அங்காரா
மேற்கு ஆசிய நாடான சிரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிகழ்ந்து வருகிறது. இந்த உள்நாட்டு போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியான இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் போராளிகள் குழுக்களுக்கு உதவுவது போலத் துருக்கி அரசு இட்லிப் மாகாணத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்படுவதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு ஆதாரமாக சிரிய எல்லைக்குள் துருக்கி தனது படைகளைக் குவித்தது.
இதனால் கோபம் கொண்ட சிரியா, ரஷ்யாவுடன் இணைந்து துருக்கி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் போராளிகளின் ஆதரவுடன் இருந்த இட்லிப் மாகாணத்தின் பாரா மற்றும் பிலியன் ஆகிய நகரங்களில் வெள்ளியன்று வான்வெளி தாக்குதல்கள் நடத்தியது. இந்த தாக்குதல்களில் துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் பலியாகினார்கள். தற்போது துருக்கி - சிரியா இடையே போர் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா உள்பட 29 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ குழுவில் உறுப்பினராக உள்ள துருக்கி இட்லிப் தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை நடத்த வேண்டும் என நேட்டோ அமைப்பிற்கு அழைப்பு விடுத்தது. துருக்கியின் வேண்டுகோளை ஏற்ற நேட்டோ வெள்ளியன்று இரவு பெல்ஜியத்தில் உள்ள தலைமையகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் நிறைவு பெற்ற இந்த நேட்டோ ஆலோசனைக் கூட்டத்தில் துருக்கிக்கு கூடுதல் படைகளை அனுப்பும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக ரஷ்யா - சிரியா தாக்குதலில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு அனுதாபங்கள் மற்றும் துருக்கியின் வான்பரப்பை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.