tamilnadu

img

அரசு அதிகாரிகள் துணையுடன் விற்பனையாகும் டாஸ்மாக் மதுபானங்கள்

விருதுநகர்: 
விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கையும் மீறி அரசு அதிகாரிகள் துணையுடன் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 176 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றை தடுத்திட ஊரடங்கு உத்தரவு தற்போது நிட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், சில அரசு மதுபானக் கடைகளில் கடையின் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஒன்றிணைந்து கடையை திறந்து மதுபானங்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதையடுத்து, திருவில்லிபுத்தூர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபானங்களை எடுத்து தனியர் திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 
அதேநேரத்தில் விருதுநகர் பேராலி சாலை, காமராஜர் பைபாஸ் சாலை, பேருந்து நிலையம், புல்லலக்கோட்டை சாலை மற்றும் விருதுநகரைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்கள் அகற்றப்படவில்லை. இங்கிருந்து, மதுபானங்கள் இரவு நேரங்களில் அரசு அதிகாரிகள் துணையுடன் எடுக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 115 ரூபாய் விலையுள்ள மதுபானம் ரூ.600 முதல் 800 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டத் தலைநகரான விருதுநகரில் மதுபானங்கள் கூடுதல் விலையில் தாராளமாக விற்கப்பட்டு வருகிறது. இதனால், மேலும் பல ஏழை எளிய குடும்பங்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள மதுபானங்களை அகற்றி சூலக்கரையில் உள்ள குடோனில் வைக்க வேண்டும். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி சட்ட விரோதமாக  மதுபான விற்பனைக்கு துணை போகும் உயர் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.