tamilnadu

img

இந்நாள் ஜுலை 13 இதற்கு முன்னால்

1923 - திரைப்படத்துறையின் மிகப்புகழ்பெற்ற சின்னமான ‘ஹாலிவுட்’ சின்னம், லாஸ்ஏஞ்சல்சின் ஹாலிவுட் மலைகளிலுள்ள லீ குன்றில் திறக்கப்பட்டது. உண்மையில் அப்பகுதியில் வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்துகொண்டிருந்த உட்ரஃப், ஷோல்ட்ஸ் என்ற ரியல் எஸ்டேட் வணிகர்களே, விளம்பரத்திற்காக ஹாலிவுட்லேண்ட் என்ற பெயரை நிறுவினர். தான் உருவாக்கியிருந்த ஒய்ட்லி ஹைட்ஸ் என்ற இடத்தில் இவ்வாறு விளம்பரம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் வெற்றிபெற்றிருந்த எச்.ஜே.ஒய்ட்லி பரிந்துரைத்ததாலேயே அவர்கள் இந்த விளம்பரத்தை அமைத்தனர். உண்மையில் ஹாலிவுட்(லேண்ட்) என்ற பெயரைச் சூட்டியவரே இந்த ஒய்ட்லிதான் என்பதால், அவர் ஹாலிவுட்டின் தந்தை என்றழைக்கப்படுகிறார். 1886இல் இந்த மலைக்கு தேனிலவுக்காக ஒய்ட்லி வந்தபோது, அவ்வழியே வந்த சீனரை என்ன செய்கிறார் என்று விசாரித்திருக்கிறார். அவர் ‘ஐ ஹாலி(ஹாலிங்) வுட் (நான் (வண்டியில்) மரத்தை இழுத்துச்செல்கிறேன்)’ என்று பதிலளித்ததால், அந்த இடத்திற்கு ஹாலிவுட் என்றே ஒய்ட்லி பெயரிட்டதாகக் கூறப்படுகிறது. மூன்றுக்கு ஒன்பது அடி இரும்புத் தகடுகளைக்கொண்டு, ஒவ்வொன்றும் 30 அடி அகலமும், 50 அடி உயரமும் கொண்டதாக, 21,000 டாலர் (தற்போது சுமார் ரூ.2 கோடி!) செலவில் அமைக்கப்பட்ட இந்த விளம்பரம் நான்காயிரம் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது. 1932இல் பெக் எண்ட்விசில் என்ற 24 வயது நடிகை, இதன் எச் எழுத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றரை ஆண்டுகள்மட்டுமே இருப்பதற்காக அமைக்கப்பட்ட இது 55 ஆண்டுகளுக்கு நீடித்திருந்ததுடன். அப்பகுதியில் ஏற்பட்ட  திரைப்படத்துறையின் வளர்ச்சியால் அதன் அடையாளமாகவும் மாறியது. இதன் பராமரிப்பாளரின் கார்மோதி, எச் என்ற எழுத்து சிதைந்ததைத்தொடர்ந்து, 1949இல் சீரமைக்கப்பட்டபோது ‘லேண்ட்’ நீக்கப்பட்டு, ஹாலிவுட் ஆனது. 1970களில் இரண்டு எழுத்துகள் சிதைந்ததையடுத்து, ப்ளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர், இச்சின்னம் மீண்டும் அமைக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தினார். 1978இல் ஒவ்வொரு எழுத்துக்கும் 27,777.77 டாலர் வீதம் ஒன்பதுபேரிடம் நன்கொடை திரட்டி, இரண்டரை லட்சம் டாலர்(சுமார் ரூ.7 கோடி) செலவில், ஒவ்வொன்றும் 45 அடி உயரமும், 31லிருந்து 39 அடிவரை அகலமும் கொண்ட எழுத்துகளால் தற்போதைய ஹாலிவுட் சின்னம் அமைக்கப்பட்டது.  இதற்கு, ஹெலிகாப்டர் ரோந்து உட்பட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.