கொல்கத்தா, செப். 10-
உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல் நலம் சற்று தேறி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பினார். வீட்டிலிருந்தபடி அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.
புத்ததேவ் பட்டாச்சார்யா வெள்ளிக்கிழமையன்று மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மருத்துவருமான டாக்டர் ஃபாடு ஹலீம் அறிவுரையின்பேரில் அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாநில செயலாளர் சூர்யகாந்த் மிஷ்ரா மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் முதலானவர்கள் பக்கத்தில் இருந்து அவரது உடல்நலம் குறித்து கவனித்து வந்தார்கள்.
புத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மருத்துவமனையை நோக்கித் திரண்டு வந்தார்கள். அவர்களிடம் கட்சித் தலைவர்கள், மருத்துவமனையை நோக்கி வந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பங்கம் விளைவித்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
திங்கள் கிழமையன்று காலை 11 மணியளவில் மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலம் நன்கு தேறி மூச்சுவிடுகிறார் என்றும், நிம்மதியாகத் தூங்குகிறார் என்றும், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு இயல்பானவைகளாக மாறிவிட்டன என்றும் எனினும் மேலும் சில தினங்களுக்கு மருத்துவர்களின் கவனம் தேவைப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் மாலை 2.45 மணியளவில் மருத்துவமனையிலிருந்து அவருடைய இரு அறைகள் கொண்ட இல்லத்திற்குத் திரும்பியுள்ளார்.
அவரது உடல்நலம் குறித்து டாக்டர் ஃபாடு ஹலீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா வீட்டில் தங்கவைக்கப்பட்டு மேலும் சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று கூறினார். புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இடது முன்னணி தலைவர் பிமன் பாசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனை வந்து விசாரித்தார்கள்.
(கொல்கத்தாவிலிருந்து சந்தீப் சக்ரவர்த்தி)