லட்சக்கணக்கான குழந்தைகள் வெயிலி லும் இருளிலும் பெற்றோர் கைகளைப் பிடித்தபடி தோள்களைத் தொற்றியபடி புலம் பெயர்ந்தவர்களாக சாலைகளில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவிலிருந்து மிகுந்த சிரமத்துக்குப் பிறகு தமிழகம் வந்து சேர்ந்த தொழிலாளர்கள் தோட்ட வேலைக்கும் சூளை வேலைக்கும் சென்ற ஊர்களில் இன்றும் ஒரு லட்சம் பேர் கர்நாடகாவில் குழந்தைகளோடு தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்கின்றனர். இது குறித்த எவ்வித அக்கறையும் அற்ற தமிழக அரசு ஜூன் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வினை அறிவித்துள்ளது.
கொரோனா பரவலால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோய் தொற்றாளர்கள் எழுபதுக்கும் மேற்பட்ட மரணங்கள் என தமிழகம் இப்பொழுதும் மோசமான சூழலிலேயே இருக்கிறது. இனிதான் தொற்று அதிகரிக்கும்; ஜூன் ஜூலை மாதங்களில் மிக மோசமான பாதிப்பை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும் என மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படியான அபாயகரமான சூழ்நிலையில் மாணவர்களை பள்ளிக்குத் தேர்வெழுத வரச் சொல்வது நியாயமா?
மாணவர்களும் உளவியல் அச்சமும்
உலகம் இதுவரை கண்டிராத நோயாக கோவிட் -19 தொற்று நோய் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். உலகமே இரண்டு மாதங்கள் ஊரடங்கில் இருப்பது இதுவே முதல் முறையென வரலாறு சொல்கிறது. உலகப் பொருளாதாரம், தொழில்கள், மக்கள் வாழ்க்கை அனைத்தும் மிகப் பெரிய தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. மக்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளிகளோ சாலைகளில் உயிருக்கான போராட்டத்தில் இருக்கிறார் கள். குழந்தைகள் இரண்டு மாதங்களாக வீட்டிற்குள் அடைந்து கிடைப்பதுடன் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய குழப்பத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள். பள்ளி, நண்பர்கள், விளையாட்டு என்றிருந்த அவர்க ளின் உலகம் முடக்கப்பட்டிருக்கிறது. அன்றாடம் செய்திக ளும் அரசின் எச்சரிக்கைகளும் அவர்களை வினோத மன நிலைக்குக் கொண்டு போய் இருக்கிறது. நோய்த் தொற்றுக்குள்ளான மாணவர்களை மட்டும் கணக் கெடுக்கும் அரசு நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் குறித்து கணக்கெடுக்கப் போவதில்லை.வீட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அம்மாவோ அப்பாவோ இருக்கிற குழந்தைகள் எப்படித் தேர்வெழுதும் மனநிலையில் இருப்பார்கள்? தமிழகத்தில் கடந்த 5 நாட்களுக்குள் 15-17 வயதிற்குட்பட்ட 40 குழந்தைகள் பாதிப்புக்குள்ளானவர்கள் எனில் கடந்த 2 மாதங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எத்தனை பேர் இருப்பர், பெற்றோர் எத்தனை பேர் இருப்பர்? அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் மனஉணர்வுகள் என்னவாக இருக்கும்?
இது குறித்த எந்த வித அறிவியல்பூர்வ ஆய்வோ அணுகுமுறையோ இந்த அரசிற்கு இருக்கிறதா? நோய் குறித்த பயமும் அன்றாடங்கள் முடங்கிப் போன சூழலும் குழந்தைகளிடம் உளவியல் ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்களும் மனநல நிபுணர்களும் அன்றாடம் பேசி வருகிறார்கள். மேலும் நிலைமை கட்டுக்குள் வந்து பள்ளிக்கூடங்கள் திறந்தாலுமே மாணவர்களின் மனநிலை கற்றலுக்குத் தயாராக இருக்காது. அவர்களுக்கு அச்சத்தைப் போக்கும் விதமான வகுப்புகளை மனநல நிபுணர்களின் துணை யோடு நடத்த வேண்டியிருக்குமெனத் தெரிகிறது. தொற்றுக் காலம் முடிந்த சாதாரண சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதே இவ்வளவு முன்னெச்சரிக்கைகள், உளவியல் தயாரிப்புகள் தேவைப்படும்போது; பொதுத் தேர்வு என்பதே அச்சுறுத்தலாக இருக்கும் நம் கல்வி முறை யில் உலகமே முடங்கி அச்சத்தோடு இருக்கும் இந்த நோய்த் தொற்றுக்காலத்தில் மாணவர்களைத் தேர்வெழுத வருமாறு நிர்ப்பந்திப்பதை விட வன்முறை என்ன இருக்க முடியும்?
