tamilnadu

img

விழுப்புரம்: சிறைச்சாலையில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி!  

விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் தேசியக்கொடி தலைகீழாக பறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிராமத்தில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டோர் சிறை கைதிகளாக இருந்து வருகின்றனர்.  இந்த நிலையில் வழக்கம்போல வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால் சிறைச்சாலை கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியவர்கள் கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளனர். இதனை சிறைக்காவலர்கள் கவனிக்காததால் வெகு நேரமாக தலைகீழாக பறந்து கொண்டிருந்த தேசியக்கொடியைப்  பார்த்து  அவ்வழியாக வந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

பின்னர் காவல்துறை அதிகாரிகள் தொடர்புகொண்டு சிறைச்சாலையில் உள்ள தேசியக்கொடியை அவசரமாக கீழே இறக்கி நேராக பறக்கவிட்டனர்.  சிறைச்சாலையில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றி பறக்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.