கொல்கத்தா:
மம்தா பானர்ஜிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திரிணாமூல் காங்கிரசின் தொண்டர் ஒருவர் தனது மனைவியின் வாயிலேயே ஆசிட் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரசின் தீவிர ஆதரவாளர் ஒருவர், தன் மனைவி அன்சூரா பீபியையும், அதே கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், இதனை அவரது மனைவி ஏற்கவில்லை.
எனினும் விடாது வற்புறுத்தி வந்த அந்த நபர், மம்தாவுக்கு ஓட்டு போடவில்லை என்ற ஆத்திரத்தில் மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றியுள்ளார். மேலும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஆசிட் ஊற்றியதால் மோசமான காயங்கள் அடைந்த அன்சூரா பீபி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அன்சூராவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 48 மணி நேரத்துக்குப்பின்தான் எதுவும் கூறமுடியும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக, அன்சூரா பீபியின் மகன் ரூப்சன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ஓட்டுபோட்டுவிட்டு வந்தவுடனேயே, தனது தந்தையின் குடும்பத்தினர் தனது தாயை துன்புறுத்த ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தன் தந்தை தாயின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச்சென்று அடித்து, வாயில் ஆசிட் ஊற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.