வேதாரணியம்:
வேதாரணியத்தில் அம்பேத்கரின் வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என அனைத்துக்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அத்துடன் விரைவாக அமைதிக் கூட்டம் நடத்தவும் வலியுறுத்தின.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணிய த்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை கடந்த 25ஆம் தேதி சமூகவிரோதிகளால் உடைத்து தகர்க்கப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் வலுவான எதிர்ப்பு உருவானது.இடதுசாரி இயக்கங்களும் தலித் இயக்கங்களும் தமிழகம் முழுவதும் உடனடி யான கண்டனப் போராட்டங்களை நடத்தின. தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் இந்த சிலை உடைப்பை வன்மையாக கண்டித்தார்கள்.வேதாரணியத்தில் சிலை உடைக்கப்பட்ட இடத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுவியது. இதைத்தொடர்ந்து அந்த வட்டாரத்தில் பதற்றம் ஓரளவு கட்டுக்குள் வந்தது.இந்நிலையில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்த மாவட்டத்தின் அனைத்து கட்சிக் குழுவினர் அம்பேத்கர் சிலையை வெண்கலச்சிலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
அமைதிக் கூட்டம்
அத்துடன் வேதாரணியம் பகுதியில் ஏற்பட்டுள்ள சமூக பதற்றத்தை தணிக்கும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்கும் அமைதி கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மகஜர் அளித்தனர்.இந்த அனைத்து கட்சிக்குழுவில் திமுக மாவட்டச் செயலாளர் என். கவுதமன்,திமுக சட்டமன்ற உறுப்பினர் உ. மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்டச் செயலாளர் சீனிவாசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ம.செ. சிந்தனைச்செல்வன், மண்டலச் செயலாளர் வேலு குணவேந்தன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி. சுபாஷ் சந்திரபோஸ் மாவட்டப்பொருளாளர் பி.ஏ.ஜி. சந்திரசேகரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். கோரிக்கைகளை உரியமுறையில் பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.