விழுப்புரம், மே 18-கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படி நிபந்தனைகள் சரியாக உள்ளதா? என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல ஆயிரத்து, 83 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களில் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படி நிபந்தனைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்களில் மாணவர்கள் ஏறவும், இறங்குவதற்கும் ஒருவழி கதவு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா?, அவசரகால கதவு பொருத்தப்பட்டுள்ளதா?, வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, பள்ளி வாகனங்களின் முன், பின் பகுதிகளில் பள்ளி வாகனம் என்றும், வாகனத்தின் இடதுபுறத்தில் பள்ளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணும், வலதுபுறத்தில் பள்ளியின் பொறுப்பாளர் பெயர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம், இணையதள முகவரி, போலீஸ் நிலைய தொலைபேசி எண் ஆகியவை எழுதப்பட்டிருக்கிறதா? என்றும் ஆட்சியர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.