tamilnadu

img

இந்நாள் ஜுன் 25 இதற்கு முன்னால்

1960 - அமெரிக்க தேசியப் பாதுகாப்பு முகமையில்(என்எஸ்ஏ) சங்கேதச் செய்திகளை மொழிபெயர்ப்பவர்களாகப் பணியாற்றிய வில்லியம் மார்ட்டின், பெர்னான் மிட்ச்செல் ஆகியோர் விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ நோக்கிக் கிளம்பினர். மெக்சிகோவிலிருந்து ஹவானா(கியூபா) சென்று, அங்கிருந்து ரஷ்ய சரக்குக் கப்பலில் ரஷ்யா சென்ற இவர்கள், சோவியத் ஒன்றியத்திடம் தஞ்சம் புகுந்தனர். அமெரிக்காவின் என்எஸ்ஏவிலிருந்து எட்வர்ட் ஸ்நோடென் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்ததற்கு 53 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த இதுதான், என்எஸ்ஏ ஊழியர்கள் முதன்முதலில் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்த நிகழ்வாகும். விடுமுறைக்குச் சென்ற இவர்களிருவரும் திரும்பவில்லையென்றும், ‘இரும்புத் திரை(சோவியத்)’க்குப்பின்னே சென்றிருக்கலாம் என்றும் 1960 ஆகஸ்ட் 5இல் பெண்டகன்(அமெரிக்கப் பாதுகாப்புத் துறை) அறிவித்தது. செப்டம்பர் 6இல் செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கு முரணாக, அமெரிக்காவுடன் நல்லுறவு கொண்டிருக்கும் நாடுகள் உட்பட, சுமார் 40 நாடுகளின் தகவல் தொடர்புகளை வழிமறித்து அமெரிக்கா ஒட்டுக் கேட்பதாகக் குற்றம் சாட்டினர். 53 ஆண்டுகளுக்குப்பின் ஸ்நோடெனும் இவ்வாறான குற்றச்சாட்டுகளைக் கூறியது கவனிக்கத்தக்கது. பொதுவுடைமை நாடுகளின் அறிவியல், தொழில்நுட்ப, பண்பாட்டு முன்னேற்றங்களால் அமெரிக்கா அச்சமுற்றிருப்பதாகவும், அணு ஆயுதக்குறைப்பு குறித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டே, ‘முதல் தாக்குதல்’ நடத்தும் திறனுக்கான உற்பத்திகளைச் செய்வதாகவும் இருவரும் குற்றம் சாட்டினர். ‘முதல் தாக்குதல்’ என்பது, போர்ச்சூழலில், மற்றொரு அணு ஆயுத நாட்டின்மீது முதல் அணு ஆயுதத் தாக்குதலை நிகழ்த்தி, அந்நாடு திருப்பித்தாக்க முடியாமல் அதன் ஆயுதங்களை அழிப்பதைக் குறிக்கிறது. அணு ஆயுதப் போர் ஏற்படுவதைத் தவிர்க்க மாஸ்கோக்கு மட்டுமல்ல, நிலவுக்கே பயணிக்கத் தயாராயிருப்பதாகக்கூறிய அவர்களிருவரையும், தன்பாலினச் சேர்க்கையாளர்கள் என்றுகூறி அசிங்கப்படுத்தி பிரச்சனையைத் திசைதிருப்ப முயற்சித்தது அமெரிக்கா. பனிப்போர் காலத்தில் சுதந்திரத்தைத் தேடுவதாக சோவியத்திலிருந்து அமெரிக்காவிலும், போர்வெறிக்கெதிராக அமெரிக்காவிலிருந்து சோவியத்திலும் ஏராளமானவர்கள்  இவ்வாறு தஞ்சமடைந்தாலும்,  சோவியத்திலிருந்து வந்தவர்கள்பற்றிய செய்திகளைமட்டும் அமெரிக்கா பெரிய அளவில் பரப்பி, சோவியத்தில் மக்கள் சிரமப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தது என்பது தான் உண்மை!

;