tamilnadu

img

பெண்களை ஏமாற்றி பணம், நகை பறித்த வாலிபர் கைது

திருவண்ணாமலை, ஆக. 28 - பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை பறித்து வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் அச்சுதன் (44). இவர் சிசி டிவி பொருத்துபவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டுக்குச் சென்று முறைப்படி பெண் பார்த்துள்ளார்.  பெண்ணின் பெற்றோர் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தனர். பிறகு செல்போனில் ஆசை வார்த்தை பேசி அந்த பெண்ணிடமிருந்து  ரூ.1 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்ட அச்சுதன், வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றாராம். இதற்கு சென்னையை சேர்ந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அச்சுதன், அவரை சரமாரியாக  அடித்து, உதைத்து அவரிடமிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை  பறித்துக் கொண்டாராம். ஊர் பொதுமக்கள் அந்த பெண்ணை  மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இதுகுறித்து கண்ணமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவான அச்சுதனை வியாழக்கிழமை (ஆக.27) இரவு அத்திமலைப்பட்டு கூட்டுச் சாலையில்  கைது செய்தனர். மேலும், குற்றவாளி அச்சுதன் வேலூர் சத்துவாச்சாரியில் சொந்தமாக சோலார் கம்பெனி வைத்து மாதம் ரூ.60 ஆயிரம்  சம்பாதிப்பதாகக் கூறி நாகர்கோவில் காசியைப் போல பல  பெண்களை அச்சுதன் ஏமாற்றியதும், அந்தப் பெண்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் மற்றும் நகைகளை பறித்ததும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.