அரசின் இந்த நடவடிக்கை மாணவர் எதிர்காலம் குறித்த அக்கறையல்ல. மாணவர்கள் மீது நடத்தும் தாக்குதல்.
கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்கள் நிலை
பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் முடங்கி அன்றாடத் தேவை களுக்காக கஷ்டப்படும் பெற்றோரோடு துயரமான சூழலில் நாட்களைக் கழித்து வருகின்றனர். இவர்கள் உரிய முறை யில் தேர்வுக்குத் தயாராகும் சூழல் குடும்பங்களில் இல்லை. இவர்களுக்கு எந்தப் பயிற்சியும் தேர்வுக்காக கொடுக்கப்பட வில்லை. தனியார் பள்ளி மாணவர்கள் போல் தொடர்ந்து பள்ளிச் சூழலோடும் பயிற்றுவிப்போடும் இந்த மாணவர்கள் இருக்கவில்லை. தொடர்பறுந்து போய் இருக்கின்றனர். பள்ளி திறந்து குறைந்தது ஒரு மாத கால இடைவெளி கொடுத்தால் மட்டுமே இவர்கள் தேர்வுக்குத் தயாராக முடியும்.மேலும் கிராமப்புற மலைவாழ் பகுதியில் உள்ள மாணவர்களுக்குத் தேர்வு குறித்தத் தகவலே இன்னும் போய் சேராத நிலையில் அவர்கள் தேர்வுக்கு தயாராக கால அவகாசம் இருக்கப்போவதில்லை என்பதை அரசு உணர வேண்டும்.
அனைவருக்கும் போக்குவரத்து வசதி சாத்தியமா?
ஆயிரக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் தாங்கள் படிக்கிற, வேலை செய்கிற ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கிறாரகள். பொதுப் போக்கு வரத்து துவக்கப்படாத நிலையில் அவர்கள் எப்படி பள்ளிக்கு வருவார்கள்? அரசு விதிப்படி இரண்டு பேர் மட்டுமே கார் போன்ற வாகனத்தில் வர முடியும். இரு சக்கர வாகன மென்றால் ஒருவர் மட்டுமே. இரண்டு மாதமாக வருமான மற்ற சூழலில் கார் வைத்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாண வர்கள் இப்போது பள்ளிக்குப் போக முடியுமா? ஆசிரி யர்களும் இதே சூழலில் தான் இருக்கின்றனர். அவர்கள் 15 ஆம் தேதிக்குள் தேர்வு அட்டவணையை அனைத்து மாணவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என சொல்வது அக்கிரமம். இப்படி இக்கட்டான நிலையில் மாணவர்களுக்கு எப்படி உரிய காலத்தில் அட்டவணை கிடைக்கும்? இப்படி வெளியூரில் இருப்போரின் போக்குவரத்து குறித்து அரசுக்கு எந்த திட்டமும் இல்லை.
பல மலைக்கிராமங்களில் சாலைகள் இல்லை. ஒரு ஊருக்கு ஒரு மாணவர் தேர்வெழுத வருகிறாரென்றால் எத்தனை பேருக்கு எத்தனை வாகனங்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது? மாணவர்களின் இருப்பிடம் குறித்து ஆசிரியர்கள் அறிந்து கொள்ளவும் பட்டியலிடவுமே நாட்கள் வேண்டும். அந்த அவகாசத்தை அரசு கொடுக்காத நிலையில் அனைவரையும் அழைத்து வருவது நடக்காத காரியம். பொதுப் போக்குவரத்தும் இல்லாத நிலையில் அவர்கள் விடுபடுவதற்கான வாய்ப்பே அதிகம் . ஆகவே இதனால் பாதிக்கப்படப் போவது ஏழை கிராமப்புற மற்றும் மலைப்பகுதி மாணவர்கள் தான். தேர்வெழுத விடாமல் அவர்களை வஞ்சிப்பது தான் அரசின் திட்டமா?
