விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் உள்ள பட்டாசு ஆலைகள் வரும் ஏப்.,20 முதல் 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு இயக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது :
கிராமப் புறங்களில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப், 20 முதல் 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும். தொழிலாளர்கள் முகக் கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதற்கு முன்பாக, ஆலை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆலை நிர்வாகங்கள், நிபந்தனைகளை கடைப்படிக்கிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும், ராஜபாளையம் பகுதியில் 50 சதவீத பணியாளர்களுடன் மருத்துவ துணி, மருத்துவ உபகரணம் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஏப்., 20 முதல் 100 சதவீத தொழிலாளர்கள் மூலம் வேலை செய்யலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு கேரளாவில் இருந்து தீக்குச்சிகளும் மதுரை மாவட்டத்தில் இருந்து சிவப்பு பாஸ்பரசும் அனுப்பி வைக்க வருவாய்த்துறை செயலர் ஏற்பாடு செய்துள்ளார்.
விருதுநகரில் உணவு உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிவகாசியில் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளது. இந்த அச்சகங்களில் விதிமுறை பின்பற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.