tamilnadu

30 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத தலித் மக்களின் வீட்டு மனைகள்

விழுப்புரம், மார்ச் 5- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்குட்பட்டது தாமனூர் கிராமம். இங்கு உள்ள கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மக்கள் 37 பேருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நிலம் கையபடுத்தி,கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இலவசமாக மனைப் பட்டா வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து நில உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு, 2009 ல் நிலம் எடுப்பதை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் மைய நில எடுப்பு சட்டம் 1/1894 ன்படி 12 வார காலத்திற்குள் நில எடுப்பு விதி 4(1) ன் கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவில் அறிவுறுத்தியி ருந்தது. 11 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் மாநில நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பிய கோப்புகள் கிடப்பில் உள்ளதால் அதனால் அரசு வழங்கிய இலவச வீட்டு மனைப் பட்டா இருந்தும் அம்மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளருமான ச.கருப்பையா தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை மனுவை அளித்தனர்.அப்போது மாவட்ட தலைவர் என்.அமுல்சாமி, மாவட்ட மகளிர் அணி தலித் நதியா, மாவட்டச் செயலாளர் கரிச்சான், மாரியம்மாள், மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.