ஆசிரியர்கள் மீது சுமத்தப்படும் பளு
மாணவர்களிடம் தேர்வு குறித்த தகவலை கொண்டு சேர்ப்பதும் இருப்பிடங்கள் குறித்த கணக்கெடுப்பதும் ஆசிரியர்கள் வேலை எனச் சொல்லி கால அவகாசம் கொடுத்துள்ள அரசு அவர்கள் தம் ஊர்களில் இருந்து பணியிடம் திரும்ப அவகாசமோ பயண வசதியோ செய்து தரவில்லை.
மேலும் ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் எனும் போது கிட்டத்தட்ட 10 லட்சம் மாணவர்களுக்கு 1 லட்சம் தேர்வுக் கண்காணிப்பாளர்கள்; 1 லட்சம் அறைகள். 1 லட்சம் அறைகளில் பெரும்பாலான இடங்கள் நோய்த்தொற்றாளர்களைத் தங்க வைக்கப் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. ஆக அறைகளை சுத்தப்படுத்தும் பணியும் ஏக காலத்தில் நடக்க வேண்டும். மாவட்டக் கல்வித்துறை தேர்வு குறித்த செய்தியை மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். போக்குவரத்திற்கான பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். பள்ளிகள் தூய்மைப் படுத்தப்படுவதை உத்திரவாதப்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளர் உள்ளிட்டு கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் செய்ய வேண்டிய பணி. தலைமை ஆசிரியர் மற்றும் அந்தப் பகுதியிலேயே தங்கி இருக்கிற ஆசிரியர்கள் தான் பொறுப்பெடுக்க வேண்டும். இத்தனை பணியும் இவ்வளவு குறைவான காலத்தில் குறைவான ஆட்களைக் கொண்டு குளறுபடியில்லாமல் நடக்க காரிய சாத்தியம் இல்லை. ஆசிரியர்களுக்கு வேலைப்பளுவும் மாணவர்களுக்கு அலைக்கழிப்பும் மனஉளைச்சலுமே மிச்சம்.
ஏன் இந்த அவசரம்?
ஜூன் இறுதியில் தேர்வு குறித்து அறிவிக்கப்படும் என சொல்லியிருந்த அரசு தனியார் பள்ளி முதலாளிகள் மீதான விசுவாசத்தில், அவசர அவசரமாக மாணவர் நலனைக் கருத்தில் கொள்ளாமல் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்; 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்புப் படங்கள் துவங்கிப் பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும்; இவை நடக்க வேண்டுமெனில் தேர்வு விரைவாக நடத்தப் பட வேண்டும். தங்கள் வசூல் வேட்டைக்காக தனியார் கல்வி நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு அடிபணிந்து விட்ட அரசு, மாணவர் நலனை காற்றில் பறக்கவிட்டுள்ளது.
கோயம்பேடு வணிகர்கள் கடைகளை மூட ஒப்புக் கொள்ளவில்லை என, நோய் அதிகரிப்புக்குப் பின் அறிக்கை வெளியிட்ட முதல்வர், மாணவர்கள் பாதிக்கப் பட்ட பிறகு, தனியார் பள்ளிகள் தேர்வைத் தள்ளிப் போட ஒப்புக்கொள்ளவில்லை எனச் சொல்லப் போகிறாரா? அனைத்து மாணவர்களும் தேர்வெழுதும் வாய்ப்பினைப் பறிக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்துள்ள ஜூன் 1 ஆம் தேதி பொதுத் தேர்வு என்னும் அறிவிப்பினைத் திரும்பப் பெற வேண்டும். மாணவர்களின் உடல் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு, நோய் கட்டுப்பாட்டிற் குள் வந்த பின்பு தயாரிப்புக்கான உரிய கால அவகா சத்துடன் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் 18.05.2020 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளது.
கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்