோசமான நிபந்தனையை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டன. இந்தியாவும் இறக்குமதியை கைவிட முடியாது என்று அறிவித்தது. அதே சமயம் அமெரிக்காவுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தது. 

மேலும், அமெரிக்கா அளித்த காலக்கெடு வரும் மே 3-ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து, இந்த விலக்கில் மாற்றம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. ஆனால் தற்போது இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி, சீனா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு, அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா தென் கொரியா, ஜப்பான், சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அளித்த தடை மேலும் தொடர வாய்ப்பில்லை. வரும் மே 3-ஆம் தேதிக்கு மேல் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும். இது குறித்த தகவலை அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்போ வெளியிடுவார்” என்று கூறப்பட்டுள்ளது.


;