விழுப்புரம்.ஏப்.26-விழுப்புரம் மாவட்டத்தில் 15 பேரூராட்சிகள் உள்ளன. அதில் புதுச்சேரி பகுதியை ஒட்டியுள்ளது கோட்டகுப்பம் பேரூராட்சி. இந்த பேரூராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிகளில் ஜியோ தனியார் கம்பெனி பைபர் ஆப்டிகல் கேபில் ஓயர்கள் அமைக்க 79 தெருக்களில் 396 ஏரியல் கம்பங்கள் நட வேண்டியுள்ளது.இதற்காக கோட்டகுப்பம் பேரூராட்சி நிர்வாகம் 11 நிபந்தனைகளுடன் ஜியோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், கம்பங்கள் நடும் ஜியோ நிர்வாகம் பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த 11 நிபந்தனைகளை மீறி தெருக்களில் உள்ள சைடு வாய்கால் களை உடைத்தும், அங்கு செல்லும் அரசு தொலைத் தொடர்பு துறை ஓயர்களை சேதப்படுத்தியும் கம்பங் களை அமைத்துக் கொண்டிருக்கின்றனர். இது சம்பந்தமான புகார்களை உரிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றாலும் பேரூராட்சி நிர்வாகம் அதில் கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது.இந்நிலையில், ஜியோ நிர்வாகமோ பிரச்சனை ஏற்படும் இடத்தை விட்டு விட்டு மீதி இடங்களில் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் உள்ள இடங்களில் பைப் நட பள்ளம் தோண்டுவதால் வீடுகளின் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, குடிநீர் குழாய் மற்றும் கழிவு நீர் குழாய்கள் உடைந்து கழிவு நீர் குடிநீரோடு கலந்து வரும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது.இந்த நிலைக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜியோ நிறுவனத்திற்கு மறைமுகமாக ஆதரவு தருவதாக பேரூராட்சி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால், ஜியோ கம்பெனியின் அப் பட்டமான விதி மீறலை சுட்டிக்காட்டி கோட்டகுப்பம் பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று கோட்ட குப்பம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நகரச் செயலாளர் ஏ.அன்சாரி தலைமையில் மனு அளித்தனர்.இந்த ஜியோ கம்பெனி கோட்டகுப்பம் பேரூராட்சியில் விதிகளை மீறி மீண்டும் பைபைர் கேபிள் அமைக்கும் பணியை தொடர்ந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக் களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.