tamilnadu

img

அமெரிக்காவில் மாபெரும் மருத்துவ காப்பீடு மோசடி!

அமெரிக்காவில் மருத்துவ பொது காப்பீட்டு துரையில் 100 கோடி டாலர் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. இந்த மோசடியில் 24 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள விவரம்: ''மருத்துவ பொதுக் காப்பீடு திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள உடலின் மற்ற பாகங்கள் தருவதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஈர்க்கப்பட்டனர்.

பிலிப்பைன்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கால்செண்டர்களில் இருந்து இயங்கும் ஒரு சர்வதேச டெலிமார்கெட்டிங் சந்தையின் மூலம் அவர்கள் ஈர்க்கப்பட்டனர்.

இதில் மோசடிக்காரர்கள் கையாண்ட நூதன உத்தி என்னவென்றால் பணத்திற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் நோயாளிகளை நேரடியாக சந்திக்காமலே தேவையான உறுப்புகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதுதான்.

இந்த மோசடி திட்டங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற வருமானம் முழுக்க முழுக்க சர்வதேச அளவில் நடத்தப்படும் ஷெல் கார்பரேஷன்ஸ் எனப்படும் போலி நிறுவனங்களால் சூறையாடப்பட்டன. இப்பெரும் தொகைகளின் மூலம் அமெரிக்காவிலும், வெளிநாட்டிலும் ஏராளமான ஆடம்பர பங்களாக்கள், விலை மதிப்புமிக்க கவர்ச்சியான கார்கள், உல்லாசக் கப்பல்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளனர்.

இவ்வகையான மோசடிகளின் மூலம் அமெரிக்காவில் இயங்கி வரும் மெடிக்கேர் காப்பீட்டு நிறுவனம் ஏற்கெனவே பெற்ற பில்களின் கணக்கே 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை (100 கோடியே 70 லட்சம் அமெரிக்க டாலர்கள்) எட்டிவிட்டது.

பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் டெலிமெடிசன் நிறுவன நிர்வாகிகள், மருத்துவ உபகரணக் கருவி தயாரிப்பு நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் மருத்துவர்கள் பலரும் இக்குற்றச்சாட்டில் இடம் பெற்றுள்ளனர்.

இத்திட்டங்களினால் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக 130 எலும்பியல் உபகரணங்கள் வழங்குபவர்களுக்கு எதிராக நிர்வாக அபராதங்களும் வழங்கப்பட்டன''. இவ்வாறு அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் புலனாய்வு அமைப்பான பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷனின் உதவி இயக்குநர் ராபர்ட் ஜான்சன் கூறுகையில், ''அமெரிக்க வரலாற்றில் ஒரு மாபெரும் ஹெல்த்கேர் மோசடித் திட்டம் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது'' என்றார்.

அமெரிக்க அரசின் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த அட்டார்னி ஷெர்ரி லிடன் கூறுகையில், ''நமது மெடிகேர் சிஸ்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோசடியின் விளைவாக, மருத்துவக் காப்பீட்டின் தொகை மேலும் உயரும். இதன் சுமையை வரிசெலுத்துவோர் தாங்கிக்கொள்ளும் நிலைமைதான் ஏற்படும்'' என்றார்.

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொது மருத்துவக் காப்பீட்டை வழங்குவதற்காக 1960-ஆம் ஆணடில் மெடிகேர் சிஸ்டம் தொடங்கப்பட்டது. இது பின்னர், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர்கள் என்று பெருகி 112 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் ஒரு அமைப்பாக விரிவடைந்துள்ளது.

ஆனால் இக்காப்பீட்டு முறையில் மறைமுகமாக மோசடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்காகவே 2007-ல் மெடிகேர் மோசடி தடுப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் பில் போடப்பட்டு மோசடி நடந்ததாக கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவிக்கிறது.


;