உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸை, 3வது இடத்திற்கு தள்ளியுள்ளார் பிரான்சின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்.
அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். இந்நிலையில் தற்போது, பிரான்சின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 2-வது இடத்தில் இருந்த பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம்பர்க் கூறியுள்ளது.
தற்போதும் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துகளுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துகளுடன் பெர்னார்ட் 2வது இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துகளுடன் பில்கேட்ஸ் 3வது இடத்திலும் உள்ளனர். பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பர்க் சுட்டிக்காட்டியுள்ளது.